Monday, March 25, 2013

04 மூத்த குடிப் பெருமை

இந்த தொடரின் முந்தைய பகுதிகள்

மொத்த இந்தியர்களுக்கும் இந்திய வரைபடத்தின் கீழே இருக்கும் குமரி முனையைப் போலவே, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம், மொத்த இந்துக்களுக்கும் ஒரு நம்பிக்கை முனை.  இலங்கை தமிழனத்திற்கு இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் போல் வாழ்ந்த மொத்த நூற்றாண்டு காலத்திலும் மற்க்க முடியாத இடம் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டப முகாம்.

வாழச் சென்ற இலங்கைக்கு வழி அனுப்பிய இடமாகவும், வாழ்க்கையை தொலைத்து வந்து இறங்கிக் கொண்டுருபவர்களுக்கு வரவேற்கும் இடமாகவும் இருக்கும் இந்த இராமேஸ்வரம் போல் வேறு எந்த இனத்திற்கும் ஒரே இடம் இருக்குமா? என்பது சந்தேமே. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உருவான பஞ்சத்தில் வாழ வழியில்லாமல் போனவர்களின் காலடித்தடங்களை பதிவு செய்து கொண்டதைப் போலவே வந்து இறங்குபவர்களின் அவலங்களையும் உள் வாங்கிக்கொண்ட இந்த கடல் அலைகள் வந்து மோதும் இராமேஸ்வரம் விஞ்ஞான கால மாற்றத்தில் ரொம்பவே மாறியுள்ளது..  ஆனால் எந்த கால மாற்றமும் இலங்கைத் தமிழர்களின் அவல வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை. 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  

தமிழ்நாட்டிலிருந்து பெயர்ச்சியாய் இலங்கைத்தீவை நோக்கி நகர்ந்தவர்கள், அங்கேயே தலைமுறையாய் வாழ்ந்தவர்கள் என அத்தனை பேர்களும், ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டங்களிலும் பாதி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்று வரையிலும் இங்கே வந்து இறங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் 1980க்கு முன் நீங்கள் பிறந்து இருந்தால் இலங்கையில் இருந்து ஒலிபரப்பான தமிழ் திரை இசை பாடல்களை கேட்டுக்கொண்டு சிறிய செய்திகளாக வந்து கொண்டுருந்த இந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்ட பிரச்சனைகளை இடையில் படித்து இருக்கலாம்.. காலப்போக்கில்  துண்டு துண்டாக சிதைக்கப்பட்ட தமிழர்களின் உடம்பை ரத்தமும் சதையுமாக தாங்கி வந்த ஊடகச் செய்திகள் மொத்தமும் உங்களை உருக்குலைத்துருக்கும். 

அன்றும் இன்றும் தமிழ்நாட்டில் இது வெறும் செய்திகள் மட்டுமே.  ஆனால் தங்களது வாழ்க்கையை, சொந்தங்களை, சொத்துக்களை இழந்து வந்தவர்கள், வல்லத்தில், படகில்,தோணியில் வரும் போதும் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், சுடப்பட்டு இறந்தவர்கள் என்று எத்தனையோ கண்களுக்கு தெரியாத சோகங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. 

உருவான நவீன விஞ்ஞான மாற்றத்தில், மனித உரிமை என்ன என்பதே தெரியாமல் இன்று வரை தமிழ்நாட்டின் கரையை நோக்கி வந்து கொண்டுருக்கிறார்கள். வாழப்போன இடத்தில் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு அகதியாகவும், வாழ்க்கையைத் தேடி வந்த தமிழ்நாட்டிலும் அகதியாகவே மாற்றம் பெற்ற இவர்களின் கண்ணீர் எந்த தெய்வங்களுக்கும் இன்று வரை எட்டவில்லை?

செய்திகள், அறிக்கைகள், போராட்டங்கள் என்று தொடங்கி, தொடர்ந்து வந்த இறுதிக்கட்ட தாக்குதலான முள்ளிவாய்க்கால் (மே 2009) கோரச்சுவட்டின் இறுதியில் வந்து நிற்கிறது.  ஆனால் ஏதோ ஒரு வழியில் இன்னமும் தொடர்ந்து கொண்டுருக்கத்தான் போகின்றது..

ஒரு இனத்தின் வீழ்ச்சியை, அழிவை, தங்களது வெற்றியாக கருதிக்கொண்டு இந்த நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்று விடுமுறை கொடுத்த ஜனநாயக அரசாங்கம் உலகத்தில் இலங்கையைத் தவிர வேறு எங்கும் இருக்குமா?  

வெற்றிக் கொண்டாட்டங்களாக கொண்டாடிய சிங்களர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்து வந்த வரலாற்றை நீங்கள் உணர வேண்டுமென்றால் சிங்கம் புணர்ந்து வந்த அந்த சிங்களர்களின் கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.  

