Saturday, June 30, 2012

வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்

வாரத்தில் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு யுத்தத்திற்கு தயாராகும் படைத்தளபதி போல் செயல்பட வேண்டியிருக்கிறது. குடும்பத்திற்காக குறிப்பாக குழந்தைகளுக்காக வரும் வாரத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளின் முன்னோட்டத்திற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 




திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் அலுவலகம் சார்ந்த பணிகளினால் சக்கையாக பிழியப்படும் மனமும் உடலும் ஓய்வெடுக்க விரும்பும் அதே தருணத்தில் குடும்ப வாழ்க்கை கடமைகள் என்ற பெயரில் நாம் செய்தே ஆக வேண்டிய விசயங்கள் நாம் முன் ஏராளமாக இருக்கிறது என்பதை நினைவு படுத்தும் தினம் தான் ஞாயிற்றுக்கிழமை. வெள்ளிக்கிழமை மதியம் என்றாலே 90 சதவிகித தொழில் தொடர்பில் இருக்கும் மேலைநாட்டு மக்கள் மின் அஞ்சலுக்கு கூட பதில் அளிக்க விரும்பாமல் ஓட்டமாக ஓடி மறைந்துவிடுகிறார்கள்.

மேலைநாட்டில் வீக் எண்ட் என்ற பெயரில் சனி, ஞாயிறு என்பதை விடுமுறை தினமாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். தத்தமது குடும்ப உறுப்பினர்களுடன் விசேட நிகழ்ச்சியில் பங்கெடுப்பது முதல் சுற்றுலா என்பது வரைக்கும் போன்ற மனதிற்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் விதமாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.  ஆனால் இந்தியாவில் ஓரளவுக்கு வருமானத்திற்கு வழிவகையில் வாழ்க்கை நடத்தும் நடுத்தரவர்க்கத்தினர் கூட முழுமையாக இந்த ஞாயிற்றுக் கிழமை தினத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்களா என்பதே சந்தேகம் தான்.  

அதிகபட்சம் ஞாயிற்றுக் கிழமை என்ற ஒரு நாள் ஓய்வில் மதிய உணவாக அசைவம் என்ற ஒரு விசயத்திற்குள் தங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்பது தான் உண்மை. இதற்கு மேலே இருக்கவே இருக்கு இத்துப் போன தொல்லைக்காட்சிகள். பெரும்பாலும் இரண்டு மடங்கு ஊதியம் கிடைக்கின்றதே என்ற பெயரில் ஞாயிற்றுக் கிழமையைக் கூட வீணடிக்க விரும்பாமல் தங்கள் வருமானத்திற்காக வேலையில் தங்களை அடகு வைத்துக் கொள்பவர்கள் ஏராளமான பேர்கள்.


ஒவ்வொரு ஞாயிறன்றும் வீட்டில் குழந்தைகளுடன் நடைபெறுகின்ற விவாதங்கள் ஒரு விதமான இன்பமான போராட்டமாகவே இருக்கிறது. வாக்குவாதம், விவாதம், பிடிவாதம் கலந்த கலவையாக வீடே ரணகளமாக மாறி விடுகின்றது.  குழந்தைகள் தங்களின் தேவைகள் குறித்து வெள்ளி முதலே அபாய சங்கை ஊத தொடங்க விடுகிறார்கள். இது குறித்த நினைவூட்டல்களை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் தான் வீட்டுக்குத் தேவைப்படும் அவசியமான சாமான்கள் முதல் குழ்ந்தைகளுக்கு பள்ளியிலிருந்து கொடுக்கபடும் செய்முறை பயிற்சி (ப்ராஜெக்ட்) வரைக்கும் எளிதாக நம் தலையில் சுமத்தப்படுகின்றது. 

இந்த முறை பள்ளிக்கூடம் திறந்ததிலிருந்து என்னடா எந்த பஞ்சாயத்தும் நம்மை நோக்கி வரவில்லையே? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  சரியாக கொண்டு வந்து சேர்த்தார்கள்.  
அப்பா, பட்டம் செய்ய வேண்டும். ஒரு மலை அமைப்பை உருவாக்கி கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்கள் என்றார்கள்.  மூன்று பேருக்கும் மூன்று விதமான செய்முறைகள்.  பெரிதான செலவில்லை என்றாலும் அரை நாள் பொழுதை அதில் நாம் கவனம் பிசிறாமல் ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே அந்த வேலை முழுமையடையும். 

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரும் இடையிடையே ஒவ்வொருவரும் கொடுக்கும் ஆலோசனைகளை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காது கொடுத்து கேட்டே ஆக வேண்டும். 

இல்லாவிட்டால் பஞ்சாயத்து தொடங்கி கடைசியில் வீடே ரணகளமாக போய்விடும் அபாயமுண்டு. அடி வாங்குவது முதல் கடி படுவது வரைக்கும் நடந்து முடிந்து செய்த சமாச்சாரங்கள் கலைந்து மறுபடியும் தொடக்கம் முதலே தொடங்க வேண்டியிருக்கும்.  இதற்கு பயந்து கொண்டே நாம் அமைதி காக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தே ஆகவேண்டும்.

பெரிய அலுவலக நிர்வாகத்தை கட்டி மேய்க்க கண்டிப்பு என்ற வார்த்தையை கையாண்டு ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.  ஆனால் குடும்பத்தில் அவையெல்லாம் செல்லுபடியாகுமாகதை கந்தலாகி விடும்.  நாம் வெளியே புலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள் எலியாகத்தான் வாழ்ந்தாக வேண்டும்.  இது மனைவிக்கு அடங்கியவன் என்ற சொல்லுக்கு வழு சேர்ப்பது என்ற போதிலும் பல விசயங்களில் மனைவியிடம் குழந்தைகள் சமாச்சாரத்தை ஓப்படைத்து விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதைவிட அருமருந்து வேறெதும் இல்லை. 

உன் அளவுக்கு எனக்கு பொறுமை போதாது? என்று சொல்லியே நான் பல சமாச்சாரங்களை நான் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிவிடுவதுண்டு.  இது போன்ற சமயங்களில் வாங்கி கட்டிக் கொள்வது வாடிக்கை என்ற போதிலும் விடுடா சூனா பானா என்றே நகர்ந்து போய்விடுவதுண்டு.  என்னை எப்படி எந்த விசயத்திலும் எளிதில் திருப்தி படுத்திவிடமுடியாது என்பதைப் போலவே என் குழந்தைகளை திருப்திபடுத்திவிடுவதும் அத்தனை சாதாரண விசயமாக இல்லை. 

குழந்தைகளுக்கு வயசு அதிகமாக அதிகமாக நம்முடைய எந்த ஜிகர்தண்டா வேலையும் எடுபட மாட்டேன் என்கிறது.

இந்த முறை கொண்டு வந்த பட்டம் மற்றும் மலை அமைப்பு சமாச்சாரத்தை செய்து கொண்டுருக்கும் போது குழந்தைகளுடன் பொறுமையாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.  குழந்தைகளின் ஏராளமான கேள்விகளை எதிர் கொள்ள நேர்ந்தது. ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்விக்கணை நம்மை நோக்கி வரும் போது ஒரு விளையாட்டு வீரரின் லாவகத்தோடு தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

மும்முனை தாக்குதலினால் நாம் எந்த அளவுக்கு தகுதியாக நம்மை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே அப்போது தான் நமக்கு புரியத் தொடங்குகின்றது. 

என் குழந்தைகளைப் போல என் அப்பா அம்மாவிடம் பேச முடியாத வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் என் மனக்கண்ணில் வந்து போனது. அப்பாவிடம் பேசிய விசயங்கள் மிக மிக குறைவு.  நான் மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களும் அப்படித்தான் இருந்தார்கள். கடைசி வரைக்கும் அவர் ஒரு தனித்தீவாகத்தான் இருந்தார்.  அதுவே சரி என்பதாக நினைத்துக் கொண்டு அந்த தனிமை கவசத்தை கெட்டியாக மாட்டிக் கொண்டு இறப்பு வரைக்கும் அப்படித்தான் இருந்தார்.

