Tuesday, June 25, 2013

புதிய வரவுகள்

இன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்களிலும் இனி ஆங்கில வழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் அரசாங்க பள்ளிக்கூடங்களை நடத்த முடியும் என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில்,

இன்றைய பதிப்பகங்கள் கட்டுரை இலக்கியங்கள் என்பதை ஆதரிக்க முடியாத பட்டியலில் சேர்ந்து விட்ட போதிலும் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் மிக தைரியமாக தமிழ் மொழி குறித்த ஆவணத்தின் மொத்த தொகுப்பாக இந்த இரண்டு நூலையும் கொண்டு வந்துள்ளார்.. 

இந்த கட்டுரைகளுக்கு என் பாராட்டுரைகள்.
.
பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இளங்கோவன் அவர்களின் கட்டுரை களஞ்சியம் மற்றும் செவ்விலக்கிய சிந்தனைப் புதையல் என்ற இரண்டு நூல் வெளி வந்துள்ளது.

இன்றைய நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பது "ஓட்டத்தை நிறுத்தாதே. பின்னால் வருபவர்கள் முந்தி விடுவார்கள்".  

இதுவே தான் காலப்போக்கில் வாழ்க்கைக்காக "காசு என்பது மாறி காசுக்காகவே வாழ்க்கை" என்று நம்மை பணம் துரத்திப் பறவைகளாக மாற்றி விடுகின்றது.  ஆனால் இந்த புத்தகங்களை படிக்கும் போது நாம் எத்தனை விசயங்களை இழந்துருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

இன்று தமிழ் மொழி அறிவியலோடு போட்டி போட முடியாது.  ஆங்கிலம் மூலமே அறிவியலைக் கற்றுக் கொள்ள முடியும் என்று மனதில் வைத்திருக்கும் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் இந்த புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் இருப்பதை அழித்து விட்டு நாம் எங்கங்கோ தேடிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் இந்த புத்தகங்கள் உணர்த்துகின்றது. 

இன்று நினைத்த நேரத்தில் வலைபதிவில் உறவாடும் உறவுக் கூட்டத்திற்கு இந்த தமிழ் எழுத்துரு உருவான கதைகள்,யூனிக்கோடு என்பதை எங்கே அங்கீகரிக்கின்றார்கள்,வெளியே தெரியாத அதன் நடைமுறைகள் என்ன? எப்படி உருவாக்கினார்கள்? தமிழ் யூனிகோடு உருவாக்கப்பட்டதற்கும், இந்த முயற்சிகளை உருக்குலைக்க காரணமாக இருந்தவர்கள் போன்ற பலவித தகவல்களையும் அழகாக விவரித்துள்ளார்.  

நம்முடைய முந்தைய தமிழ்பரம்பரைகளைப் பற்றி எவரும் நினைப்பதே தவறு என்பதை விட அது எதற்கு தேவையில்லாமல்? என்கிற சூழ்நிலையில் இன்றைய கல்விச்சூழல் நம்மை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. தமிழ்மொழிக்கு பாடுபட்டவன் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதை கொத்துக்கறியாக்கி குற்றுயிரும் குலையுறுமாக மாற்றி இன்னமும் பலர் தங்கள் மாரை அவர்களே தட்டிக் கொண்டுருக்கின்றார்கள்.  

ஆனால் உருப்படியான கல்விச்சூழல் என்பது எப்படி உள்ளது என்பதை தான் அமெரிக்காவில் இளங்கோவன் பார்த்த ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வாயிலாக, அங்குள்ள அறிவுப்போட்டிகளை அழகாக பதிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் தெலுங்கிசையே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த சூழ்நிலையை 1967க்குப் பிறகு ஆட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் எப்படி செயல்பட்டார்கள்.  அதுவே தற்போதைய காலகட்டத்தில் எப்படி மாறிவிட்டது போன்ற நிகழ்கால உண்மைகளை நமக்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.  

தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கின்றது என்று சொல்கின்ற எவருமே அதன் வளர்ச்சி குறித்து, வளர வேண்டிய அவசியம் குறித்தே கருத்தில் கொள்ளாமல் கண்ட கருத்துக்களையும் வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று மொழிக்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு காசும் விரயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நிகழ் கால ஆடம்பர வாயிற் தோரணங்கள் மூலம் உதாரணம் காட்டி விளக்குகின்றார். 

இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ்மொழிக்காக கட்டும் நினைவு இல்லங்கள் ஒவ்வொன்றுமே தமிழ்மொழிக்கு கட்டப்படும் சமாதி என்பதாகத்தான் இருக்கின்றது என்பதை தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நடக்கும் அதிகார போட்டிகளை சுட்டிக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு நிதி ஆண்டும் மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் மொழி வளர்ச்சிக்கென குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றது.  ஒவ்வொரு மாநில அரசும் தனது நிர்வாகத்தில் பேரூராட்சி முதல் மாநகராட்சி வரைக்கும் கல்வி வரி என்று மூன்று சதவிகிதம் வசூலித்துக் கொண்டிருந்தாலும் அந்த பணமெல்லாம் ஒவ்வொரு ஆட்சியிலும் மாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது. 

ஆனால் இன்று தமிழ்மொழியை வளர்க்கின்றோம் என்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்து முதல் அதன் மூலம் எப்படி காசு பார்க்கலாம் என்கிற கும்பல் வரைக்கும் அதன் ரூபங்களை வெட்டவெளிச்சமாக்கி உள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற 90 சதவிகித ஆசிரியர்கள் அத்தனை பேர்களும் அரசு பள்ளியில் பணிபுரிந்தவர்களே.  ஆங்கிலவழிக்கல்விக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறமை அந்த அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டு அரசு இதனைக்கூட பெருமையாக வெளிப்படையாக சொல்லிக் கொள்ள விரும்பாத நிலையில் தான் இருக்கின்றது. ஒரு வேளை மக்களின் பெரும்பான்மையான விருப்பமே மகேசனின் விருப்பமாக இருக்கக்கூடுமோ?

பூம்புகார் அகழ்வராய்ச்சி என்பது ஒரு பெரிய பூதம் போன்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  ஆனால் இங்கு செய்யப்பட்ட எந்த ஆராய்ச்சிகளும் வெளிவருவதில்லை என்பதோடு இது சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் மேலே இருப்பவர்கள் ஊக்குவிப்பதில்லை.  

இது சார்ந்த பெரும்பாலான கொள்கைரீதியான முடிவுகள் இன்னமும் மத்திய அரசாங்கத்திடமே இருப்பதால் இது போன்ற விபரங்கள் குறித்து தெரிந்தவர்களும் குறைவு.  தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களும் இல்லை என்கிற ரீதியில் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சித் துறை இறுதி கட்ட மூச்சில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. 

மக்களும் பிழைத்தே ஆக வேண்டிய அவசியத்தில் பிழைப்பு வாதியாக மாறிப் போய்விட்டதால் சரித்திரச் சான்றுகள் என்பது ஆதரவற்று அழிந்து கொண்டேயிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தங்கள் தாய் மொழி குறித்த சிந்தனைகளும் மாறிக் கொண்டே வருகின்றது.. 

நடுத்தரவர்க்கத்திற்கு இன்று உடனடித் தேவை ஒரு வேலை.  அந்த வேலையின் மூலம் கிடைக்கப் போகும் வருமானம்.  

அதற்கு இப்போதைய சூழ்நிலையில் ஆங்கிலம் தான் உதவுவதாக இங்கே நம்பவைக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரங்களை எவரும் நம்பத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.

வருடந்தோறும் பத்துலட்சம் பேர்கள் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து வெளியே வருபவர்களில் எத்தனை பேர்களால் போட்டியில் ஜெயித்து தங்களை தகுதியான பதவியில் நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது என்பது குறித்து எவரும் அக்கறைப்பட்டுக் கொள்ளவதில்லை.  விரும்பும் ஆங்கிலத்தில் படித்து வருபவனுக்கு ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பேச முடிவதில்லை. கற்றுக் கொடுப்பவனுக்கும், கற்றுக் கொள்பவனுக்கு இந்த ஆங்கிலம் இன்றும் சவாலாக இருப்பதால் மணற் கொள்ளையரை, சாராய வியாபாரிகளை, கடத்தல் பேர்வழிகளை இன்று கல்வித் தந்தையாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை பேர்கள் பத்தாவது முடித்து பனிரெண்டாம் வகுப்பு சென்றார்கள். அதில் எத்தனை பேர்கள் கல்லூரி சென்றார்கள் போன்ற எந்த கணக்கு வழக்கும் இங்கே இல்லை.  இறுதியாக எத்தனை பேர்கள் சரியான வேலைக்குச் சென்றார்கள்?

கல்வி மட்டுமல்ல. நம் நாட்டில் எந்த துறை சார்ந்தும் உருப்படியான கணக்கு வழக்கு என்பதே இல்லை. ஒரு வேளை நீங்கள் கேட்டால் கொடுப்பார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்பது சந்தேகமே.

பிழைக்கவே கல்வி என்று மாறிப்போன இன்றைய சூழ்நிலையில் கடைசியில் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளாமல், கற்று வைத்திருந்த தமிழும் மறந்து அறைகுறையாகிப் போனவர்களால் இன்று தமிழ்நாடு அறிவாளியாக மாறிக் கொண்டேயிருக்கிறது. .  