இது தமிழர் என்றொரு இனத்தின் கதையோ, அவர்களின் கண்ணீர் வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல. தற்போதைய சர்வதேச சமூகத்தில், தங்களது அரசியல் வெற்றிக்காக, ஆளுமையை நிலைநாட்டுவதற்காக ஒவ்வொருவரும் எத்தனை தூரம் பயணிப்பார்கள் என்பதை நாம் உணர்வதற்காக தங்கள் வாழ்க்கையை இழந்து உலகத்திற்கென்று வாழ்ந்து காட்டிய இனம் தான் இலங்கையில் வாழ்ந்த தமிழினம்.

25, 332 ச கி மீ  பரப்பளவும் நான்கு புறமும் நீர் சூழ்ந்த இந்த குட்டித் தீவை பண்டைய தமிழ் இலக்கியங்கள் சொக்கதேசம் என்று அழைத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? 

தொடக்க வரலாற்றில் தம்பப்பண்ணி என்றும், பின்னாளில் ஈழம், இலங்கை, என்று மாறிய பெயர்கள் போர்த்துகீசியர்கள் உள்ளே வந்து சிலோன் (ஸீலான்) என்று மாறி, இறுதியில் சமஸ்கிருத கலப்புடன் ஸ்ரீலங்கா என்று மாற்றம் பெற்ற இன்றைய இந்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை  ( Democratic Socialist Republic of Sri Lanka) )அழிந்து கொண்டுருக்கும் தனுஷ்கோடி போய் நின்று கொண்டு தூரத்தில் கண்களுக்கு சிறு புள்ளியாக தெரியவாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து பார்க்க நினைத்தால் சுற்றி வரும் ரோந்து கப்பல்களுக்கு நீங்கள் தீவிரவாதியாக தெரிய வாய்ப்புண்டு. 

இலங்கை என்ற நாட்டின், சிங்களர் தமிழர் என்ற இனங்களின் அடிப்படைப் பிரச்சனைகள், மொத்த அரசியல் மற்றும் அவர்களின் வரலாறு என்பதெல்லாம் தாண்டி இந்த கண்ணீர்த் தீவின் கதையை நாம் தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஒவ்வொரு சதுர அடியாக நடந்து பாதுகாப்புடன்   முன்னேறிச் செல்ல வேண்டும்.

இன்று வரையிலும் சிங்களர்கள் நாங்கள் தான் பூர்வகுடி என்கிறார்கள்? இங்கு வாழ வந்தவர்களே தமிழர்கள். தமிழர்கள் எப்போதும் சிங்கள மரத்தில் பற்றிப் படரும் ஒட்டுண்ணிகள் என்று அகம்பாவத்துடன் பேசுகிறார்கள். அதுவே இன்று பெரும்பான்மையினர் சிங்களர்களின் விருப்பங்களோடு சிறுபான்மையினராக தமிழர்களின் நலன் குறித்து சிந்திப்போம் என்கிற அளவில் சரித்திர பக்கங்கள் மொத்தமாய் மாற்றம் பெற்றுள்ளது.  

இந்த சிங்களர்கள் சொல்லும் அவர்களின் பூர்வகுடிகளை நாம் ஆராயத் தொடங்கினால் அவர்களின் பூர்வாசிரமத்தையும் பார்க்கத்தானே வேண்டும்?

உலக சரித்திர வரலாற்றில் ஹிட்லருக்குப்பிறகு கோரத்தை மொத்தமாக குத்ததையெடுத்து ஆட்சி நடத்தி இலங்கை தமிழனத்தை கல்லறையாக மாற்றிய மகிந்த ராஜபக்ஷே வரைக்கும் வந்து சேரும் போது தான் இன்றைய ஈழ மக்களின் கதியும், பின்னால் உள்ள மொத்த அரசியல் சதிகளையும் உணர முடியும்.  

உலகில் அழிந்தே விட்டது என்று கருதப்பட்ட யூதர் இனம் கூட இன்று தலை நிமிர்ந்து வாழ்வதோடு பல நாடுகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்.  முன் தோன்றா மூத்த குடி என்ற பெருமை பெற்ற மொத்த தமிழன வரலாறு தொடங்கிய சரித்திர பக்கங்களின் கடைசி கால கட்டத்தில் வந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் இன்று மொத்த உலகையும் தங்கள் ஆளுமைக்குள் வைத்துள்ளார்கள்.

மேல் நாட்டு கலாச்சாரங்களும் அவர்களின் ஆதிக்கமும் இன்று உலக அரங்கில் பீடுநடை போட்டுக் கொண்டுருக்கிறாது, அத்துடன் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளையும் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அவஸ்த்தை படுத்திக்கொண்டுருக்கிறார்கள்.

இந்த மூத்த குடி மட்டும் புலம்பும் குடியாகவே இருக்கின்றது. புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் மூழ்கிக்கொண்டுருக்கும் குடியாக இருக்கிறது, இந்த புலம் பெயர்ந்தவர்களை முறைப்படியாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 175 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த போது உருவான உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் இங்கு வாழ முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு வாழ்ச் சென்றதை பார்க்க வேண்டும். 

அப்போது இலங்கைக்கு போய்ச் சேர்ந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். 

அதற்கு முன்னால் அங்கே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் பூர்வகுடி தமிழர்கள்.

இந்த தொடரின்  முந்தைய பகுதிகள்

No comments: