Monday, June 30, 2014

அமுதவன் (இரண்டு) புத்தகங்கள் - அறிமுகம்

சில பதிவுகளுக்கு முன் எழுத்தாளர் அமுதவன் எழுதிய இரண்டு புத்தகங்கள் என் வாசிப்பில் உள்ளதாக அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் வேலைப்பளூ அதிகமென்றாலும் நிச்சயம் இது போன்ற புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தே ஆக வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு. 

சர்க்கரை நோய்..... பயம் வேண்டாம்! ( விலை ரூபாய் 55.00) 


நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி. (விலை ரூபாய் 100) 


அமுதவன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னால் அமுதவன் எழுதிய பதிவின் மூலம் ரெய்கி என்ற சொல் எனக்கு அறிமுகம் ஆனது. பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக்கூட விடாமல் படிக்கும் எனக்கு மருத்துவ உலகத்தைப் பற்றி, அதன் பல்வேறு கூறுகளைப் பற்றி, மாற்று மருத்துவங்கள் குறித்து எழுத்தாளர் அமுதவன் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகே எனக்குத் தெரிய வந்தது. 

அவர் பதிவில் எழுதப்பட்ட ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க வியப்பாகவே இருந்தது. 

ரெய்கி என்ற புத்தகத்தைப் படித்தவுடன் ஆசான் தான் என் நினைவுக்கு வந்தார். அவருடன் சேர்ந்து சில நாட்கள் சுற்றிய போது அவர் உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினந்தோறும் செய்ய வேண்டிய யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் அவர் மூலம் கேட்டறிந்த எனக்கு இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பலதரப்பட்ட அனுபவங்கள், விளக்கங்கள் என் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது. 

நாம் மாற்று மருத்துவங்களைக் குறித்து யோசித்தாலும், பேசினாலும் நம்மோடு இருப்பவர்களே நம்மைக் கிறுக்கன் என்று சொல்லிவிடக்கூடிய ஆபத்துள்ளது. 

அந்த அளவுக்கு மக்கள் நாகரிக மோகத்தில் இருக்கின்றார்கள். தற்போதைய சூழலில் ஒரு தலைவலிக்கு 5000 ரூபாய் செலவளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். சாதாரணத் தலைவலி முதல் தொடர்ச்சியாக நம்மைத் தாக்கும் ஒற்றைத்தலை வலி வரைக்கும் எளிய பயிற்சிகள் மூலம் எந்த அளவுக்கு நாம் நிரந்தர ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளார். 

ரெய்கி என்ற புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்துப் பாருங்கள். 

உங்களுக்கே உங்களுக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். உடம்புக்குள் இருக்கும் சக்தியை எவ்வாறு பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைக்க முடியும்? என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நம்முடைய நம்பிக்கை தான் நமக்கு முதல் ஆதாரம். மற்ற மருத்துவ முறைகள் எல்லாமே அதற்குப் பிறகு தான் என்பதனை நீங்கள் தீர்மானமாக நம்பத் தொடங்குவீர்கள். 

ஆனால் நிச்சயம் தற்போதைய சூழ்நிலையில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் சர்க்கரை நோய். பயம் வேண்டாம்


எங்கள் குடும்பத்தில் அப்பாவுக்குச் சர்க்கரை நோய் இருந்தது. ஊரில் வசிக்கும் அம்மாவுக்கும் உள்ளது. இரண்டு சகோதரர்களுக்கு இருக்கின்றது. பரம்பரை நோய் என்று சொல்லப்படுகின்ற இந்த நோய் ( நோய் என்று கூடச் சொல்லக்கூடாது. பற்றாக்குறை என்று தான் சொல்ல வேண்டும்) எனக்கில்லை. 

காரணம் நான் உணவு முதல் மற்ற பழக்கவழக்கங்கள் வரைக்கும் தீர்மானமாக உருவாக்கிக் கொண்டு பாதைகள் தான் என்னை இன்று வரையிலும் பெருந்தீனி திங்கிற வட்டத்திற்குச் செயலாளராக மாற்றியுள்ளது. தினந்தோறும் வீட்டில் மனைவியின் கேள்விக்கணைகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் போடும்மா என்று கெஞ்ச வைத்துக் கொண்டிருக்கின்றது. 

ஆனால் தீனியில் ஆர்வமிருப்பவர்கள் அதைச் செறித்துச் சத்தாக மாற்றும் கடின வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையிலும் உணவே மருந்து. ஆனால் உங்கள் உடம்புக்கு ஏற்ற உணவு முறைகள் தான் மருந்தாக இருக்க முடியும். இல்லாவிட்டால் அதுவே விஷமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 

அமுதவன் பல இடங்களில் தடவி கொடுக்கின்றார். சில இடங்களில் அறிவுரையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி மிரட்டாமல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார். உங்கள் பழக்கவழக்கங்கள் தான் உங்கள் ஆரோக்கியத்தின் முதல்படி என்கிறார். பழக்கவழக்கங்கள் மாறும் போது இப்படித்தான் உங்கள் உடம்பில் ரசாயன மாற்றங்கள் உருவாகும் என்பதனை ஒரு மருத்துவர் போல எளிய முறையில் சொல்லிச் செல்கின்றார். 

இதில் குறிப்பிடவேண்டிய மற்றொரு அற்புதமான அம்சம் என்னவென்றால் அவரது அனுபவங்கள் சார்ந்த பல விசயங்களை அங்கங்கே சொல்லிச் செல்கின்றார். மக்களின் மனோபாவம், மாற்று மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை, பணத்திற்கு ஆசைப்படாமல் இருந்தாலும் மக்கள் காட்டும் அலட்சிய மனப்பான்மை, குணமாகிச் சென்றாலும் அதை அடுத்தவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க மனமில்லாமல் வாழும் ஆட்டு மந்தைக்கூட்டம் என்று ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு சுய அனுபவங்களை கொடுத்துள்ளார். 

தற்போது எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் வாங்கும் கட்டணம் 100 ரூபாய் என்கிற நிலையில் தான் உள்ளது. அவரே நடத்திக் கொண்டிருக்கும் மருந்தகங்களில் தான் மருந்து மாத்திரை வாங்க முடியும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் 500 ரூபாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். 

ஆனால் அமுதவன் தான் சொல்ல நினைதத அத்தனை விளக்கங்களையும் 55 ரூபாயில் சொல்லிவிடுகின்றார். சித்த மருத்துவம் குறித்து நான் எழுதிய பழைய பதிவை படித்து விட்டு ஒரு மருத்து நண்பர் அழைத்து நீண்ட நேரம் பேசினார். மற்றொரு நண்பரும் அழைத்துத் தவறு செய்யாதீர்கள் என்று அன்போடு எச்சரித்தார். 

காரணம் இன்றைய சூழ்நிலையில் சித்த மருத்துவம் என்றாலே ஆண்களுக்கு ஆண்குறி சம்மந்தபட்டதற்கு மட்டுமே என்று சந்து டாக்டர்கள் சிந்து பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பயமுறுத்தல்கள் தான் அவர்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பல ஆண்களுக்குப் பணத்தையும் இழந்து தூக்கம் போன இரவாக முடிந்து போய்விடுகின்றது. 

ஆனால் அமுதவன் தெளிவாக ஆணித்தரமாகச் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். 

எதற்காகவும் பயப்படாதீர்கள். மலக்குடலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். தினந்தோறும் எளிய உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றுக்கும் ஆங்கில மருத்துவம் மட்டும் தான் அருமருந்து என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாற்று மருத்துவத்தில் ஒரு முறையாவது முயற்சி செய்து பாருங்கள். சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் எந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள். 

இவ்வாறு சொல்லும் போது ஆங்கில மருத்துவப் பிரியர்கள் ரவுண்டு கட்டி அடிக்க வரக்கூடும். போலியோ, தட்டம்மை, மலேரியா போன்ற கொள்ளை நோய்களை உதாரணம் காட்டி உதைக்க வருவார்கள். கவனமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நோய்களுக்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல். புகைக்குள் வாழ்ந்து கொண்டு, புழுதியில் புரண்டு கொண்டு வாழ்பவர்களை அரவணைத்து ஆறுதல்படுத்தி நம்மை நம்ப வைத்துக் கொண்டிருப்பது பல வண்ண நிற மாத்திரைகளே. 

பல நோய்களுக்கு இன்று வரையிலும் உறுதியான தீர்வு கிடைக்காத போதும் கூட அது தான் பலருக்கும் அருமருந்தாக உள்ளது. இன்று ஆங்கில மருத்துவம் என்பது மனித வாழ்க்கையில் சாதிக்க முடியாத சாதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்ற போதிலும் ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. சில நோய்களுக்குத் தீர்மானமான முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணம் இந்த வர்த்தகப் போட்டியே என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்? 

இந்த நூல் நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரேய்கி, பிராணிக் ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளைக் குறைத்து பக்க விளைவுகள் இன்றிச் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றும் நம்பிக்கை ஊட்டுகின்றது. 

உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால் மகிழ்ச்சி. வந்து விடுமோ? என்ற பயத்தில் இருப்பவரா? உங்களுடன் பழகுபவர்கள் கதை, திரைக்கதை, வசனத்தை எடுத்து விடுகின்றார்களா? 

ஒரு முறை இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க அழைக்கின்றேன். காரணம் உங்கள் உடலைப்பற்றி, உடல் இயக்க செயல்பாடுகளைப் பற்றி, ஒரு மருத்துவர் சொல்ல வேண்டிய விசயங்கள் என அனைத்தையும் வாஞ்சையோடு பயமுறுத்தல் இல்லாமல் உங்களுக்குப் புரிய வைக்கும். 

புரிந்தவர்களும், புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களும் புண்ணியவான்களே. 

தொடர்புடைய பதிவுகள்

Saturday, June 28, 2014

10 கேள்விகள்


பத்துக் கேள்விகள் கொடுத்து பல நண்பர்கள் தொடர் பதிவு என்ற வலைக்குள் என்னையும் சேர்ந்து இருந்தார்கள். அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்? 

நான் அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். தாத்தா (அப்பாவின் அப்பா) பழைய வீட்டில் இருந்தார். நாங்கள் ஊருக்குள் அப்போது கட்டியிருந்த புது வீட்டில் இருந்தோம். தாத்தாவிற்குத் தினந்தோறும் இனிப்பு மற்றும் கார வகைகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியது என் பொறுப்பாக இருந்தது. ஒரு தடவை நான் சென்ற போது அவருக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த நாட்டு வைத்தியர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்தேன். "டாக்டர் இப்பவெல்லாம் என்னால் சாப்பிடவே முடியவில்லை" என்று அங்கலாய்ப்புடன் சொல்லிக் கொண்டே சூடான பதினெட்டாவது இட்லியை தாத்தா உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். 

கூடவே அம்மியில் அரைத்த மிளகாய், செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய் சேர்த்து குழப்பி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். மருத்துவர் சிரித்துக் கொண்டே வெளியே சென்ற காட்சி இன்று மனதில் நிழலாடுகின்றது. அப்போது தாத்தாவின் வயது 84. அதே போல அப்பா இறந்த போது வயது 69. அப்பனுக்குத் தப்பாத பிள்ளை போலத்தான் இருந்தார். சாப்பாடு மேல் தீரா ஆர்வம் கொண்ட எனக்கும் இவர்களைப் போல வாழ்ந்து விடத்தான் ஆசை. ஆனால் கடந்த 14 வருடங்களாக உணவு முதல் என் அனைத்து பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி மருந்துவம் தேவைப்படாத ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றேன்.

'பதின்ம வயதை' வளரும் குழந்தைகளுக்கு பிரச்சனையான காலம் என்கிறார்கள். இதைப் போலவே ஒவ்வொரு ஆணுக்கும் 40 வயதின் தொடக்கமும் பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பது கண்கூடு.  புதிய காதல் தோன்றும். விரும்பாத பழக்கங்கள் அறிமுகமாகும். பதவி, பணம் பொறுத்து இன்னும் பலதும் வாழ்க்கையில் அறிமுகமாகும். ஆனால் இவையெல்லாம் தாண்டி வந்த போதிலும் உணவில் அதிக ஆர்வம் செலுத்தும் எனக்கு உடம்பு ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

மனம் ஆசைப்படாலும் 'வேண்டான்டா மகனே' என்று எச்சரிக்கும் போது ஏன் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று தோன்றுகின்றது.  இன்னும் ஏராளமாய் அடக்க வேண்டியது உன் பட்டியலில் உள்ளது என்று மனம் சொல்ல ஆசை மட்டும் எல்லையைத் தாண்டிச் செல்வேன் என்று பிடிவாதம் பிடிக்க நான் வாழும் ஒவ்வொரு நாளும் ரணகளமாகத்தான் போய்க் கொண்டேயிருக்கின்றது. மனைவி என்னை குழந்தை போல பாதுகாக்க நான் பிடிவாதம் பிடிக்க சாப்பாடு வகைகள் 'சப்பென்று' தான் இருக்கின்றது.

நூறு வயது என்பது தேவையில்லாத ஒன்று. நாற்பது வயதை தாண்டும் போதே பல உறுப்புகள் அடம் பிடிக்கத் தொடங்குகின்றது. ஒவ்வொன்றையும் அடக்கு அடக்கு என்று எச்சரிக்கின்றது. விரும்பியவற்றை உண்ண முடியவில்லை. வேடிக்கை பார்க்கும் சூழ்நிலையில் தான் வாழ வேண்டியதாக இருக்கின்றது. 

அறுபது வயது கடந்தவுடன் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல காரியங்களின் மூலம் கிடைத்த வெகுமதியாகத்தான் இருக்கும் என்றே கருதுகின்றேன். நாம் வாழும் வாழ்ககை என்பது வயதோடு சம்மந்தப்பட்டது அல்ல என்பதை உறுதியாக நம்புகின்றேன். வாழும் வரையிலும் மனைவிக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், காட்ட வேண்டிய அக்கறையை சரியான முறையில் நிறைவேற்றி காட்டி விட்டாலே போதும் என்றே நினைக்கின்றேன்.

தாத்தவும், அப்பாவும் நொடிப் பொழுதில் இறந்து போனார்கள். இறக்கும் வரையிலும் விரும்பியபடி உண்டு, விருப்பப்படி வாழ்ந்து விட வேண்டும் என்று விரும்புகின்றேன். 

ஏதோவொரு நாளில் தாத்தா, அப்பாவுக்கு அமைந்தது போல அப்படியான மரணம் அமைந்து விட வேண்டும் என்றே விரும்புகின்றேன். 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 

இந்தியாவில் உள்ள வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளுக்குச் சென்று வர விரும்புகின்றேன். அவர்களின் கலாச்சாரம், மொழி, வாழ்க்கைத்தரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகளில் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது என்பதைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். 

3.கடைசியாகச் சிரித்தது எப்போது? எதற்காக? 

கடைசி என்ற வார்த்தையே தவறு. அலுவலகத்திலும் சிரி, வீட்டிலும் சரி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். மற்றவர்களையும் சிரிக்க வைத்து விடுவேன். அலுவலக பணியாளர்களுடன் நான் சிரித்துப் பேசினால் அடுத்து ஏதோவொரு ஆப்பு என்று அவர்களே சொல்லிவிடுகின்றார்கள். வீட்டில் மனைவி இதைத் தினந்தோறும் ஒரு முறையாவது சொல்லிவிடுகின்றார். 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

பக்கத்தில் உள்ள மின்சாரக் கம்பியின் பழுது காரணமாகப் பல முறை இப்படி நடந்துள்ளது. இரவு நேரத்தில் மட்டும் (தூங்க ஆறு மணி நேரம்) மின்சாரம் இருந்தால் போதும் என்று மட்டும் தான் நான் நினைப்பேன். மற்ற நேரங்களில் பகல்பொழுது என்றால் பழைய பத்திரிக்கைகளை வீட்டுக்கு வெளியே பரப்பி வைத்துக் கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பேன். 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

அதற்கு இன்னமும் உத்தேசமாக 15 வருடங்கள் இருக்கின்றது. அப்போது நான் இருந்தாலும் அறிவுரையாக எதையும் சொல்ல மாட்டேன். எப்போதும் என் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு நாள் வாழ்க்கை அனுபவங்கள் தான் உனக்குப் பாடம். நீ தான் புரிந்து கொள்ள வேண்டும். உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் மாற்றிக் கொள். மற்றவர்களை எப்போதும் குறை சொல்லாதே. உன் வாழ்க்கை உன் கையில் மட்டுமே. 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்? 

உலகத்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் உண்டு. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வங்கியில் கடன் வாங்கிச் சவடால் கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெரிய மனிதர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு ஒரு மாதத்திற்குள் வசூலிப்பேன். அப்படிக் கொடுக்காதவர்களின் சொத்துக்களை அரசாங்க உடமையாக்குவேன். இது செய்தாலே நாட்டில் பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும். புண்ணியவான்கள் ஏப்பம் விட்டது கொஞ்சமா? 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

'ஞானாலயா' கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம். ஒவ்வொரு முறையும் குழப்பங்கள் உருவாகும் போது அவரிடம் தான் கேட்கின்றேன். 

8.உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 

சம்மந்தப்பட்டவர் யார் என்று தெரிந்து கொண்டு அமைதியாக இருப்பேன். ஏற்கனவே இணைய நண்பர் ஒருவர் அந்த வேலையைச் செய்தார். உடல்ரீதியான பாதிப்பில் இப்போது செயல்பட முடியாத நிலையில் இணையம் பக்கம் வரமுடியாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றார். 

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? 

எந்த அறிவுரையும் சொல்ல மாட்டேன். அவர் முடிவு செய்ய வேண்டிய கடமைகள், தீர்மானங்கள், வேலைகள் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? 