அம்மாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  

அவர் உலகம் ஒரு மிகச்சிறிய வட்டம். அந்த வட்டத்திற்குள் அவர் மட்டுமே நிற்க முடியும்.  இன்னும் சொல்லப்போனால் அந்த வட்டத்திற்குள் வாழ்க்கை முழுக்க அவர் ஒற்றைக்காலில் தான் நின்று கொண்டு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்பாவின் இறப்புக்குப் பிறகு தான் அவர் சுவாசித்த சுவாசக் காற்றில் சுதந்திரம் என்ற வாடையே வந்துருக்கும்.  ஆனால் என் குழந்தைகள் பேச்சு கற்றுக் கொண்ட நாள் முதல் தினந்தோறும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அன்பாக, மிரட்டலாக, கெஞ்சலாக, கொஞ்சலாக என்று பல்வேறு பரிணாமத்தில் தங்களின் தேவைகளை புரியவைத்து தங்களது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். 

மூவரிடமிருந்தும் எப்போதும் போலவே கேள்விகள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கிறது.  தெரிந்தது, புரிந்தது, புரியாதது, புரிந்து கொள்ள முயற்சிப்பது போன்ற பல கலவையான கேள்விக்கணைகள் நம்மை தாக்கிக் கொண்டேயிருக்கிறது.  ஏறக்குறைய அந்த ஒரு நாள் வாரத்தின் மொத்தமாக அணை திறந்த வெள்ளம் போல பாய்ந்து நாம்மை பிறாண்டி எடுக்கிறார்கள்.

உலகத்திலே தியானத்தை விட பொறுமையான சமாச்சாரம் ஒன்று உண்டெனில் குழந்தைகளை எதிர்கொள்வது தான்.  அதுவும் துளிகூட கோபப்படாமல் உரையாடலை கொண்டு செலுத்துவது தான் முக்கியமான சாதனையாக நான் கருதுகின்றேன்.

இது போன்ற சமயங்களில் தான் தற்போதையை கல்வியின் உண்மைகளை உணரமுடிந்தது. 

இந்த முறை அக்கா மற்றும் அண்ணன் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.  மூன்று பேரில் இரண்டு பேர்கள் 473 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்கள்.  அண்ணன் மகன் 420 பெற்று இருந்தான்.  மாநில அளவில் உள்ள மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அக்கா மகள்கள் பெற்றுருந்த மதிப்பெண்கள் எனக்கு பிரமிப்பாகத்தான இருக்கிறது.  காரணம் நான் படிக்கும் போது 400 என்பதே உலக சாதனை போல இருந்தது.  400 மதிப்பெண்கள் பெற்ற எனது வகுப்புத் தோழர்கள் மூன்று பேரும் தொழில்நுட்ப பயிற்சி (பாலிடெக்னிக்) படிப்புக்குச் சென்றார்கள்.  

நான் அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தது இப்போது நினைவுக்கு வருகின்றது.

இப்போது எல்லோரும் ஒரே வாக்கியத்தை கிளிப்பிள்ளை போல ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த காலத்து பிள்ளைங்க அத்தனை பேர்களும் படிப்பில் கில்லியாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.  பிறந்த குழந்தைகள் கூட நல்ல புத்திசாலியாக இருக்கிறார்கள் என்ற பேச்சு எல்லா இடத்திலும் பரவியுள்ளது.  



நாம் ஒன்றை மறந்து விடுகின்றோம்.  சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், வாய்ப்புகள் போன்றவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மீடியா என்ற உலகம் இன்று எல்லாவற்றை புரிய வைக்கின்றது. கற்றுக் கொடுக்கின்றது. வேறென்ன வேண்டும்.  நல்லது, கெட்டது என்று கலவையாக ஒவ்வொருவரையும் தாக்கிக் கொண்டேயிருக்கிறது.

கற்றுக் கொண்டு தேர்ச்சி அடைபவர்களின் சதவிகிதத்தில் எத்தனை பேர்கள் உருப்படியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  கல்விக்கு அப்பாற்றபட்ட பல விசயங்கள் இருக்கிறது என்பதை நாம் எவரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை.

