Friday, May 30, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 2


"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்பதற்காகச் சுற்றறிக்கை வாயிலாகச் சம்பளத்தோடு கூடிய ஒரு நாள் விடுமுறை அளித்த போதிலும் தொழிலாளர்களின் பெரும்பாலனோர் மனதில் "நாம் வாக்களிக்கச் செல்ல வேண்டும்" என்ற எண்ணம் உருவாகவில்லை. இரண்டு காரணங்கள். கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் வேறு எப்படிப் பயன்படுத்தலாம்? அல்லது மினி சுற்றுலாவாகச் சென்றால் அருகே எந்த ஊருக்குச் சென்று வர முடியும்? என்ற எண்ணம் தான் அவர்களின் மனதில் மேலோங்கியிருந்தது. இது போன்ற பல தகவல்கள் என் காதுக்கு வந்து கொண்டேயிருந்தது. 

"நாம் செய்ய வேண்டியதை செய்தாகி விட்டது. இனி அவரவர் விருப்பம்" என்று யோசித்துக் கொண்டே ஒரு நாள் முழுமையாக விடுமுறை கிடைக்கப் போகின்றது என்ற தகவலை மனைவியிடம் அழைத்துச் சொன்னேன். குழந்தைகள் குறுஞ்செய்தி மூலம் தான் பேசிக் கொண்டிருந்தனர். காரணம் தொழிற்சாலையில் புதிய பதவியை ஏற்றதில் இருந்து அவர்களை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டேன் என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. 

இதை ஏற்கனவே நான் உணர்ந்திருந்த போதிலும் "ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்" என்ற கொள்கையின் படி சில மாதங்கள் இப்படித்தான் இருந்தாக வேண்டும். நான் விரும்பிய மாற்றங்கள் சரியானபடி வந்து விட்டால் அதன் பிறகு என் பங்களிப்பு குறைந்து விடும் என்று சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு அலையும் பேரிலையாக என்னை தாக்கிக் கொண்டேயிருந்தது. 

காரணம் தொழிலாளர்களின் மனோநிலை அந்த அளவுக்குச் சீர்கெட்டுப் போயிருந்தது. அவர்களின் உரிமைகளைப் பற்றியும் யோசிக்கத் தெரியவில்லை. அதே போல அவர்களுக்குண்டான கடமைகள் குறித்தும் கண்டு கொள்ளாமல் கிடைத்த வரை லாபம் என்று ஒவ்வொரு துறையிலும் மொன்னையாக "வந்தோம் வேலை செய்தோம்" என்று இருந்தார்களோ ஒழிய ஒரு நாளில் வெளிவர வேண்டிய ஆடைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாகவே இருந்தது. சாட்டையை எடுத்து சொடுக்க ஆரம்பித்தேன். இந்தச் சாட்டையின் மற்றொரு பெயர் அன்பு. 

துறைவாரியாகத் திறமைசாலிகள், உழைப்பின் மேல் ஆர்வம் உள்ளவர்கள், அங்கீகாரம் இல்லாமல் சோர்ந்து போயிருந்தவர்கள் போன்ற பலரையும் அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் தற்பொழுது வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம், ஆனால் உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளம் போன்றவற்றைப் புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் பணிபுரிந்தால் அவரின் வாரச்சம்பளம் என்ன கிடைக்கும்? அதே சமயம் பல காரணங்களால் எட்டு மணி நேரம் பணிபுரியும் போது ஒரு மாதத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைக்கும்? என்பதைப் புரிய வைக்க இந்த அணுகுமுறை ஒவ்வொரு இடத்திலும் பட்டு எதிரொலித்தது. 

இது தவிர விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருபவர்கள், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஊக்கத் தொகை என்று ஒவ்வொன்றாக நான் உருவாக்கிய தொழிலாளர்கள் சார்ந்த ஒவ்வொரு செயல்பாடுகளும் பேக்டரி மேனேஜர் பதவியில் இருந்தவருக்கு உற்சாகத்தை அளிக்க அவர் பங்குக்குக் களத்தில் சூறாவளியாகப் பயணிக்கத் தொடங்கினார். மறுமலர்ச்சியின் அடுத்த அத்தியாயம் உருவாகத் தொடங்கியது. வாரந்தோறும் 1500க்கு குறைவாக வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எளிதாக 3000 ரூபாய் அளவுக்கு எகிற, இது அடுத்தடுத்து பல விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. ஒவ்வொரு துறையும் விரைவாகச் செயல்படக் காரணமாக அமைந்தது. 

ஒரு துறை மற்றொரு துறையோடு சம்மந்தப்பட்டு இருக்கும். ஒரு துறை வேகமாகச் செயல்படும் போது அடுத்தத் துறையும் செயல்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. ஒருவரின் சம்பளம் அடுத்தவருக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவரும் வேலையில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் தடுமாறத் தொடங்கினர். 

சிலர் அவர்களாகவே "இனி இங்கே காலம் தள்ள முடியாது" என்று வெளியேறத் தொடங்கினர். அவர்களின் இடத்தில் புதியவர்களைக் கொண்டு வந்து அமர்த்த இன்னும் வேகம் அதிகமாகத் தொடங்கியது. இந்தச் சமயத்தில் தான் பேக்டரி மேனேஜர் என்னிடம் வந்து சொன்னார். 

"தேர்தலுக்குச் செல்பவர்களின் இத்தனை பேர்கள் நிச்சயம் திரும்பி வர மாட்டார்கள்" என்றார். அவர் வைத்திருந்த பட்டியலைப் பார்த்த போது தலை சுற்றியது. காரணம் 50க்கும் மேற்பட்ட பெண்கள். வயதைப் பார்த்த போது 20 வயதுக்கு அருகே இருந்தார்கள். இதைவிட அவர்கள் அத்தனை பேர்களும் முதல்முறையாக வாக்களிக்கப் போகின்றவர்கள். 

"ஏன் திரும்பி வரமாட்டார்கள்? வேறெதும் பிரச்சனையா?" என்றேன். 

"அத்தனை பேர்களும் காதலில் சிக்கியவர்கள். பசங்க இடையில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். நானும் எல்லா இடத்திலும் செக் பாயிண்ட் வைத்திருந்தேன். இப்பொழுது நீங்க பல இடங்களில் திறந்து விட்டுட்டீங்க. இனி அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது?" என்றார், 

பேக்டரி மேனேஜர் மண்ணின் மைந்தர். அதே குணம். மனம். திடம். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் அதிகாரத் தோரணையாகவே வரும். 

மற்றொரு பிரச்சனை ஒரு நாள் உற்பத்தி குறையும் போது என் கேள்விகளை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும். நான் சிரித்துக் கொண்டே கத்தியை ஆழத்தில் குத்தி வெளியே எடுக்கும் போது அவர் என் மேல் காட்ட முடியாத கோபத்தை உற்பத்தியில் காட்டியே வேண்டிய நிலையில் இருந்தாக வேண்டும். 

நான் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயலும் அவருக்கு எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது. 

காரணம் ஒரு தொழிலாளி ஒரு இடத்தில் இல்லையென்றால் அதன் பாதிப்பு பல இடங்களில் எதிரொலிக்கும்.  சங்கிலித் தொடர் அறுந்து போய்விடும். தொழிற்சாலை சார்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஒவ்வொரு அலுவலக ஊழியர்களுக்கும் நான் "டெரர் பாண்டியனாக" இருந்தேனே தவிரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் "இவர் நமக்கு நல்லது செய்ய முயற்சிக்கின்றார்" என்ற எண்ணத்தை மெதுமெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தேன். 

"ஏனுங்க காதலிப்பது தவறா?" என்றேன். 

அவருக்குக் கோபம் அதிகமாக "இவங்க செய்வது காதல் இல்லைங்க. அது வேற" என்று பல உதாரணங்களைக் காட்டி புலம்பித் தள்ளிவிட்டார். 

அவர் சுட்டிக் காட்டிய பல சுவராசிய சம்பவங்களை மனதிற்குள் ரசித்துக் கேட்டுக் கொண்ட போதிலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அடுத்தச் சுற்றறிக்கை ஒன்றை தயார் செய்யச் சென்னேன். 

"எல்லோருக்கும் விடுமுறை என்பது கட்டாயம். ஆனால் ஊருக்குச் சென்று ஓட்டளித்து விட்டு வருபவர்களின் பெருவிரல் மை சோதிக்கப்படும். மனிதவளத்துறை மூலம் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு மட்டும் சம்பளம். மற்றவர்களுக்குச் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டுமே". 

இது முறையற்ற செயல் என்ற போதிலும் குறிப்பாக விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அத்தனை பேர்களும் கட்டாயம் அவரவர் வீட்டுக்குச் சென்று பத்திரமாகப் பணிக்கு திரும்பி வர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. 

இதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் வீட்டில் இருந்து எனக்கே நேரிடையாகப் பல அலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கியது. அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே மாதிரியாகவே இருந்தது. 

"என் பெண்/பையனை அவசியம் அனுப்பி வைங்க. இல்லைன்னா எங்களுக்குப் பிரச்சனை ஆயிடும்" என்றார்கள். 

தொடக்கத்தில் இது வினோதமாகத் தெரிந்தது.

என்னடா இது? ஓட்டளிக்க இத்தனை ஆர்வமா என்று மேற்கொண்டு அடுத்தடுத்து விசாரிக்க நடுவட்டம், தொட்டபேட்டா தொடங்கிச் சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ள ஒவ்வொரு சிறிய சிறிய கிராமங்களையும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் விலை கொடுத்து வாங்கிய ரகசியம் புரிந்தது. 

பாவம் அப்படியும் அவர் தோற்றுவிட்டார். 

இதை விட மற்றொரு ஆச்சரியம் என்னவென்றார் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரும், கட்சியில் உள்ள முக்கியத் தலைகளும் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிவிட்டனர். 

ராஜா எப்போதும் ராஜா தான். 