வீட்டைச் சுத்தம் செய்வேன். முடிந்தால் சமையல் செய்ய முயற்சிப்பேன். கொஞ்சம் நேரம் வாசலில் அமர்ந்து தெருவில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். பல நாட்கள் பேச முடியாத நண்பர்களை, உறவினர்களை நினைவில் வைத்து ஒவ்வொருவராக அலைபேசியில் அழைத்துப் பேசுவேன். படிக்காமல் விட்டுப் போன பழைய பத்திரிக்கைகள், வார இதழ்களில் படிக்காதவற்றைப் படிக்க முயற்சிப்பேன். மற்ற நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பேன். 

Thursday, June 26, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் சேர்ந்த கதை

முன்கூட்டிய தகவல் அறிக்கை மற்றும் எச்சரிக்கை. 

(நீண்ட நாளைக்குப் பிறகு மிக நீண்ட பதிவு. இதயம் பலகீனமானவர்களும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், கணினியில் பெரிய கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தால் எனக்குக் கண்வலி வந்து விடும் என்பவர்களும் அவசியம் தவிர்த்து விடவும்).

•••••••
ற்ற நாடுகளில் எப்படியோ? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எனக்கு ஞானியாகத்தான் தெரிகின்றார்கள். முற்றும் துறந்தவர்களை ஞானி என்றழைத்தால் இவர்களையும் நீங்கள் அப்படித்தானே அழைக்க வேண்டும். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமற்ற ஜந்து போலப் பணம் என்பதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்கிற ரீதியில் வாழக்கூடியவர்கள். 

சாதாரணக் குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர்களை புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போதும் கூனிக்குறுகி தங்களது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் இவர்கள் மட்டும் தான் மகான் போலப் புன்முறுவலோடு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்கள். அதன் மூலம் ஆதாயம் பெறவும் தயங்குவதில்லை. 

ரு தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு, ஒவ்வொரு நாளும் நித்தமும் கண்டம் போலத்தான் கடக்கின்றது. பலதரப்பட்ட பிரச்சனைகள், தனி மனித வக்கிரம், வன்மம், குரோதம், போட்டி, பொறாமை, அளவு கடந்த ஆசைகளுடன் வாழும் சக மனிதர்களைத் தாண்டி அவர்களைச் சமாளித்து வர வேண்டியதாக உள்ளது. 

ம்முடைய இலக்கும் அவர்களுடைய நோக்கமும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் ஏதோவொரு புள்ளியில் இணைந்து மீண்டும் பிரிந்து மீண்டும் சேர்ந்து செல்லும் போது தான் பிரச்சனையில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடிகின்றது. எந்த அளவுக்கு மனப்பக்குவம் இருந்தாலும் இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயத்தில் தொழிற்சாலைப் பிரச்சனைகள் மனதில் பூதாகரமாக வந்து போகின்றது.


து போன்ற சமயங்களில் நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. எப்படி இவர்களால் நிம்மதியாக வாழ முடிகின்றது. முடிந்த வரைக்கும் நேர்மையாகத்தான் தான் வாழ்ந்து பார்ப்போமே? என்று யோசித்து வாழும் நமக்கே இத்தனை இடைஞ்சல்கள் என்கிற போது நாள்தோறும் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படும் இவர்களின் மனோநிலையும், இவர்கள் வாழ்க்கையில் தினந்தோறும் சந்திக்கும் சவால்களும் எப்படி இவர்களை நிம்மதியாக உறங்க வைக்கும் என்று யோசித்துப் பார்க்கும் போது பயம் வந்து எட்டிப்பார்க்கின்றது. 

தொடர்ச்சியான இரவு வேலைகள் இருந்து குறுகிய நேரம் மட்டும் தான் தூங்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நாள் நம் வேலைகளில் காட்ட முடியாத ஆர்வம், போக்கிக் கொள்ள முடியாத சோர்வு, அடுத்தடுத்து உருவாகும் உடல் ரீதியான பாதிப்புகள் என்று நரக வேதனைகளை அனுபவிக்கும் போது தான் ஒரு மனிதனுக்குத் தூக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்? 

னால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தூக்க கணக்கை எடுத்துப் பார்த்தால் அதுவொரு துக்கக் கணக்காகத்தான் இருக்கும். இடைவிடாத அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் பயம் தான் பிரதானமாக இருக்கும். பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது. கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தபோதிலும். 

னி மனிதனுக்குக் குடும்பம் என்பது வரம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதுவே சாபமாகப் போய்விடுகின்றது. மக்கள் மனதில் இன்று வரையிலும் நிற்கும் தலைவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள். ஒன்று குடும்பம் இருக்காது அல்லது குடும்பத்தைப் பத்தடி தள்ளி ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இன்று திமுகவில் தயாளு அம்மா படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. 

ன் பதவியைத் தன் மகனுக்கே விட்டுக் கொடுக்க மனமில்லாத கலைஞரைத்தான் இன்னமும் இந்த "தமிழ்ச் சமூகத்திற்காக இத்தனை காலமும் இவர் உழைத்தார்" என்ற நம்ப வேண்டியதாக உள்ளது.

ன் திமுக இந்தத் தேர்தலில் தோற்றது? அதற்கான காரணங்கள் என்ன? என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார். ஏன் ஜெயிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.

திமுகவிற்கு ஊழல் என்ற வார்த்தை புதிதல்ல. ஊழலுக்குப் பல நவீன விளக்கங்களைக் கொடுத்தவர் தான் கலைஞர். விசாரிக்கும் நீதிபதிக்கே மயக்கத்தைத் தரக்கூடிய கலையில் தேர்ச்சி பெற்றவரின் திறமை அவரின் வாரிசுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர் கனிமொழி. அவர் நீராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அனைத்தையும் கேட்டவர்கள் மனதில் இப்படித் தோன்றியிருக்கும்? நிச்சயம் இந்தியாவை ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுத்தவர்கள் தான் ஆள்கின்றார்களா? இல்லை அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் மூலம் இந்தியா இயங்குகின்றதா என்று.

ன்னைக் கேவலத்தின் உச்சத்திற்கே கொண்டு போனவர் தன் மகள் என்பதால் அவரைக் கலைஞரால் புறக்கணிக்க முடியவில்லை. அவரையும் தைரியமாகத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கின்றார். மாவட்டச் செயலாளர்களின் அசைக்க முடியாத ராஜ்ஜியம் ஒரு பக்கம். அவர்கள் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்தும் முஸ்தீபுகள். ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று யோசித்துப் பம்மினார்களே தவிர "நான் திமுகத் தான். என் தலைவர் கலைஞர்" என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கும் தொண்டர்களை அத்தனை பேர்களும் மறந்து விட்டார்கள்.
நன்றி (வினவு)

ஜெயலலிதா தங்கள் மேல் கேஸ் போட்டு உள்ளே வைத்து விடுவாரோ? என்று பயத்தில் பாதிப் பேர்கள். தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்திற்கு ஆட்சியாளர்களால் பங்கம் வந்து விடுமோ என்று மறுகிக் கொண்டிருந்தவர்கள் மீதிப்பேர்கள். பிறகெப்படி களப்பணி நடக்கும். கடைசியில் கலகலத்து விட்டது. முரட்டுப் பக்தர் தூத்துக்குடி பெரியசாமி முதல் மிரட்டும் மகன் அழகிரி வரைக்கும் உண்டான பஞ்சாயத்துகளைத் தீர்க்க வழியில்லாத கலைஞருக்கு வெற்றி எப்படிக் கிடைக்கும்.  கட்சி என்பதனை குடும்பத்தில் இருந்து தனியாக பிரிக்காத வரைக்கும் திமுக என்ற கட்சிக்கு எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.

காங்கிரஸ் வேண்டும். கனிமொழியைக் காப்பாற்ற. ஆ. ராசா வேண்டும் தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள. "இனம் காப்போம். மொழி காப்போம். "வீற மறவனே தோள் தட்டி மார் தூக்கி என் பின்னால் வா" என்று கடிதம் எழுதும் கலைஞருக்கு இந்த முறை வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்களின் மனோநிலையை எவரும் புரியவைக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

மிழர்களின் தாய் மொழியை மறக்கடிக்க முன்மொழிந்தவர் எம்.ஜி.ஆர். அதனை வழிமொழிந்தவர் கலைஞர். இதுவே சரியென்று அச்சாரம் போட்டவர் ஜெயலலிதா. பிறகெப்படி இப்போதைய இளையர்களுக்கு மொழி குறித்துத் தெரியும்.

றவன் என்றால் என்ன? என்று இன்றைய மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 99 சதவிகித மாணவர்கள் அந்தப்படம் ரீலிஸ் ஆகலையே? என்று தான் சொல்வார்கள். ஒரு திமுக நண்பர் சொன்னது போல இயற்கை கலைஞரை அழைத்துக் கொள்ளும் போது மட்டுமே (குழப்பத்திற்குப் பிறகு) திமுக இயல்பான பாதைக்குத் திரும்பும்.

ற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு பல விதங்களில் முன்னேறியுள்ளது என்று புள்ளி விபரபுலிகள் கதையளக்கின்றார்கள். அதற்குக் காரணம் முரசொலி மாறன் கொண்டு வந்த பன்னாட்டு ஒப்பந்தங்கள். சென்னைக்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தான் காரணம் என்கிறார்கள்.

ன்று நோக்கியாவின் வண்டவாளம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களும் தெருவில் நிற்கின்றார்கள். சம்பாரித்த நிறுவனம் அடுத்தவன் கையில் ஒப்படைத்துவிட்டு அம்போ சிவ சம்போ என்று சென்று விட்டார்கள். நோக்கியா சமாச்சாரம் தற்போது வெளியே வந்துள்ளது. தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் வருமோ?

ரு பன்னாட்டு நிறுவனம் உள்ளே வந்து தான் இந்தியா வளர வேண்டுமென்றால் ஆட்சியாளர்களின் பார்வைக்கோளாறு என்று அர்த்தம். அதற்கு மேலே வரக்கூடிய நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தாங்கள் பெற முடிகின்ற ஆதாயம் தான் காரணம் என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்து இருக்க முடியும் நம்புகின்றீர்கள்? விலைவாசி உயர்வும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இங்கே உருவாக முக்கியக்காரணம் இந்த நிறுவனங்களே.

ங்கே மளிகைக்கடை வைத்திருப்பவன் தலைமுறை தலைமுறையாகத் தன் தலையால் தண்ணீர் குடித்தும் அவனுக்கு எந்த அரசாங்கத்தின் ஆதரவும் கிடைத்தபாடில்லை. வங்கியிடம் கடன் கேட்டுச் சென்றால் சென்றால் கம்பால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஆனால் மக்களின் வரிப்பணத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என்கிறார்கள்.

ந்த இடத்தில் தான் நரேந்திர மோடி தனித்தன்மையாக இருக்கின்றார். அவர் மேல் வைக்கப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மீறி தன் பாதையைத் தெளிவாக வகுத்துக் கொண்டு, தன் எதிரிகளையும் சமாளித்துக் குறுகிய காலத்தில் மேலே வந்தவர். குடும்பப் பாரம் இல்லை. இன்று வரையிலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நிர்வாகத் திறமையற்றவர் என்று எவரும் சொல்ல முடியாத அளவிற்கு ஏற்கனவே இருந்த முதல்வர் பதவி மூலம் தன் முத்திரையைப் பதித்தவர். 

ன்மோகன் சிங் ஆட்சியில் வந்தமர்ந்த போது அவரையும் வானாளவ புகழ்ந்தனர். ஆனால் அவரால் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் உண்டான இடைவெளியை சரியான முறையில் நிரப்பத் தெரியாத காரணத்தால் பழி ஒரு பக்கம். பாவம் ஒரு பக்கம் என்று இன்று பரிதாபமான பிரதமர் பட்டியலில் சேர்ந்து விட்டார். 

ரேந்திர மோடி சிறந்த நிர்வாகி என்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த அரசியல்வாதி. இந்திய அரசியல்வாதிகளுக்குரிய தனித்தன்மையான குணத்தை மனதில் பட்டியிலிட்டு பார்த்துக் கொள்ளவும். அத்தனை குணாதிசியங்களும் இவருக்குப் பொருந்தும். 

ன்மோகன் சிங் "முதலாளிகளால் மட்டும் இந்த நாடு வளரும்" என்று உறுதியாக நம்பினார். மோடியும் அதே தான் சொல்கின்றார். ஆனால் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்றொரு வார்த்தைகளையும் சேர்த்து தான் சொல்கின்றார். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ரசியல்வாதிகளைக் குறை சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழர்களின் அரசியல் அறிவு என்பது உலகப் பிரசித்தி பெற்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் கூடப் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர் தேர்தல் போலத்தான் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். வாக்காளர்களுக்கு இந்தத் தேர்தல் எதற்காக நடக்கின்றது என்பது கூடத் தெரியுமா? என்ற சந்தேகம் வந்துருக்கும்.

டந்த காலத்தில் நாம் தேர்ந்தெடுத்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், ராமராஜன், ரித்திஷ், நெப்போலியன் போன்றவர்களும், கலைஞர் மகன் அழகிரி போன்றவர்களும் அவ்வளவு பெரிய பாராளுமன்ற கட்டிடத்தில் எந்த மூலையில் பதுங்கியிருப்பார்களோ? மொழி குழப்பத்தில் விழி பிதுங்கிப் போய் நிற்கும் இவர்களால் அதிகபட்சம் கிடைத்த பேட்டா காசை வாங்கிக் கொண்டு டெல்லியை ஐந்து வருடத்திற்குள் சுற்றிப் பார்த்தது தான் மிச்சமாக இருக்கும்.

தாங்கள் பிறந்த மாவட்டத்தைப் பற்றியே முழுமையாகத் தெரியாதவர்களும், டெல்லி அரசியல் லாபியைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியாதவர்களையும் வைத்து என்ன செய்ய முடியும்? ஆட்டு மந்தை கணக்காக அனுப்பி "ஆத்துல போற தண்ணியை அள்ளிக்குடிக்க" அனுப்பி வைத்தவர்களை நம்பிக் கொண்டு தான் தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று இன்று வரையிலும் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சனையை டெல்லி வாலாக்களிடம் போராடி ஜெயிக்க முடியும்?

ந்தத் துறையைக் கைப்பற்றினால் நமக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்பதைத் திமுகக் கற்றுக் கொடுத்து விட்டது. இனி வாய்ப்பு கிடைக்கும் அனைவரும், டெல்லி அரசியலுக்கு ஆசைப்படுபவர்களுக்குப் பாலமாடமாகத்தானே இருக்கும்.

டித்த கணவான்கள் வாழும் சென்னையில் பதிவான ஒட்டுச் சதவிகிதத்தை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் பல உண்மைகள் தெரிய வரக்கூடும். ஒவ்வொரு முறையும் ஜனநாயக கடமையை ஆற்றுபவர்கள் படிக்காத பாமர மக்கள் மட்டுமே. இந்த முறை மட்டும் சற்றுக் கூடுதலாக முதல் முறையாக ஓட்டளிக்க வந்த இளையர் கூட்டம், இது தவிரக் கொலைவெறியை மனதில் தேக்கி வைத்திருந்த நடுத்தரவர்க்கமும் கூட்டணி சேர்ந்து கும்மாங்குத்து குத்தி விட்டார்கள். நோட்டா பட்டன் வைத்தவுடன் இன்னும் பலருக்கு குஷியாகி விட்டது.

வ்வொரு தேர்தல் வரும் போதும் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும் இரண்டு விசயங்களில் கவனமாக இருக்கின்றார்கள். மைனாரிட்டி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஓட்டு வங்கி. இந்த இரண்டு சமூக மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியாத எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்ற மாயை இந்தத் தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக உ.பி தங்கத்தலைவி மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் தலித் மக்கள் கொடுத்த அடி எந்தக் காலத்திலும் மறக்க முடியாத ஒன்று. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு முறையும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிக் கொண்டிருந்த உ.பி மாநிலத்தில் குறிப்பிடத்தக்க தொகுதியைத் தவிரப் பெரும்பாலான முஸ்லீம் தொகுதிகள் கூடப் பா.ஜ.க விற்கே ஆதரவளித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இப்படித்தான் நடந்துள்ளது. 

ந்தத் தேர்தலில் தான் மைனாரிட்டி சமூகம் மெஜாரிட்டி சமூகத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.  இதனால் தான் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடிந்தது.  விமர்சித்த புத்திசாலிகள் மௌனியாக மாறி விட்டனர். 

ற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தனித் தொகுதிகள் என்ற அச்சாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது தாங்கள் ஜெயித்து வந்த அந்தத் தொகுதியை தங்கள் பதவிக்காலத்திற்குள் முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்து உள்ளனரா? உங்கள் ஞாபகத்தில் வரும் தலைகளைப் பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளவும். இது நேற்று இன்றல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கியதிலிருந்து இப்படித்தான் இந்தச் சமூக மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வைத்தார்கள் இந்த முறை ஆப்பு? 

மிழ்நாட்டில் பா.ஜ.க பெற முடியாத வாக்கிற்கு முக்கியக் காரணம் பொருந்தாத உறுப்புகளைக் கொண்ட வினோதமான மிருகம் போல உருவான கூட்டணி. அந்தக் கூட்டணி உருவாவதற்கு முன்னால் உருவான குழப்பங்கள், பேரங்கள். கேவல அரசியலில் சாட்சியாக இருந்தவர்களுக்கு மட்டரகமான பதிலையே வாக்காளர்கள் கொடுத்துள்ளனர். 

ற்ற கட்சிகளை விடத் திமுக தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக முன்னெடுப்புகளை எடுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தின் அத்தனை ஓட்டுகளும் அதிமுக விற்கே விழுந்துள்ளது. 

திருப்பூரில் தேமுதிக தோற்றத்திற்கு முக்கியக் காரணம் திருப்பூர் பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட கிராமம் சார்ந்த அத்தனை இடங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் அப்படியே இரட்டை இலைக்குத்தான் போட்டுள்ளனர். அத்தனை ஓட்டுகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஓட்டுக்கள். யார் மேல் கோபம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை? 

னால் "நான் திருந்தப்போவதில்லை" என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு மக்கள் கைவிடத் தயாராக இல்லை. "நமக்கு வாய்த்த அடிமைகள் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்கள்" என்பதை அவரும் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார். காரணம் நமக்கு மாநிலத்தின் வளர்ச்சியை விட, தகுதியான முதல்வரை விட "எனக்கு பிடிக்காதவன் வந்து விடக்கூடாது" என்பதில் நம்மவர்கள் காட்டும் அக்கறை மிக அதிகம். இதன் விளைவுகள் அனைத்தும் அடுத்த ஐந்தாண்டுகளில் நம் வாரிசுகள் அனுபவிக்கப் போகின்றார்கள்.  

கூடவே நாமும் சேர்ந்து. 

(முற்றும்)



Wednesday, June 25, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் - 5


ஊரில் வாழ்ந்த போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை யாரையாவது பார்க்க வேண்டியிருந்தால் "அவர் காங்கிரஸ்காரர். தப்புத் தண்டாவுக் கெல்லாம் போற மனுசன் இல்லப்பா" என்பார்கள். 

நைந்து போன அந்தக் கதர்ச்சட்டை, கதர்வேஷ்டி என்பது ஒரு அடையாளம். அவர்களின் அமைதியும், சாத்வீகமும் மற்றொரு அடையாளம். 

உள்ளும் புறமும் இப்படித்தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் வாழ்ந்தார்கள். 

ஆனால் தற்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது பன்னாட்டு நிறுவனம். கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் பரந்து விரிந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள். பணம் தான் பிரதானம். பணம் தான் கொள்கை. கொள்ளை என்பது கட்சி ஆதாரக் கொள்கை.

ஆங்கிலேயர்களுடன் பேச, உறவாட, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைக்க ஆங்கிலேயர் ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் உருவாக்கிய கட்சி தான் காங்கிரஸ்.  

காங்கிரஸ் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு ஆங்கிலேயரின் நிர்வாகத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் இடைவிடாது நடக்க வெள்ளையர்கள் யோசித்தார்கள். 1885 ஆம் ஆண்டு அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த டப்ளின் பிரபுவின் ஆலோசனையின் ( மத ரீதியாகச் சாதி ரீதியாக மக்களைப் பிரித்துச் சண்டையிட வைத்து ஒற்றுமையைக் குலைப்பது) பேரின் மேலே சொன்ன ஆலன் என்ற வெள்ளையர் மூலம் காங்கிரஸ் கட்சி உருவானது. 

முதல் இருபது வருடம் இவரே தலைமைப் பொறுப்பில் இருந்தார். 

அப்போது இவர் பகிங்கரமாகச் சொன்ன ஒரு விசயத்தை இப்போது நாம் நினைத்துப் பார்ப்பது அவசியமாகும். 

"நாம் அரசியல் ரீதியாகக் கூடுகின்றோமே தவிர இதில் சமூகச் சீர்திருத்த கருத்துக்களுக்கு இடமில்லை. எவரும் கூட்டத்தில் அது குறித்துப் பேசக்கூடாது. எனவே மதம், அனுஷ்டானம்,வருணாசிரமம் போன்றவற்றைப் புண்படுத்தும் விதமாக எவரும் நடந்து கொள்ளக்கூடாது" என்று அரசியார் சொல்லியுள்ளார் என்றார். "எனவே மத ஆச்சாரமும், குல ஆச்சாரமும் இங்கே பாதுகாக்கப்படும்" என்றார். 

விதை ஒன்று போட்டால் எது முளைக்குமோ? அது தான் இன்று விஷ விருட்சமாகி வந்து வளர்ந்து நின்றுள்ளது. 

காலமாற்றத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக மாறியபடி வந்த காங்கிரஸ், நேரு, இந்திரா,ராஜீவ்,சோனியா என்று வந்து இன்று ராகுலின் கைக்கு வந்துள்ளது. நாளை சோனியாவின் மருமகன் "கை"க்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

"தீராத விளையாட்டுப் பிள்ளை"களான மகனையும் மருமகனையும் நம்பி இந்தப் பெரிய தேசம் காத்திருப்பது தான் நம் நாட்டின் பெரிய மிகப் பெரிய கொடுமை. நல்ல வேளை இந்த முறை இந்த மாஃபியா கும்பலிடமிருந்து இந்தியா தப்பித்து விட்டது. 

சுதந்திரத்திற்கு முன்பு இருந்த "காங்கிரஸ் பேரியக்கம்" என்பது வேறு. இன்று உள்ள "காங்கிரஸ் கட்சி" என்பது வேறு. இன்று இருக்கும் காங்கிரஸ்வாதிகள் ஊழல்வாதிகளாக மாறிப்போனதால் மகாத்மா காந்தி கண்ட கிராமப் பொருளாதாரம் அருவெறுக்கத்தக்கதாக மாறி உள்ளது. 

"ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் இந்தப் பாழாய்ப் போன விவசாயத்தைக் கட்டி மாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்?" என்று புண்ணியவான்கள் கேட்கின்ற அளவிற்குப் புத்திசாலிகளைக் காங்கிரஸ் கட்சி வளர்த்துள்ளது. இங்குள்ள கனிம வளங்கள் என்பது தேசத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றால் மட்டுமே இந்த நாடு வளம் பெறும் என்று பொருளாதார மேதைகள் அருள்வாக்காகச் சொல்லி நம்மை ரட்சிக்கின்றார்கள்.

காந்தியை, நேருவை இன்று கூட விமர்சிக்கின்றார்கள். அவர்களின் கொள்கைகளில் குழப்பங்கள் இருந்ததே தவிர அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூர்ந்து கவனித்தால் அவர்களின் நோக்கம் இந்த தேசத்தை கொள்ளையடித்து தன்னை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. காந்தி தனது குடும்பத்தை ஆட்சி அதிகாரம் பக்கம் அண்டவிடவில்லை. ஆனால் நேருவால் பல விதங்களில் மெருகூட்டப்பட்டும் இந்திரா காந்தியால் சோபிக்க முடியவில்லை.  அதிகார போதை என்பது அனைத்தையும் விட மேலானது என்பதைத்தான் அவரின் ஒவ்வொரு வீழ்ச்சியும் நமக்கு இன்று பாடமாக கற்றுத் தந்து கொண்டிருக்கின்றது. 

மற்ற கட்சிகளின் ஊழல்களை எளிதில் எவரும் விமர்சித்து விட முடியும். போபர்ஸ் பீரங்கி ஊழல் முதல் இன்று திமுகவும் மாட்டிக் கொண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வரைக்கும் இதன் சரித்திர கதை மிக நீண்டது. பசுத் தோல் போர்த்திய இந்தக் காங்கிரஸ் என்ற பெருச்சாளியின் வண்டவாளம் நேரு காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. 

அப்போது பிரிட்டனின் ஹை கமிஷனராகப் பணிபுரிந்த வி.கே.கிருஷ்ணமேனன் விதிமுறைகளை மீறி ராணுவத்திற்கு ஜீப் வாங்கும் 80 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டார். 

அப்போது இந்திய ராணுவத்திற்கு 4603 ஜீப்கள் தேவைப்பட்டது. 80 லட்சம் ரூபாய்க்கு 1500 ஜீப்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன போதும் வாங்கப்பட்ட ஜீப்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனம் ஜீப்களை ஒப்படைக்கும் முன்பே ஒப்பந்தத்தில் கூறப்பட்ட பெரும்பாலான பணம் அந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டு விட்டது. 1949 ஆம் ஆண்டு 150 ஜீப்கள் மட்டும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரோ அந்த ஜீப்புகள் இராணுவம் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினார். 

இந்த ஊழலைப்பற்றி விசாரிக்க நேரு அரசினால் அனந்தசயனம் ஐயங்கார் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரனை கமிஷன் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிட்டது. ஆனால் நேரு நீதிமன்ற விசாரனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லாப் பந்த் செப்டம்பர் 30, 1955ல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி ஊழல் வழக்கு முடிக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் திருப்தி அடையாவிட்டால் இப்பிரச்சனை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இதில் ஆச்சரியப்படக்கூடிய அம்சம் என்னவென்றால் இந்த ஊழலில் தொடர்புடைய வி.கே.கிருஷ்ணமேனன் (பிப்ரவரி 3 1956) இலாகா இல்லாத அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவரே தான் பின்னாளில் நேருவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மாறினார். இவரையே பின்னாளில் நேரு, மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நியமித்தார். 

காங்கிரஸின் ஊழல் பயணம் என்பது 1948ல் தொடங்கியது. 2014 கடைசிக் கட்ட நேரம் வரைக்கும் தொட்டுத் தொடர்ந்தது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் காங்கிரஸில் சில நல்ல முகங்கள் தென்பட்டு கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவியது. அது காமராஜர், கக்கன் போன்ற தன்னலமற்ற மனிதர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டது. அபுல்கலாம் ஆசாத் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் மூலம் புதுப்பொலிவை பெற முடிந்தது. 