காரணம் சென்ற வாரத்தில் உறவினர் வீட்டு திருமணத்தில் பத்தாம் வகுப்பில் அக்காக்கள் தங்கள் மகள்கள் பெற்ற மதிப்பெண் சாதனையை பீற்றிக் கொள்ளும் வண்ணம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சாதனைக்குரியவர்களிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்தேன்.  வெறும் மண்ணாக இருக்கிறார்கள்.  படித்தார்கள்.  மன்ப்பாடம் செய்தார்கள்.  அப்படியே எழுதியிருக்கிறார்கள்.  மதிப்பெண் வாங்கியிருக்கிறார்கள்.  அவ்வளவு தான். ஆங்கில வழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வி என்ற எந்த பாகுபாடும் இல்லை. பொதுப்படையான விசயங்களில் எந்த தெளிவும் இல்லை.  எதிர்காலம் குறித்த எந்த நோக்கமும் இல்லை.  வெளி உலகம் எப்படி இயங்குகின்றது என்பதை யோசிக்கக்கூட தெரியவில்லை.  


எந்த பாதையின் பயணம் இது என்பதை சுட்டிக் காட்டி பேசும் அளவுக்கு அவர்களிடம் எந்த பக்குவமும் இல்லை. 

அதிகபட்சம் டாக்டர் ஆக வேண்டும். இஞ்சினியர் ஆக வேண்டும் எந்த இரண்டு ஆசைகளில் அடங்கி விடுகின்றது. இன்னும் கொஞ்சம் அழுத்திக் கேட்டால் கம்யூட்டர் படிப்பு முடித்தால் உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் என்று அவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையை அடைகாத்துக் கொண்டு அடுத்த அடியில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். நான் பெரிதாக அவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை என்ற போதிலும் பல விசயங்கள் என் மனதில் நிழலாடிக்கொண்டேயிருந்தது. 

காரைக்குடியில் இருந்து திருப்பூர் வரைக்கும் ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் வழித்தடத்தில் நான் பார்த்த ஏராளமான பொட்டல் காடுகளில் எத்தனை பாலிடெக்னிக் கல்லூரி,இஞ்சினியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி பார்த்து இருப்பேன் என்று என்னால் கணக்கு கூட வைத்துக் கொள்ள முடியவில்லை.  புற்றீசல் போலவே கல்லூரி திறந்து பலரும் இங்கே கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அரசியல்வாதியாக எந்த தகுதியும் தேவையில்லை என்பதைப் போலவே எந்த கல்லூரி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம் என்கிற ரீதியில் நான் கல்வித்துறையில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றோம். 

ஆனால் கம்பத்தில் பறப்பது கிழிந்து போன கொடி என்பதை எல்லோரும் எளிதாக மறந்து போய்விட்டோம்.

இன்று செய்திதாளை படித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தி கண்ணில் பட்டது.  ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருந்ததாம்.  காரணம் பெயர்ச்சொல், உரிச்சொல் போன்ற அடிப்படை விசயங்களே தெரியவில்லை என்பதோடு அதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு நாக்கு வறண்டு விட்டதாம்.  எப்படி நம்முடைய குழந்தைகளுக்கு அறிவுக்கண்களை திறக்கப் போகும் ஆசியர்களின் லட்சணம்

Saturday, June 16, 2012

ஊரெல்லாம் பெட்ரோல் வாசம்


" நாட்டின் நலனை கருத்தில் கொண்டே பெட்ரோல் விலையை உயர்த்தினோம். இனிமேலும் உயராது என்று என்னால் உறுதியளிக்க முடியாது.  இது குறித்து எவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. "

கடந்த வருடம் நவம்பர் மாத முதல் வாரத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 1.80 என்று உயர்த்திய போது எதிர்ப்பு தெரிவித்து தன்னை சந்திக்க வந்திருந்த மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த எம்பிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது வார்த்தைகள் இது.


முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர். சோனியா பின்னால் ஒளிந்து கொண்டிருப்பவர்.  என்று பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டிருந்த கவலையை அந்த நிமிடத்தில் தவிடுபொடியாக்கிவிட்டார்.

மன்மோகன் சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதை. இனி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவாகும் என்று இவர் பிரதமராக வந்தமர்ந்த போது சொன்னவர்களின் வாயில் ஒரு லிட்டர் பெட்ரோலைத்தான் ஊற்ற வேண்டும். வளமான எதிர்கால இந்தியா என்ற கனவை ஒவ்வொரு இந்தியனும் மனதில் மட்டுமே சுமந்திருக்க வேண்டும் என்பதைத் தான் சொல்லாமல் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வந்தமர்ந்து செயலில் காட்டிக் கொண்டிருக்கிறார்

கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது, பெட்ரோல் விலை ரூ. 37.84 ஆக இருந்தது.  இந்த மாதத்தில் உயர்ந்துள்ள  விலை வரைக்கும் நீங்களே ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள். 100 சதவிகிதத்திற்கு அதிகமாகவே உயர்ந்துள்ளது. 

ஏழு வருடங்களுக்குள் ஏனிந்த விலை உயர்வு?

இவருக்கு ஒரு படி மேலே போய் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் மந்திரி பிரணாப் முகர்ஜி அந்த சமயத்தில் மேற்கு வங்காள பெர்காம் வந்திருந்த போது நிருபர்களிடம் பொங்கியே தீர்த்துவிட்டார்.

" இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு.  அரசாங்கத்திற்கு சம்மந்தம் இல்லாத விசயம் " என்றார்.  

அவர் கூற்றுப்படி இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே இருப்பது போலவும் அது மத்திய அரசாங்கத்திற்கு கட்டுபடாத தேவதூதன் போலவும் சுட்டிக்காட்டினார். அதென்ன இந்த பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த தன்னாட்சி அதிகாரம்?

ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசுக்கும் இந்த பெட்ரோல் விலை விவகாரம் பெரிய மண்டையடி சமாச்சாரமாக இருந்து கொண்டிருக்கிறது.  ஒரு பக்கம் கச்சா எண்ணெய் நிலையில்லாத விலை என்று சடுகுடு ஆட்டம் காட்ட மற்றொரு பக்கம் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அழிச்சாட்டியம் செய்ய என்ன தான் செய்ய முடியும்.

விலையை உயர்த்த வேண்டுமென்றால் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தேர்தல் சமயமென்றால் எப்படா வாய்ப்பு கிடைக்கும்? என்று எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி தயாராக காத்திருப்பார்கள். அதுதான் ஆளை விட்டால் போதுமென்று "தன்னாட்சி அதிகாரம்" என்ற மந்திர வார்த்தைக்குள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழியை காட்டி விட்டு ஒதுங்கி விட்டார்கள்.  நிதிமந்திரி சொன்னதும் ஒரு வகையில் உண்மை தான்.

எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றிய விலையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கிறது.  ஆனால் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 2010 ஜுன் மாதம் முதல் தன்னாட்சி அதிகாரத்தை கொடுத்ததும் இவர்களே தான். .இதற்குப் பிறகு எட்டு முறை விலையேற்றம் நடந்துள்ளது.

கிரிட் பாரிக் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங் அரசாங்கம் இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கொள்கை முடிவுக்காக அரசாங்கத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று பச்சைக் கொடி காட்ட பெட்ரோல் விலை ஒரு பக்கம் சர் சர் என்று உயர விலைவாசிகளும் விண்ணில் பறக்கத் தொடங்கியது.  ஆனால் இந்த புத்திசாலிகள் ஒன்றை மறந்து விட்டார்கள். நாட்டில் எண்ணெய் மற்றும் எரிபொருளின் விலைவாசி உயர்வென்பது அதற்கான விலை உயர்வு மட்டுமல்ல.  சராசரி மக்களின் அத்தனை அடிப்படை பொருட்களின் விலைவாசிகளையும் பதம் பார்க்கும் என்பதை எளிதாக மறந்து போய்விட்டார்கள்.  

சாதாரணமாக சர்வதேச ச்ந்தையின் செயல்பாடுகளை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாளைக்கு ஒரு முறை விலையை தீர்மானம் செய்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மூலமே நமக்குத் தேவைப்படும் டாலர் கிடைக்கின்றது. இந்த டாலர்கள் நம் கைவசம் இருந்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் நம் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு நிற்க முடியும்.

காரணம் நமக்குத் தேவைப்படும் 74 சதவிகிதம் கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.  இதற்கு அமெரிக்கா டாலர் இருந்தால் மற்ற நாடுகளில் இருந்த கச்சா எண்ணெய் வாங்க முடியும். மீதியுள்ள 26 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டில் கிடைக்கின்றது.  இந்த உள்நாட்டு தயாரிப்பும் தனியார்களான ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் குரூப் நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. இவர்களும் இந்தியா முழுக்க பெட்ரோல் நிலையங்களை கடை விரித்தார்கள். இந்த இடத்தில் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் ஒன்று உண்டு.  நிதி ஆதாரத்தைப் பெருக்க பெட்ரோல் மூலம் கிடைக்கும் வரிகளை மக்களிடமிருந்து வசூலிக்கும் நமது அரசாங்கம் இந்த தனியார்களுக்கு எந்த கட்டுப்பாடுகளோ, வரிகளோ இல்லை என்பதை குறிப்பிட்டு சொல்லத்தான் வேண்டும்.  காரணம் அவர்கள் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் முதலாளிகள்.

ஆனாலும் அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலையோடு போட்டி போட முடியாமல் குறிப்பட்ட காலகட்டத்திற்குள் முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டு கடையை மூடத் தொடங்கி விட்டார்கள்.  இவர்கள் கொடுத்த நெருக்கடியே இனி அரசாங்கம் பெட்ரோல் விலையை தீர்மானிக்கக் கூடாது என்பது.

தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டமென்றால் நம்முடைய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது?

இந்தியாவில் முக்கியமான மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்ரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம்.  இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்கு தேவைப்படும் எரிபொருள் தேவைகளை கவனித்துக் கொள்கின்றது.

இந்த பெட்ரோல் விலையேற்றம் என்பதற்குப் பின்னால் கச்சா எண்ணெய், பேரல், சர்வதேச சந்தை, இந்திய ரூபாய்க்கான டாலர் மதிப்பு, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் என்று வெகுஜனத்திற்கு தெரியாத பல விசயங்கள் உண்டு.  அத்தனையும் டாலர் அரசியல்.

ஆனால் இவர்கள் சொல்லாத பல விசயங்கள் இதற்குப் பின்னால் உண்டு. உலக மேஸ்திரி அமெரிக்கா எப்படி பெட்ரோல் வளமுள்ள நாடுகளை குறிவைத்து நடத்தப்படும் கேவலமான அரசியலைவிட இந்தியாவில் பெட்ரோல் விலையேற்ற அரசியல் மகா மட்டமானது. .

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அப்படியே கிடைத்து விடுவதில்லை. கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது. அல்லது நேரிடையாக இந்த கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றோம்.  அதன் பிறகே சுத்திகரிப்பு பணி தொடங்குகின்றது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இது ஒவ்வொன்றுக்கும் உண்டான விலையை வைத்து மதிப்பு கூட்டப் படுகின்றதா? இல்லை மொத்தமாகவே சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விலை என்று பெயரில் கண்க்கு காட்டுகிறார்களா என்பதும் புரியாத மர்மமே?

எதிர்க்கட்சி, எதிரிக்கட்சி எவரும் இது குறித்து அக்கறைப்படுவதில்லை.  மம்தாபானர்ஜி கூட அந்த சமயத்தில் ஆதரவை விலக்கிக் கொள்கின்றோம் என்ற ஆயுதம் எடுத்து அடுத்த நாளே அடக்கி வாசிக்க அந்த நாடகமும் முடிவுக்கு வந்தது. இறுதியாக 2011 நவம்பர் 15 அன்று ரூபாய் 2.22 லிட்டருக்கு குறைக்கப்படுகின்றது என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு தேன் தடவியது போலவே இருந்தது. இன்றும் இதே தான் நடந்தது என்பதை நினைவில் கொண்டு வரவும்.  