அதனால் தான் நீலகிரி மாவட்ட வாக்காளர்களில் அதிகமானோர் நோட்டோ வில் கும்மாங்குத்து குத்தி அவரைக் கூஜாவாக மாற்றிவிட்டனர். இது தவிர மற்றவர்கள் "எப்ப அப்பன் ஆயி காலத்திலிருந்தே ரெட்ட இல தான்" என்ற எண்ணத்தில் மாறாமல் சிந்தாமல் சிதறாமல் பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, May 28, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும் 1

நான் பணிபுரியும் நிறுவனத்தில் எனது நேரிடையான கட்டுப்பாட்டில் 2000 பேர்களும், மறைமுகமாக 3000 பேர்களும் உள்ளனர். இது தவிர ஏனைய துறை சார்ந்து பல பிரிவுகள் உள்ளன. வாரத்தில் ஏதோ ஒரு நாளில் ஏதோவொரு விசயத்திற்காக ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளனர். 

ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை அல்லது அலுவலகத்தின் உள்ளே நுழைந்தால் வெளியுலகம் மற்றும் குடும்பம் அனைத்தையும் மறந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் இருப்போம். 

காரணம் அடுத்தடுத்து அலை அடித்துக் கொண்டேயிருக்கும். 

தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழ் எத்தனை விதமான தட்டுக்கள் இருக்க முடியுமோ அதன்படி எல்லாத்தட்டு மக்களும் இருப்பதால் தினந்தோறும் உருவாகும் பஞ்சாயத்துக்குப் பஞ்சமிருக்காது. சுவாரசியமான நிகழ்வுகள், ஆச்சரியமான, அவஸ்தையான அனுபவங்கள் தினந்தோறும் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது.  

எழுத்தாளர்கள் சிலாகித்துப் பேசும் இலக்கிய வாசிப்பைத் தாண்டிய அனுபவமிது. ரத்தமும், சதையும், வியர்வையும் அழுக்கும் கலந்த உண்மையான வாழ்வியல் தத்துவங்களை இங்கிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு ஆய்த்த ஆடை தொழிற்சாலை என்பதும், அது (ஏற்றுமதி) சார்ந்த நடவடிக்கைகள் என்பதும் ஒரு தினப்பொழுதில் நம்மை ஒரு நிமிடம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர விடாமல் கட்டுப்போட்டுவிடும் வல்லமை கொண்டது. அதிகமான கோடிகள் புழங்கும் இடம். நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். திருப்பூரில் வாரச்சம்பளம் என்பது மிகப் பெரிய சவால். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு தொழிலாளர்களும் தீபாவளி. ஆனால் முதலாளிகளைப் பொறுத்தவரையிலும் அன்று மாலை சம்பளப்பட்டுவாடா முடித்துப் பெருமூச்சு விட வேண்டிய தினம். 

ஒவ்வொரு சிறிய பொறியும் கொழுந்து விட்டு எரியக்கூடிய வாய்ப்புள்ளதால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு காதுகளை மட்டும் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை. 

ஒவ்வொரு பெரிய நிறுவனத்திலும் முதலாளிக்கு அடுத்து இரண்டு பெரிய தலைகள் உண்டு. 

ஒன்று மொத்த நிர்வாகத்திற்கும் பொறுப்பான தலை (ADMINISTRATION  - G.M.) அடுத்த மொத்த உற்பத்திக்கும் உண்டான தலை (PRODUCTION - G.M.). இரண்டுமே முக்கியமான பதவி என்றபோதிலும் உற்பத்திக்கு பொறுப்பான தலை தறுதலையாக அமையும் பட்சத்தில் முதலாளிக்கு பண ரீதியான பிரச்சனைகளை உருவாக்குவது மட்டுமல்ல. உள்ளே இருக்கும் மொத்த தொழிலாளர்களும் தினந்தோறும் நரகாசூரனிடம் சிக்கியவர்களாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 

தொடக்கத்தில் நிர்வாக (ADMN.) பொறுப்பில் இருந்த போது மூச்சு விட நிறைய நேரம் கிடைத்தது. தினந்தோறும் கோப்புகளோடு உறவாடிக் கொண்டிருந்தேன். என் விருப்பம் சார்ந்த அத்தனை செயல்பாடுகளுக்கும் நேரம் கிடைத்தது. ஆனால் நாலைந்து மாதங்களுக்கு முன் உற்பத்தித் துறையில் இருந்தவரின் திறமையற்ற செயல்பாட்டின் காரணமாக நிறுவனம் படிப்படியாக மூத்திரச் சந்துக்குள் சிக்கியவனின் நிலைபோலத் தடுமாறத் தொடங்கியது. 

நிர்வாகம் விழித்துக் கொண்டது. உற்பத்தி மற்றும் நிர்வாகம் இரண்டிலும் என் அனுபவத்தைப் பற்றி உணர்ந்த நிர்வாகம் என்னைக் கரைத்து உற்பத்தி என்ற கடலுக்குள் தள்ளிவிட நான் அப்போது அவர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை "என்னிடம் பொறுப்பு கொடுத்து விட்டால் வேறு எவரும் எதிலும் தலையிடக்கூடாது "என்பதே. 

திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனத்திலும் நிர்வாகம் என்பதும், அதன் ஆதார கொள்கை என்பதும் "எப்போதும் ஒவ்வொரு விசயத்திலும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிரு" என்பதே. காரணம் எத்தனை கோடிகள் புழங்கிக் கொண்டேயிருந்தாலும் இன்று வரையிலும் இங்குள்ள நிர்வாகம் என்பது குடிசைத் தொழில் போலவே நடந்து கொண்டிருக்கின்றது. காரணம் தொழில் என்பதையும் குடும்பம் என்பதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருக்கும் முதல் தலைமுறை பணக்காரர்கள் இவர்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு துறையிலும் கலந்தே இருப்பார்கள். 

இதுவொரு மிகப் பெரிய சவாலான அதைவிட அவஸ்த்தையான பிரச்சனைகளை அதிக அளவு உருவாக்கக்கூடிய ஒன்று. தெளிய வைத்து தெளிய வைத்து அடி விழுந்து கொண்டேயிருக்கும். நம் மேல் விழும் அடியை பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தப்பக்கம் திரும்பினாலும் குற்றம் என்கிற ரீதியில் நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் தினந்தோறும் முழி பிதுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். 

முக்கிய முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும். எடுக்காமல் இருக்கவும் முடியாது. 

நிர்வாகம் மற்றும் உற்பத்தி இரண்டு துறையிலும் காசு அதிகம் புழங்கினாலும் உற்பத்தித்துறையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்குவதால் ஊழலுக்குப் பஞ்சமிருக்காது. இந்தப் பதவியில் பெரும்பாலான நிறுவனங்களின் அவர்களின் உறவு சார்ந்தவர்கள் மட்டுமே அமர்த்தப்படுவார்கள். ஆனால் கட்டங்கள் மாறி என்னைக் கட்டத்திற்குள் கொண்டு நிறுத்தி, பட்டி மாடு போல சமாதானப்படுத்தி அடைத்தார்கள்.   நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். நானும் மகிழ்ச்சியாகத்தான் ஏற்றுக் கொண்டேன். நமக்குத்தான் பஞ்சாயத்துக்கு நாட்டாமையாக இருப்பது பாயசம் சாப்பிடுவது போலத்தானே?

என் வேகத்தின் காரணமாக அவர்கள் இலக்கு நிர்ணயித்த மூன்று மாதத்தில் கிடைக்க வேண்டிய பலன்கள் ஒரே மாதத்தில் கிடைக்க என் தனிப்பட்ட அதிகாரத்தில் குறுக்கீடு செய்து கொண்டிருந்த நிர்வாகத்தின் உறவுக்கூட்டம் சார்ந்த அத்தனை பேர்களை "நீங்கள் அத்தனை பேர்களும் ஒதுங்கி நின்று கொள்ளுங்க. இனி அவர் பார்த்துக் கொள்வார்" என்று நிர்வாகம் கட்டளையிட காற்றுச் சுகமாக வீசத் தொடங்கியது. 

என் சுவாசம் சீரானது. 

சுதந்திரம் என்பது முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒரு கோரிக்கையாக வைத்த போது நிர்வாகம் மிரண்டு போனது. அதாவது நிர்வாகம், உற்பத்தி இரண்டுக்கும் நானே ராஜா போல இருந்தால் வேறு சில காரியங்களை என் வேகத்தின்படி விரைவாக முடிக்க வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்த போது மொத்த நிர்வாகமும் மிரண்டு போனது. காரணம் நிர்வாகத்தின் முதல் தலையாக ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி இருக்க அவரின் பழைமையாகப் பஞ்சாங்க செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் எனக்குப் பல இடர்பாடுகளை உருவாக்கிக் கொண்டேயிருந்தது. 

"உழைப்பவனுக்கு உண்மையான சலுகைகள் கிடைத்தே ஆக வேண்டும்" என்பது என் கோரிக்கை. யார் உழைப்பவர்? யார் உழைக்காதவர் என்பதை நிர்வாகம் பார்ப்பவர் முடிவு செய்ய முடியாது? நான் தான் அதையும் முடிவு செய்வேன் என்ற போது பெரிய சலசலப்பு உருவானது. 

இது எங்கும் இல்லாத அதிசயம். என் பிடிவாதம் அவர்களுக்குப் பல பயத்தை உருவாகத் தொடங்கியது. செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு கிளம்பி விடுவேனோ என்று பயந்து போய்க் குறிப்பிட்ட சில வாரங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். சிலவற்றைச் சோதிக்க, பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நான் எதிர்பார்ப்பது சரியே என்பதை உணர்ந்து கொண்டு நிர்வாகம், உற்பத்தி இரண்டையும் என்னிடம் கொடுக்கச் சம்மதித்தது, மொத்த நிர்வாகத்தின் பாதியை என் கையில் கொடுத்து மற்றொரு பகுதியை வேறொரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள். 

ஏறக்குறைய 5000 பேர்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் ஐம்பது சதவிகித நிர்வாகத்தின் மொத்த பொறுப்புக்கும் நானே ராஜா. நானே மந்திரி. நான் எடுக்கும் இறுதி முடிவுகள் சார்ந்து தற்பொழுது நிர்வாகம் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. காரணம் மிகப் பெரிய பிரிவுகள் அனைத்தும் என் கைவசம். இங்கிருந்து உற்பத்தி செய்து செல்ல வேண்டிய ஆடைகள் பொறுத்தே நிர்வாகத்தின் நிதி நெருக்கடிகள் குறையும் என்ற நிலையில் இருப்பதால் சவாலான வேலைகளை தற்பொழுது சந்தோஷமாக செய்து கொண்டிருக்கின்றேன்.

வருடந்தோறும் முக்கியமான அரசு அறிவிப்பின்படி விட வேண்டிய விடுமுறை தினங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்த நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடம் இருந்து என்னிடம் பொறுப்புகள் வந்து சேர்ந்த போது 2014 பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நான் செய்தே முதல் பணி சுற்றறிக்கையின் மூலம் அன்றைய தினம் சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம். அன்று அனைவரும் ஊரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொழிலாளர்களிடத்தில் கையெழுத்து வாங்கச் சொன்னேன். 

அப்போது உள்ளே இருக்கும் தொழிலாளர்கள், அலுவலம் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் தேர்தல் குறித்த எண்ணங்கள், கட்சி குறித்த அபிமானங்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரிடமும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பேசி தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

Monday, May 26, 2014

மெஜாரிட்டியும் மைனாரிட்டியும்


இன்றைய சூழ்நிலையில் எழுதவே வாய்ப்பில்லாத நிலை என்ற போதிலும் சென்ற பதிவில் நண்பர்கள் எழுதி வைத்த விமர்சனத்தைப் பார்த்தவுடன் மறுபடியும் எழுதியே ஆக வேண்டும் என்று இந்தப் பதிவை எழுதுகின்றேன். நடந்து முடிந்த தேர்தல் குறித்து இன்னும் சில வாரங்கள் கழித்து எழுதினால் அது பழங்கஞ்சி ஆகவிடும் ஆபத்துள்ளதால் சிலவற்றைச் சில பதிவுகள் மூலம் (இந்திய பாரளுமன்றத் தேர்தல் 2014) என் பார்வையை எழுதி வைக்க விரும்புகின்றேன். 

இப்போது எங்குப் பார்த்தாலும் மோடி புகழ் மட்டுமே எட்டுத்திசையிலும் சுடரொளி விட்டுப் பறக்கின்றது. மோடி ஜெயித்தது எப்படி? என்று தொடங்கிய ஜெயிக்கக் காரணமாக இருந்தவைகள் என்ன? என்பது வரைக்கும் எல்லா இடங்களிலும் அலசப்படுகின்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன அத்தனை பேர்களும் வீணர்கள் என்றும் அதற்கான காரணங்கள் என்று ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த கதை வசனத்தில் கட்டுரைகளாக எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள். 

வரலாறு எப்போதுமே கொஞ்சம் பிரச்சனையான சமாச்சாரம் தான். இல்லை என்பதை இருப்பதாகக் காட்டிவிடும். இருப்பதை இல்லையென்று வெளிப்படுத்திவிடும். அதனால் தான் வெற்றிபெற்றவனின் வாக்கு வேதவாக்காக மாறிவிடுகின்றது. தோற்றவர்களின் நியாயங்கள் கேலிக்கூத்தாக மாறிவிடுகின்றது.  

கடந்த பத்தாண்டுகளில் சோனியா குடும்பக் கும்பல் இந்திய நாட்டைச் சுரண்டி சேர்த்த சொத்து வண்டவாளங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிவந்து விடும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். 

நடந்து முடிந்த தேர்தலை நான் எப்படி உள்வாங்கினேன்? காங்கிரஸின் தோல்வி மற்றும் மோடியின் வெற்றியை எப்படி உணர்கின்றேன்? மாநில அரசியலில் ஜெயலலிதாவுக்கு எப்படி இப்படியொரு ஆதரவு கிடைத்தது? என்பதையும் இங்கே எழுதி வைத்து விட விரும்புகின்றேன். 

நாலைந்து பதிவுகளாக வெளியிடுகின்றேன். முழுமையாகப் படித்து விட்டு உங்கள் விமர்சனத்தைத் தெரிவிக்கலாம். 

சமூகத் தளங்கள் மற்றும் வலைதளங்களில் மதம்,சாதி,அரசியல் என்ற இந்த மூன்றையும் தொடாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்குத் தான் பலரும் இருக்கின்றனர். படிப்பவர் எழுதுபவர் என இருவருக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடிய காரணக் காரியங்கள் இருப்பதால் பெரும்பாலோனோர் நாம் ஏன் இதைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டும் என்று ஒதுங்கி விடுகின்றனர். சிலரோ எழுதிய பின்பு உருவாகும் எதிர்ப்பலைகள், கிடைக்கும் மோசமான விமர்சனங்கள், உருவாக்கப்படும் முத்திரைகள் காரணமாக நழுவலாகவும் நகர்ந்து விடுவதுண்டு. 

நாம் தான் எப்போதும் வம்பை விலைகொடுத்து வாங்குகின்ற ஆளாச்சே? 

இந்தச் சமயத்தில் தேர்தலுக்கு முன் மற்றும் தேர்தலுக்குப் பின் என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வழியே நான் உணர்ந்து கொண்டே விதத்தை அப்படியே தந்து விடுகின்றேன். 

இந்த நிமிடம் வரைக்கும் குறிப்பிட்ட கட்சி அல்லது அவர்களது கொள்கைகள், தலைவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுகின்ற யோக்கியவான்கள் மேல் எவ்வித நல்ல அபிப்பராயமும் அற்றவன். 

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. அதேபோல எல்லாவற்றிலும் தீமைகளும் கலந்தே உள்ளது என்ற எதார்த்தத்தை உணர்ந்தே இருக்கின்றேன்.  

சம காலச் சமூகத்தில் அதிக அளவு தாக்கத்தை உருவாக்கும் ஒவ்வொரு விசயத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டு அதன் ஒவ்வொரு நகர்தலையும் தனிப்பட்ட விருப்பத்துடன் கவனிப்பதுண்டு. ஆச்சரியங்களை மனதில் குறித்துக் கொள்வதுண்டு. ஒவ்வொன்றையும் துணுக்குத் தோரணங்களாக இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன். 

எழுதத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் என்பதால் சிறிய தொடர் போல அரசியல் சார்ந்த சிலவற்றை அனுபவப் பகிர்வாக எழுத விரும்புகின்றேன்.

Saturday, May 17, 2014

(தேர்தல்) திருவிழாக்களில் தொலைந்து போனவர்கள்

தேர்தல் 2014 கொண்டாட்டம் முடிந்தது விட்டது. ஆமாம். உண்மையிலேயே இதுவொரு திருவிழா கொண்டாட்டம் தான். திருவிழாவில் அலங்காரம் செய்து ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் பலதரப்பட்ட சாமி சிலைகள் போல ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வேடிக்கை காட்டி அடுத்த ஐந்து வருடங்கள் காணாமல் போய்விடும் (ஜனநாயக) திருவிழா. 

இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சம்மந்தம் இல்லை. அரசியல்வாதிகள் எப்போதும் போல அவர்களின் மூதலீடு குறித்த கவலைகளில் உழைக்கத் தொடங்குவர். இதைப்போல இந்திய ஜனநாயகத்தின் ஆட்டுவிப்பவர்களாக உள்ள அதிகாரவர்க்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சோளக் கொள்ளை பொம்மைகளை வேடிக்கை பொருளாகப் பார்த்துக் கொண்டிருப்பர். 

மக்களாட்சி என்ற பெயரில் மக்களுக்கும், மக்கள் விரும்பும் நலவாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. எட்டாக்கனியை ஏக்கத்துடன் பார்த்து அடுத்த ஐந்து வருடத்திற்கு மக்கள் காத்திருப்பர். இப்போது வந்துள்ள நரேந்திர மோடி போல வேறொரு தேவ தூதனுக்காகக் காத்திருப்பர். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்த வருடம் தேர்தல் குறித்து, எண்ணிய எண்ணங்களை எழுத்தாக மாற்ற எண்ணம் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் பலதரப்பட்ட பதிவுகளை, இணையப் பத்திரிக்கைகளை அமைதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கும், இப்போது இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் வெளியே தெரியாத முகம் போன்றவற்றைப் பல நண்பர்களிடம் உரையாடல் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையான அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் உள்ள உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

நிறையப் பலதரப்பட்ட சமூகம் சார்ந்த பல சிந்தனைகளைப் பதிவுகளின் வாயிலாக விதைக்க முடிந்ததுள்ளதை நினைத்து மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சி இருந்த போதிலும் செயலாக்கத்தில் நாம் என்ன சாதித்து உள்ளோம் என்ற எண்ணம் மட்டும் இடைவிடாது மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. நாம் இருக்கும் இடத்தை, பணியாற்றும் சூழ்நிலையில் சில நல்ல காரியங்களைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் உருவாகி அது சார்ந்த விசயங்களைக் கவனம் எடுத்து செய்து கொண்டு வருகின்றேன். அது குறித்து விரைவில் எழுதுகின்றேன். 

பதிவில் எழுதாத சமயங்களில் மற்ற சமூகத் தளங்களில் குறிப்பாக முகநூலில் மட்டும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்து அதன் நீக்கு போக்குகளைக் கவனித்து வந்தேன். அப்போது நான் ரசித்த படமிது. 

***
ஒருவர் எழுதிய பதிவை முதல் ஆளாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் எழுதி வைக்க வேண்டிய விமர்சனம் இருந்தால் கட்டாயம் எழுதி வைத்து விட்டு வந்து விடுவதுண்டு. 

தாமதமாக உள்ளே நுழைந்தால் கட்டாயம் முதலில் அந்தப் பதிவுக்கு வந்த விமர்சனங்களைப் படித்து விட்டு அந்தப் பதிவை படிப்பதுண்டு. இதன் மூலம் எழுதியவரின் உழைப்புக்கு, அவரின் சிந்தனைக்குக் கிடைத்த மரியாதையைப் படித்தவர்கள் எந்த அளவுக்கு அங்கீகரித்துள்ளனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். மற்றபடி கும்மி, ஆஜர், த.ம போன்றவற்றை வேடிக்கையாளனாகப் பார்த்து ரசிப்பதுண்டு. 

ஆனால் நடந்து முடிந்த தேர்தல் குறித்து நான் பதிவுகளில்,இணையதளச் செய்தித் தாளில் பார்த்த சில விமர்சனங்களை இந்தச் சமயத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வர வேண்டும் என்று விரும்பினேன். நடந்துள்ளது. தமிழகத்தில் வைகோ ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை.

வைகோ தோற்று விடுவார் என்று ஒருவர் கிரி பதிவில் எழுதியிருந்தார் என்பதை விட அதற்கான காரணத்தை அவர் எழுதியிருந்தார்.

ஆச்சரியமாக இருந்தது. அது தான் நடந்துள்ளது. 

வலைபதிவில் எழுதுபவர்களை விட எப்போதும் வாசிப்பாளர்கள் புத்திசாலிகள் என்ற கருத்து என் மனதில் மேலும் வலுப்பெற்று உள்ளது. 


காத்தவராயன் May 15, 2014 at 6:36 PM

கிரி,

நாளை தேர்தல் முடிவுகள் வருகின்றன. தொகுதிக்காரன் என்ற முறையில் கூறுகிறேன். இந்த தேர்தல் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் வைகோ “விருதுநகர்” பாராளுமன்ற தொகுதியில் வெல்ல முடியாது. காரணத்தை கூறுகிறேன்.

40 தொகுதியில் வைகோ விருதுநகரை[முன்பு சிவகாசி] மட்டும் தேர்வு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கும்.

சிவகாசி தொகுதியாக இருந்தபோது இந்த தொகுதியில் நாயக்கர்,நாடார்,தேவர்,தாழ்த்தப்பட்டோர் என்ற வரிசையில் வாக்கு வங்கி இருந்தது; நாயக்கர் சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவுடன் வைகோ எளிதில் வெற்றி பெற்றார்.

தொகுதி சீரமைப்பில் வைகோவை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காகவே நாயக்கர் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் “கோவில்பட்டி” சட்டமன்ற தொகுதியை தூத்துக்குடியிலும், நாயக்கர் சமுதாய மக்கள் கணிசமாக இருக்கும்”ராஜபாளையம்-திருவில்லிபுத்தூர்” ஆகிய சட்டமன்ற தொதிகளை தென்காசியில் சேர்த்து நாயக்கர் ஓட்டுக்களை சிதறடித்துவிட்டனர்.

தற்போதைய தொகுதி நிலவரம் தேவர்,நாடார்,தாழ்த்தப்பட்டேர்,நாயக்கர் என்ற வரிசையில் உள்ளது.

அ.தி.மு.க, காங்கிரஸ் – தேவர்
தி.மு.க – நாடார்
பி.ஜே.பி – நாயக்கர்

திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் ஏரியாவில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயர் ஓரளவுக்கு உள்ளது. இவர் தேவர் ஓட்டுக்களை பிரிக்கும் பட்சத்தில் தி.மு.க எளிதில் வெல்லும். அப்படி நடக்காவிட்டால் அ.தி.மு.க வெல்லும்.

வைகோவிற்கு மூன்றாவது இடம்தான்.


THIRUMOORTHI from Coimbatore 

வைகோ விருதுநகரில் தோற்றது, தோல்வி வைகோவிற்கு அல்ல, மக்களுக்கே. இதற்காக வைகோ அவர்களின் மக்கள் பணி மேலும் வேகமாகப் பயணிக்கவேண்டும். வெற்றியும் தோல்வியும் போராட்டகாரனுக்கு என்றுமே இல்லை.

***

திமுகக் குறித்து எழுத்தாளர் அமுதவன் பதிவில் விமர்சனமாக மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாக எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் நண்பர் ராஜா கலைஞர் குறித்துச் சிலம்பாட்டம் சுற்றியிருந்தார். ஆனால் எங்களை விட ஹிண்டு தமிழ் செய்தித்தாளில் வந்த கட்டுரைக்கு ஒருவர் எழுதியிருந்த விமர்சனமிது.

Sundaram

கலைஞர் இவரது வாழ்கை துவக்கத்தில் தமிழுக்கு வாழ்ந்தார் பிறகு கட்சிக்கு வாழ்ந்தார். தனது எஞ்சிய களத்தில் குடும்பத்தினருக்கு வாழ்ந்து, தான் இதுகாறும் வாழ்ந்து தமிழர்களுக்குச் சேர்த்திய பெருமைகளைப் பரம பதம் படத்தில் உள்ள பாம்பு தீண்டி கீழ விடுவிடு என இறங்குவது போல் அடி நிலையிக்கு வந்து விட்டார். அடுத்த மாதம் இவரது பிறந்த நாள் வருகிறது, தனது குடும்பச் சாதனைகளுக்கு ஒரு பட்டியலும், தமிழர்களுக்குச் செய்த துரோகத்திற்கு ஒரு பட்டியலும் தயாரித்து, செய்த துரோகத்திற்குத் தாங்களே ஒரு பிரயத்தனம் தேடி கட்சியை நிரந்தரமாகக் காக்க ஒரு வழி காட்டுங்கள்.

தவறுகளுக்கு வருந்தி தாங்களாகவே விலகிக்கொண்டால் 2016 தேர்தலில் கட்சி பலம் கூடும் .இல்லாவிடில் அறிவாலயத்தில் லியோனி அரட்டை கச்சேரி யை ரசித்துக் கொண்டே , எஞ்சிய காலத்தைக் குடும்பத்தினருடன் கழிக்கவே நேரிடும்! தளபதி, அஞ்சாநெஞ்சன் ஒன்று சேரவேண்டும். வாரிசு அரசியலை தவிர்த்து, ,குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழி நடத்தவேண்டும் -சுந்தரம் 

அதேபோல நண்பன் விந்தைமனிதன் ராஜாராமன் ஜெயலலிதா வெற்றி குறித்த விமர்சனப் பார்வையிது. 

இரண்டுமே முற்றிலும் உண்மை. 

எந்தக் கூட்டணிக்கட்சியும் இல்லாம, எந்த பழைய தவறுகளையும் திருத்திக்காம அதே மாதிரி, இங்கிலாந்து மகாராணி மாதிரி உலா வந்தும்கூட மொத்தமா வாரிச் சுருட்டி இருக்காங்க அந்தம்மா... எதிர்த்து நின்னு பேருக்கு ஒத்தை சீட்டுகூட வாங்கமுடியாம, ஓட்டு சதவீதத்தை வெச்சி நாக்கு வழிக்கிறதா?! எதிர்க்கட்சி அந்தஸ்து ஏற்கனவே போச்சு.. இப்போ ஒத்தை எம்.பி சீட்டுக்குக்குக்கூட வழியத்துப் போயாச்சு.. இதுல எதுக்கு வெட்டி ஜபர்தஸ்து?

***

இது தவிர நடந்து முடிந்த தமிழ்நாட்டு தேர்தல் குறித்து (அலங்கோலம்) மற்றொரு நண்பர் எழுதிய கருத்து இது. 

வேதைதமிழன் தமிழன் 

வேதாரண்யம் பகுதியில் ஒரு ஓட்டிற்கு இரு நூறு முதல் ஐநூறு வரை அதி மு கவினர் கொடுத்தனர். அதில் எங்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பிய நான்கு ஒட்டிற்க்கான எண்ணூறு ரூபாய்களை எனது சகோதரர் வேதாரண்யம் பெரிய கோவில் உண்டியலில் போட்டு விட்டு வந்து விட்டார். பணம் கொடுக்கும் விசயம் சம்பந்தமாகத் தேர்தல் அதிகாரியாக வலம் வந்த ஒரு அரசு (இவர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர் 

அலுவலகத்திற்கு வரும் மக்களுக்குப் பணம் எதுவும் வாங்காமல் உதவி அல்லது ஆலோசனை வழங்குபவர் )அதிகாரியிடம் ஒரு தி மு க காரர் கூறியதற்கு ஏன் சார் நான் என்ன பண்ண முடியும் தேர்தல் முடிஞ்சி முடிவு அறிவிக்கும் வரைக்கும் தான் தேர்தல் கமிசன் அதுக்கப்புறம் அந்த அம்மா அரசுக்கு கீழே தான் நாங்க மீண்டும் வேலை பார்க்க வேண்டும் புரிஞ்சுகோங்க முடிந்தால் நீங்களும் கொடுங்க நாங்களும் கண்டும் காணாம இருந்துக்குறோம் அது தான் சார் என்னால பண்ண முடியும் என்று அவர் கூறியது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆகப் பணம் வேலை செய்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். 

•••

http://books.vikatan.com/index.php?bid=366

எனது வாசிப்பில் உள்ள புத்தகமிது. ஒவ்வொருவர் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகமிது. மேலோட்டமாகப் படித்து முடித்து ஜம்பம் அடிக்க முடியாத அளவிற்கு நம் வாழ்க்கைக்கு உதவக்கூடிய நூலை எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ளார். நிச்சயம் சமயம் கிடைக்கும் போது இந்த நூல் குறித்த விமர்சனத்தை எழுதி வைக்க ஆசைப்படுகின்றேன்.


http://books.vikatan.com/index.php?bid=2204