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் இவர்களைப் போன்ற தலைவர்களின் முகங்களை வைத்துத்தான் காங்கிரஸ் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது. 

இவையெல்லாம் 1970 ஆம் ஆண்டோடு முடிந்து போனது. 

காங்கிரஸ் கட்சிக்கு காந்தி தேவைப்பட்டார். ஆனால் காந்தியின் கொள்கை தேவைப்படவில்லை. 

1980க்குப் பிறகு காந்தியைப் போலக் காமராஜரின் கொள்கைகளும் இங்கே கேள்வி கேட்பாரன்றிப் போய்விட்டது. நாங்கள் காந்தியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் சாராய அதிபர் விஜய் மல்லையாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். 

காரணம் காந்தியார் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது அதனை அதிக விலை கொடுத்து எடுத்தவர் இந்த மல்லையா தான். காந்தியின் கொள்கைகளே கலாவதியான பின்பு அவர் பயன்படுத்திய பொருட்களுக்கு இவர்கள் எங்கே மரியாதை தரக்கூடும்?

(அடுத்த பதிவில் இறுதியாக சில வார்த்தைகளுடன் முடிவுக்கு வருகின்றது)

தொடர்புடைய பதிவுகள்







Tuesday, June 24, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 4



இந்தப் பதிவின் முந்தைய தொடர்ச்சி 

வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுகின்ற, விமர்சனத்துள்ளாகின்ற இரண்டு கட்சிகள், ஒன்று திமுக மற்றொன்று காங்கிரஸ். இதே போல நடந்து முடிந்த தேர்தலில் வலைதளங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அதன் நீக்கு போக்குகளை உணர்ந்து தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர் பிரதமர் நரேந்திரமோடி. 

நம்பமுடியாத அளவுக்கு ஓட்டு எண்ணிக்கையைப் பெற்ற இரண்டு கட்சிகள், ஒன்று அதிமுக மற்றொன்று பா.ஜ.க.  

இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் நூறு சதவிகிதம் அவர்களுக்கான ஆதரவு ஓட்டு அல்ல. மக்கள் மனதில் மாற்று கட்சியின் மேல் உருவான வெறுப்பும், எதிர்ப்பும் சேர்ந்து தான் இவர்களுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரத்தை கொடுக்க வைத்துள்ளது.

முதலில் காங்கிரஸ் கட்சியைப் பார்த்து விடலாம். 

இன்னமும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சொல்லக்கூடிய ஒரு வாசகம் இது.

"உங்களுக்கெல்லாம் காங்கிரஸின் மரியாதை எங்கே தெரியப்போகின்றது? அடி உதை பட்டு ரத்தம் சிந்தி இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி என்று சரிவை நோக்கிச் சென்று மாநிலக் கட்சிகளைத் தலைதூக்கியதோ அன்றே இந்தியாவின் வளர்ச்சியும், கூட்டாட்சி தத்துவமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது" என்கிறார்கள். 

இன்னும் கொஞ்சம் எதார்த்தவாதியாக உள்ளவர்கள் மறக்காமல் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள். 

"ஒரு வேளை இத்தனை காலம் காங்கிரஸ் மட்டும் ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா என்ற நாடே இருந்துருக்காது. மாநில பிரிவினைகள் உச்சத்திற்குச் சென்று இந்நேரம் நாடு துண்டு துண்டாகச் சிதறிப் போயிருக்கும்." 

உண்மை தான். அதற்கு முன்னால் சில விசயங்களைப் பார்த்து விடலாம். 

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் பதினேழரை லட்சம் வாக்குகள். இதை விடப் பத்து மடங்கு அதிகம் பெற்ற கட்சி அதிமுக. நேற்று முளைத்த தேமுதிக கூட மூன்று லட்சம் வாக்குகள் காங்கிரஸை விட அதிகம் பெற்றுள்ளது. 

ஏன் இந்த படுபாதாள வீழ்ச்சி? 

பொதுமக்கள் பட்ட பாடுகளை விட, ஒரு தொழில்துறையில் சம்மந்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்கும், மிகப் பெரிய முதலீடு போட்டவர்களும் கடந்த பத்தாண்டுகளில் பெற்ற மனஉளைச்சல், அவமானங்கள், இழப்புகள் ஏராளமானது. 

இது தவிரத் தமிழர்கள் என்றாலே எட்டிக்காய் போலக் கசந்த கோமகன் வகுத்த வெளியுறவு கொள்கை, தொழில் கொள்கை, என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் ஏராளமான இழப்புகளை தந்தது. இது தவிர காங்கிரஸ் கட்சியின் மாற்றான் தாய் மனப்பான்மை ஒவ்வொரு தமிழர்களுக்கும் மனதிற்குள் வெறியை உருவாக்கியது. காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கொள்கையும் தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சிக்கு உதவியதே தவிர நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. 

கடைசியாக "பிரிட்டிஷ் வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திர நாட்டை அமெரிக்க வெள்ளையிடம் மகிழ்ச்சியாக ஒப்படைப்பதே தனது கடமை" என்று மன்மோகன் மட்டுமல்ல ஒவ்வொருவருமே செயல்பட்டவர்கள். 

இன்று காங்கிரஸ் கட்சியில் அத்தனை பேர்களையும் மக்கள் குப்பை போலவே தூக்கி எறிந்து விட்டனர். 

நான் எனது கடைசி மின் நூலை எழுதி வெளியிட்ட போது பின்வருமாறு எழுதினேன். அது தான் நடந்துள்ளது. 

இன்னும் சில மாதங்களில் தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தெருவில் கிடக்கும் குப்பையாக மாறப் போகின்றது. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்காகச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு செய்த கேடு கேட்ட சமாச்சாரங்களை மக்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

இவர்கள் உருவாக்கி உள்ள ஒவ்வொரு பன்னாட்டு ஒப்பந்தங்களின் விளைவை நிச்சயம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மொத்தமும் உணரும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. மீதம் இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டிற்குப் பாரமாக இருப்பவர்கள் என்கிற நிலைக்கு மாறியிருப்பார்கள். பத்திரிக்கைகள் வாயிலாக வெளியே தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பற்றி "வெள்ளை அடிமைகள்" என்ற மின் நூலில் எழுதியுள்ளேன். 

ஆனால் இதனை விட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதி கொடுத்துள்ள திடீர் அமைச்சர் வீரப்ப மொய்லி (ஜெயந்தி நடராஜன் கையில் இருந்த சுற்றுச்சூழல் பொறுப்பு) செய்துள்ள காரியத்தின் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும். அதனைப் பற்றி இன்று வெளியான மின் நூலில் பேசியுள்ளேன்

காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்த நண்பர், மற்றும் வேறு சில கட்சிகளில் இருந்து கொண்டு நெருக்கமான தொடர்பில் இருந்த பல நண்பர்கள் நட்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டனர். காரணம் திரும்பத் திரும்ப உண்மையான விசயங்களை என் பார்வையில் பட்ட கருத்துக்களை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாற்று அரசியல் பார்வை கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலர் அழைத்து விவாதம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். 

நாம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைகளும், நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளின் கொள்கை சார்ந்த பார்வைகளும் வெவ்வேறு என்பதனை படித்தவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் ஆச்சரியமாக உளளது.

அதனால் என்ன? எவரிடமும் அண்டிப்பிழைக்க அவசியமில்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுபவர்களும், அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் பார்வையில் வித்தியாசமாகத்தானே இருக்கும். 

எந்தத் தொடர் பதிவையும் பாதியில் நிறுத்தியது இல்லை. எந்த அளவுக்கு வேலைப்பளூ இருந்தாலும் என் கடமை என்பது எனக்குத் தெரிந்தவற்றை நான் புரிந்து கொண்டவற்றை என் மொழியில் அப்படியே ஆவணப்படுத்தி விட வேண்டும் என்பதே என் எண்ணம். 

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியைப் பற்றித் தற்பொழுது வலைதளங்களில் வந்து உலாவி கொண்டிருக்கும் இளைஞர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாக எழுதி வைக்க விரும்புகினறேன்.  செத்த பாம்பு என்று ஒதுங்கி விடக்கூடாது. உள்ளே புதைத்தாலும் மீண்டும் எழுந்து விடககூடி வாய்ப்புள்ளது?  நரேந்திர மோடியின் ஒரு வருட ஆட்சிக்குப் பிறகே இவரின் தகுதியும் தராதரமும் விவாதிக்க வேண்டிய விசயமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  காரணம் பாழடைந்த வீட்டை சுத்தம் செய்து மறுபடியும் குடிபுகவே இந்த ஒரு வருடம் ஆகக்கூடும். 

இது தவிர நடந்து கொண்டிருக்கும் ஈராக் பிரச்சனை இந்தியாவையும் தாக்கக்கூடிய ஆபத்துள்ளது.  மோடியின் உறுதியான முடிவைப் பொறுத்து பாகிஸ்தான் நாட்டின் தலைவிதி மாறக்கூடும்.  இது குறித்து விரிவாக விரைவில் பேசுவோம்.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு எப்படி இந்தியர்களின் கல்வி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றினார்களோ? அதைப்போல அரசியல் கட்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வித்தியாசமான சிந்தனை ஒரு வெள்ளையர் மனதில் தோன்றியது. 

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டன் அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரியான ஆலன் ஆக்கோடவியன் ஹ்யூம் என்பவருடைய சிந்தனையில் உருவான கட்சி (அமைப்பு) தான் இந்தக் காங்கிரஸ் கட்சி. 

சற்று விபரமாக அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

Saturday, June 21, 2014

யோசித்ததும் சாதித்ததும்

எழுதிய தொடர் பதிவு பாதியில் நிற்கின்றது. அரசியல் ரீதியான பதிவுகள் எழுதும் போது அதன் ஆயுசு மிகவும் குறைவு. காரணம் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் கூட அப்படித்தான் தேசத்தையே திருப்பிப் போட்டுள்ளது. எவருமே யூகிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமான புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இன்னும் எழுத வேண்டிய சில பதிவுகளுக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளைக் கோர்க்க முடியாத நேரத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நடந்த சில நிகழ்வுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். 

"எல்லோரும் மாற்றம் வேண்டும்" என்று விரும்புகின்றார்கள். ஆனால் எங்கிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும்? என்பதில் தான் பிரச்சனை உருவாகின்றது. படித்தவர், படிக்காதவர், பாமரன் தொடங்கி இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான முகமூடி. எவரும் எதையும் கழட்டி வைக்க விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய கொள்கை, விருப்பங்கள் என்று முழங்கிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். 

கடைசியாக அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் ஊழல்வாதிகள், அயோக்கியர்கள் என்று பொத்தாம் பொதுவாக முடித்து விட்டு அடுத்தக் கேளிக்கை விசயத்தில் ஈடுபட்டு முதலில் நடந்ததை மறந்து விடுகின்றோம். 

நாம் விரும்பும் மாற்றம் என்னில் இருந்து தொடங்க வேண்டும். என் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். நான் பணிபுரியும் இடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். 

அது சிறியதோ பெரியதோ, பாதிப்பை உருவாக்குமோ உருவாக்காதோ? எது குறித்தும் நான் கவலைப்பட்டதில்லை. அதற்கு ஆதரவு கிடைக்குமோ? என்று நான் அச்சப்பட்டதில்லை. மற்றவர்களின் பார்வையில் அது எப்படித் தெரியுமோ? என்பது குறித்தும் அலட்டிக் கொள்வதில்லை. முதல் அடியை எடுத்து வைக்காமல் எந்தப் பாதையின் பயணமும் தொடங்குவதில்லை. 

தேர்தல் பார்வையாளர்? 

வருடந்தோறும் நடத்தப்பட வேண்டிய ஒவ்வொரு அமைப்பிற்கும் உரிய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மனிதவளத் துறை மேலாளர் என்னிடம் வந்து கோரிக்கை வைத்த போது மனதிற்குள் அந்த விபரித ஆசை வந்தது. விட்டுக்கொடுத்தல் மூலம் தகுதியானவர்களை ஆதரிப்பார்களா? என்ற எண்ணம் உருவானது. 

கூடவே அச்சமும் உருவானது. காரணம் நான் தான் தேர்தல் பார்வையாளர். 

என்னவொரு ஆச்சரியம்? 

நடந்த ஏழு அமைப்பு ரீதியான தேர்தலிலும் ஓட்டுச்சீட்டு முறை ஒழிக்கப்பட்டுக் கை தூக்கி ஆதரவு முறை உருவாக்க முடிந்தது. கூடவே கூச்சல் குழப்பமின்றி, கையூட்டு இல்லாமல், 144 தடையுத்தரவு போட்டுப் பணம் கடத்த ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லாமல் அத்தனை பதவிகளுக்கும் போட்டியின்றி ஒவ்வொரு தொழிலாளர்களும் அவர்களாகவே விட்டுக் கொடுத்தல் மூலம் தலா மூன்று பதவிகள் ஒவ்வொரு அமைப்புக்கும் தேர்ந்தெடுத்தல் இன்று நடந்து முடிந்தது. 

#விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போனதில்லை. 

############### 

மனதிற்குள் வைத்திருந்த மற்றொரு விசயத்தையும் இன்று சாதிக்க முடிந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி மற்றும் இரத்தப் பரிசோதனை முகாம் நடத்தி தொழிலாளர்களுக்குப் புதிய பாதையை உருவாக்க முடிந்தது. பரிசோதனை செய்த எல்லோருமே நெகடிவ் தான் என்று பரிசோதித்தவர் ரகசியமாக (என்னிடம் மட்டும்) வந்து சொல்லிவிட்டுச் சென்ற போது உருவான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஒவ்வொருவரும் தயக்கத்துடன் தடுமாறி தவித்த போது நானே முதல் ஆளாகச் சென்று ரத்த மாதிரி கொடுத்த பிறகே ஒவ்வொருவரும் வரிசையாக வரத் தொடங்கினர். 

#தவறான பாதை தொடக்கத்தில் இனிக்கும். பிறகு வாழ்க்கை நம்மைப் பார்த்து சிரிக்கும். 








Sunday, June 01, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 3


தேர்தல் நடந்த நாள் மட்டுமல்ல முந்தைய வாரங்களிலும் வீட்டில் யாருமில்லை. வீட்டில் இருந்த நான்கு பெண்களும் கோடை விடுமுறையைக் கொண்டாட முறை வைத்து ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தனர். வீடே மயான அமைதி போல இருந்தது. இது போன்ற சமயங்களில் என் தனிப்பட்ட சோம்பேறித்தனமாகக் குணாதிசியங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். 

வீட்டில் எந்த இடத்தில் எதை வைத்தோம்? என்று மறந்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதெல்லாம் நான்கு பேர்களும் சேர்ந்து திட்டிக் கொண்டே எடுத்துக் கொடுப்பார்கள். இப்போது என் வாக்காளர் அடையாள அட்டை எங்கே இருக்கிறது? என்பது ஒரு பெரிய பிரச்சனை உருவாக, மனைவியை அழைத்துக் கேட்ட போது "இந்த இடத்தில் பாருங்க?" என்றார். 

கொடுத்த பூஜையை வாங்கிக் கொண்டே ராகுல் அடுத்த ஐந்து வருடங்கள் இந்தியாவில் இருப்பாரா? இல்லை அவரின் கூட்டாளிகளுடன் அவர் "விருப்பம் சார்ந்த செயல்பாடுகளில்" கவனம் செலுத்துவரா? என்பதை யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன். 

தேர்தல் குறித்துப் படித்த ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துக் கொண்டே தூங்கிய போதிலும் தனிமை என்னைக் கொன்றது. தொழிற்சாலை பரபரப்பில் இருந்தவனுக்கு வீட்டின் அமைதி உறுத்தியது. இது போன்ற சமயங்களில் எனக்கு எப்போதும் உற்ற தோழன் புத்தகங்கள் மட்டுமே. ஆனால் எந்தப் புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கவில்லை.  அமுதவன் புத்தகங்களை படிக்க எடுத்த போதிலும் அடுத்த நாள் அலுவலக வேலைகளுக்கு திட்டமிட வேண்டிய பணிச்சுமைகள் அழுத்திக் கொண்டிருந்தது.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடக்கும். எந்தப் பக்கம் கால் வைத்தாலும் ஏதோவொரு புத்தகம் கிடக்கும். இது தவிர மகள்களின் புத்தகங்கள் அதுவேறு தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும். என் வாசிப்புப் பழக்கம் இப்போது மகள்களுக்கும் வந்து விட்டது. நான் வாங்கிக் கொண்டு வருகின்ற வார இதழ்களையும் இருவர் போட்டி போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். 

தேர்தல் அறிவிப்பு வந்த போது எனக்கு மற்றொரு வகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. வாங்கிக் கொண்டிருந்த அத்தனை வார இதழ்களிலும் பக்கங்கள் அதிகமாகி, பலதரப்பட்ட செய்திகள், யூகங்கள், கற்பனைகள், முடிவுகள், பேட்டிகள் என்று வந்து கொண்டேயிருக்கச் சுவராசியமாக இருந்தது. காசு கொடுத்து வாங்குவதற்குத் தகுதியாகவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் கொடுக்கும் பொய்த்தகவல்களும், புழுகு மூட்டைகளையும் படித்துப் படித்து வெறுப்பாகத் தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் எந்த வார இதழ்களையும் வாங்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தேன். இரவு நேரத்தில் மட்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மட்டும் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுப்பவர்களின் சொற்போர்களைக் கண்டு கொண்டிருந்தேன். 

பல சமயம் சிரிப்பு சில சமயம் ஆச்சரியம் கலந்த அதிசயமாகவும் இருக்கும். எனக்கு விருது கொடுக்கும் அதிகாரம் இருந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணாவுக்குத் தான் கொடுப்பேன். நம்ம நாராயணசாமியை விட ஒருபடி தாண்டி அசராமல் சிக்ஸர் அடித்துக் கொண்டேயிருந்தார். கேட்பவர்கள் சிரிப்பார்களே? என்பதைக்கூட யோசிப்பாரா? மாட்டாரா? என்று ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருந்தார். 

அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகிக் கொண்டிருந்த போது தான் அந்தக் குழப்பம் உருவானது. சென்ற முறை ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் வீட்டுக்கே வந்து எந்தப் பள்ளிக்கூடம் என்பதைத் தெரிவித்து, அவர்கள் கட்சி சின்னம் உள்ள சிறிய சீட்டை கொடுத்து விட்டு சென்றனர். இந்த முறை அது வாங்காத காரணத்தால் எனக்குக் குழப்பமாக இருந்தது. தொழிற்சாலைக்கு விடுமுறை என்ற போதிலும் எனக்கு அலுவலகம் சார்ந்த பல வேலைகள் இருந்த காரணத்தால் சீக்கிரம் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருந்தேன். அப்போது இரண்டு கட்சிகளை நினைக்கத் தோன்றியது. 

ஒன்று கம்யூனிஸ்ட் மக்கள் மற்றொன்று திமுக கட்சிக்காரர்கள். 

இரண்டு கட்சியிலும் அடித்தளம் பலமாக இருக்கும். தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டாமல் தீவிரத்தோடு பணியாற்றுவார்கள். எவராயினும் மரியாதை அளிப்பார்கள். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதில் அளிப்பார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கட்சியிலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரைக்கும் உள்ள அத்தனை பேர்களுமே கட்சியின் கொள்கை சார்ந்த விசயங்களில் பிடிப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் தற்பொழுது மேல் மட்டம் பிரபல தொழில் அதிபர்களாக மாறிவிட் கீழ் மட்டம் "இனிமே இவனுங்கள நம்பி நம் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது" என்று உசாரகிவிட்டனர். 

"முன்பு தோழர்களே அணி திரண்டு வாரீர். நாம் யார் என்று முதலாளிகளுக்குக் காட்ட வேண்டும்" என்று மீன்பாடி வண்டியில் மைக் மூலம் அறைகூவல் விடுத்தால் போதும். திருப்பூர் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம செங்கொடியைத் தான் காணமுடியும். ஆனால் இன்றோ? கூவிக் கூவி அழைத்தாலும் "குடிக்கக் காசு தருவியா?" என்கிற அளவுக்கு மக்களின் மனம் மாறிவிட்டது. 

இவர்களில் யாரோ ஒருவரிடம் சென்றால் நிச்சயம் நம்முடைய சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் சென்றேன். 

நான் சென்ற முறை வாக்களித்த அரசு பள்ளிக்கூடம் இருந்த சந்தில் சென்று பார்த்த போது நினைத்த மாதிரியே அந்த அதிகாலை வேலையில் கம்யூனிஸ்ட் தொண்டர் படை சுறுசுறுப்பாக ஒரு வீட்டின் வாசல்படியில் இருந்து கொண்டு ஓட்டளிக்கச் செல்பவர்களிடம் தங்கள் கட்சி சின்னத்தைச் சொல்லி ஓட்டளிக்கச் சொன்னதோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தனர். 

மற்ற எந்தக் கட்சிகளையும் காணவில்லை. நான் அவர்களிடம் கேட்ட போது வைத்திருந்த மடிக்கணினியில் சோதித்துப் பார்த்து விட்டு எனக்குரிய சீட்டை எழுதி பள்ளியில் எந்த அறையில் சென்று ஓட்டளிக்க வேண்டும் என்பது வரைக்கும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டு மறக்காமல் "கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிங்க தோழரே" என்றார்கள். 

மனதிற்குள் சிரித்துக் கொண்டே திருப்பூர் வாழ்க்கையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாதகப் பாதகங்களை யோசித்துப் பார்த்துக் கொண்டே பள்ளியை நோக்கி நகர்ந்தேன். 

அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்கள். பல நிறுவனங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தார்கள். முதலாளிகளுக்குச் சிம்ம சொப்பமான இருந்தார்கள்.  சங்கத்துகாரர்கள் வருகின்றார்கள் என்றால் ஓடி ஒழிந்த பல முதலாளிகளை எனக்குத் தெரியும்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் என்றால் திருப்பூர் முழுக்க எங்குப் பார்த்தால் சிவப்பு நிறக் கொடிகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொழிலாளர்களுக்கு (அவர்கள் நம்பாத) கடவுளாக இருந்தார்கள். நான் கடந்த கால அனுபவத்தில் இவர்களால் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன். மிரட்டப்பட்டுள்ளேன். 

ஆனாலும் நியாயவான்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. சில்லறைத்தனமான கட்டைப்பஞ்சாயத்துச் செய்து கொண்டிருந்தவர்களைத் தாண்டியும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர பாடுபட்டனர். டாலர் நகரம் புத்தகத்தில் கூட ஒரு அத்தியாயத்தில் இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் கூட மரியாதைக்குரிய தோழர் திருத் தங்கவேல் (சட்டமன்ற உறுப்பினர்) தான் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

ஆனால் இன்று? 

டெபாசிட் வாங்கக்கூட லாயக்கு இல்லாத அளவுக்கு மகத்தான சோக வரலாற்றின் ஒரு அத்தியாயமாக நடந்த 2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது. 

அவர்களின் கொள்கை காலாவதியாகிவிட்டதா? அல்லது தவறான கொள்கையைப் பிடித்துக் கொண்டு இன்றும் தொங்கிக் கொண்டிருக்கின்றார்களா? இல்லை தொழிலாளர்கள் இவர்களை நம்பத்தயாராக இல்லையா? 

அதை விட முக்கியக் காரணம் ஒன்று உண்டு.

சிலரின் பண ஆசைகளுக்காக ஒரு கட்சியின் கொள்கையே ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. தோழர்கள் முதலாளிகாக மாற நினைத்தால் என்ன விளைவு உருவாகும்? என்பதனை மக்கள் நடந்து முடிந்த தேர்தல் மூலம் உணர்த்தி உள்ளனர். இங்கு மட்டுமல்ல. மொத்த இந்தியாவிலும் இப்படித்தான்,

இங்கு நடந்த ஒரு மிகப் பெரிய செல்வந்தரின் திருமணத்தில் சில மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட போது நான் அமர்ந்து இருந்த வரிசைக்கு முந்தைய வரிசையில் இங்குள்ள திமுக, அதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த அத்தனை பெரிய தலைகளும் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். கட்சி ரீதியாகப் பிளவு பட்டு இருந்தனரே தவிர எல்லோருமே ஏதோவொரு வகையில் நெருங்கிய சொந்தங்களாகத்தான் இருந்தனர். 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொன்றும் என் காதிலும் விழுந்து கொண்டே தான் இருந்தது. பரஸ்பரம் கலாய்த்துக் கொண்ட போதிலும் அவர்களின் அந்தரங்க லூட்டிகளும் அவ்வப்போது வார்த்தைகள் வழியாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது. 

ஒரு காலத்தில் பிரபல பேச்சாளராக இருந்தவர் வாரிசை வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைத்து அவர் கட்சிப்பற்றை அவர் பாணியில் காட்டியவரும் அங்கே இருந்தார். இது தவிரத் தொழிலாளர்களின் எட்டுமணி நேரத்தை அதிகப்படுத்தும் பொருட்டு இங்குள்ள முதலாளிக் கூட்டத்தோடு மத்திய அரசிடம் போய் நின்ற காரணத்தால் கட்சி கட்டம் கட்டி வெளியே தூக்கி எறிந்தது. அவரும் அசராமல் "உண்டியல் குலுக்குவது உடம்புக்கு ஆகாது. இதற்கு மேல் கட்சி நம்மைக் கரை சேர்க்காது" என்று திமுகவிற்கு மாறியவரும் அங்கே இருந்தார். 

ஒவ்வொரு தலைகளுக்குப் பின்னாலும் ஓராயிரம் சொத்துக்களைச் சேர்க்க உழைத்த அவர்களின் உழைப்பை புரிந்து கொள்ள முடிந்தது. 

கட்சி தான் தோற்று விட்டது. அவர்களைப் பொறுத்தவரையிலும் தோற்கவில்லை. 

அவரவர் விரும்பிய சொத்துக்களைச் சேர்த்து விட்டனர். காட்சிகள் மாறும் என்று அவர்கள் வாரிகளைக் களம் இறக்குவார்கள். கட்சிக்கு 3000 ஓட்டுக்குள் விழுந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். எந்தப்பக்கம் பொட்டல்காடு உள்ளது. எவரைப் பினாமியாக வைத்து வளைத்துப் போடலாம் என்று வாரிசுகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். 

எப்போதும் போல உண்மையான கம்யூனிஸ்ட் தோழன் ஜிந்தாபாத் என்று தொண்டை தண்ணீர் வற்ற செங்கொடியை ஏந்தி கூட்டத்தில் களைத்துப் போயிருப்பான்.

தொடர்புடைய பதிவுகள்