தாய்மொழி குறித்த அக்கறையில்லாதவர்கள் ஆட்சியாளர்களாக வர, தினசரி வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் நாள்பட இந்த மொழி குறித்த எண்ணம் மாறிக் கொண்டேயிருக்க அழியப்போகும் மொழிப்பட்டியலில் இந்த தமிழும் வந்து விடுமோ என்கிற நிலையில் இளங்கோவன் எழுதியுள்ள இந்த நூல்கள் தமிழுக்கு வந்துள்ள பொக்கிஷத்தில்  ஒன்று.

இன்று தமிழ் இலக்கியம் படித்தால் இன்று விற்கின்ற விலையில் ஒரு இட்லி கூட வாங்கி சாப்பிட வருமானம் கிடைக்காது என்று ஆசிரியர்களே தங்களுடைய மாணவர்களுக்கு சொல்லும் அளவுக்கு நம் மொழியை நாமே பெருமையாய் பார்க்கின்றோம்.  

ஆனால் தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தானே காத்துக் கொண்டு ஒரு சில அறிஞர்களின் துணை கொண்டு இத்தனை ஆண்டு காலம் இன்னமும் பேச்சு மொழி, எழுத்து மொழியாக இருப்பதே மகத்தான சாதனை தான் என்பதை தான் முனைவர் மு இளங்கோவன் போன்றவர்களின் தளராத முயற்சி நமக்கு உணர்த்துகின்றது. 

ஆசிரியர் தொடர்பு எண்  94420 29 053

ஆசிரியர் மின் அஞ்சல் முகவரி muelangovan@gmail.com

நூலாசிரியரின் பிற நூல்கள்

1. பாரதிதாசன் பரம்பரை
2. வாய்மொழி இலக்கியம்
3.நாட்டுப்புறவியல்
4. இணையம் கற்போம்
5. மணல்மேட்டு மழலைகள்
6. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
7. பழையன புகுதலும்...........
8. அரங்கேறும் சிலம்புகள்
9. பொன்னி ஆசிரிய உரைகள்
10. பொன்னி பாரதிதாசன் பரம்பரை
11. இலக்கியம் அன்றும் இன்றும்
12. விடுதலைப் போராட்ட வீரர் வெ.துறையனார் அவர்கள்.
13. மாணவராற்றுப்படை
14. அச்சக ஆற்றுப்படை
15. பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு

11 comments:

Avargal Unmaigal said...

முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பகிர்வுக்கு நன்றி ஜோதிஜி

திண்டுக்கல் தனபாலன் said...

மாநிலத்தில்...

மாவட்டத்தில்...

அவரவர் பள்ளியில்....

10 / +2 முதலிடம் வந்தவர்களின் இன்றைய நிலையை யாராவது ஒருவர் கணக்கு எடுத்து சொல்லுங்கப்பா...

திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

indrayavanam.blogspot.com said...

முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்

saidaiazeez.blogspot.in said...

1697 ஐ
1967 என்று மாற்றுங்கள் ஜோதிஜி

எம்.ஞானசேகரன் said...

சிந்திக்க வேண்டிய பதிவு! முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

என் நண்பர் அடிக்கடி சொல்வார். உங்க பதிவுகளை பலரும் ஸ்கோரல் செய்து விட்டு போய்விடுவார்கள் என்பார்கள். ஆனால் உங்களைப் போன்ற பலரையும் நான் நட்பு வட்டத்தில் வைத்திருப்பதால் தான் வரிக்கு வரி வாசிக்கும் பாக்யவான்களை பெற்றுள்ளேன். நன்றி அஜிஸ். இன்று வெளியிட்ட இந்த பதிவை படித்து விட்டு உடனடியாக ஆசிரியரை தொடர்பு கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

ஜோதிஜி said...

நன்றி நண்பா

ஜோதிஜி said...

நீங்களும் நானும் சேர்ந்து செய்தால் தான் உண்டு தனபால்

ஜோதிஜி said...

சொல்லிவிடுகின்றேன். உங்கள் சார்பாக.

ஜோதிஜி said...

தொடர்ந்து எழுத நேரம் கிடைக்குது போல. கலக்குங்க.

எஸ் சம்பத் said...

விமர்சனம்,அணிந்துரை,மதிப்புரை போன்றவை அமையும் நடையிலேயே அந்த புத்தகத்தை நாமும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக அமைய வேண்டும். அந்த வகையில் உங்கள் விமர்சனம் மிகச் சிறப்பு ஜோதி