ஏறக்குறைய ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் மாநில மத்திய அரசாங்கங்கள் சேர்ந்து வசூலிக்கும் வரி மட்டும் 50 சதவிகிதம். அதாவது பாதிக்கு பாதி.  ஆமாம் இவ்வளவு வரியும் எங்கே போகின்றது.

ஒரு சின்ன விசயத்தைப் பார்த்தாலே உங்களுக்கே உண்மை நிலவரம் புரியும்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எண்ணெய் நிறுவனங்கள் கொடுத்துள்ள வரவு செலவு கணக்கு இது.

இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் 2006 முதல் 2007 வரை வரி கழித்தது போக பெற்ற லாபம் 7,499 கோடி. இதுவே 2009 முதல் 2010 ல் பெற்ற ஆண்டு வருமானம் 10,220 கோடி.  இதைப் போலவே இந்துஸ்தான் பெட்ரோலியம் பெற்ற ஆண்டு வருமானம் 2010 முதல் 2011 வரையில் 10,254 கோடியாகும்.  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இதே ஆண்டில் பெற்ற லாபம் 1,546 கோடி ரூபாய்.   ஆனால் நம்முடைய நிதி அமைச்சர் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்கிறார். எண்ணெய் நிறுவனங்கள் மற்றொரு பக்கம் சொல்லிக் கொண்டிருப்பது என்ன தெரியுமா?  நிலையில்லாத கச்சா எண்ணெய் விலையின் காரணமாக ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 6,61 ம், ரேசனில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு ரூபாய் 24,63 ம்,  வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 270 நஷ்டம் ஏற்படுவதாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

உள்நாட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கே இத்தனை லாபமென்றால் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களில் உள்ள லாப நட்ட கணக்கு என்ன சொல்கின்றது?

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 105 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 49.  இதுவே 2009 ஆம் ஆண்டு விற்ற கச்சா எண்ணெய்யின் விலை 69 டாலருக்கு வந்த போதும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்தபாடில்லை.  இதுவே இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 72 என்கிற ரீதியில் வந்து நின்றுள்ளது.  இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில் மிகப் பெரிய மாற்றமில்லை.

ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்த பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசாங்கம் டீசல் விலையை மட்டும் உயர்த்தவிடுவதில்லை. காரணம் உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதால்.ஒவ்வொரு முறையும் டீசல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தள்ளிப் போடலின் பலன், அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன. அதாவது டீஸல், கெரோஸின், சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது.  இப்போது நம் நினைவில் வர வேண்டியது இரண்டு விசயங்கள்.  எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்கின்றன.  ஆனால் இறுதியில் நட்டம் என்கிறார்கள்.  இது தவிர மானியமாக வழங்கப்படும் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் மத்திய அரசாங்கம் மானியத் தொகையை வழங்கி விடுகின்றது.  ஆனாலும் இறுதியில் நட்டம் என்கிறார்கள் என்றால் இந்த பெட்ரோல் அரசியல் உங்களுக்கு புரிகின்றதா?

எண்ணெய் நிறுவனங்களின் ஆடம்பரச் செலவுகளை யாரும் எந்த கேள்விகளும் கேட்டு விட முடியாது. இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் என்பது சொர்ககத்தில் இருப்பதற்கு சமமானது.   உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் (1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டர்) தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய். அப்படியென்றால் மேற்பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தை கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்.  இது வெறும் சம்பளம் மட்டுமே.  இதைத்தவிர அவர்களுக்கென்று வழங்கப்படும் மற்ற வசதிகள் தனியானது. ஆனால் நட்டத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு முறையம் புலம்பிக் கொண்டிருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர எண்ணெய் நிறுவனங்கள் தேவையில்லாமல் செய்து வரும் விளம்பரங்கள் என்று அத்தனையும் சாதாரண குடிமகன் தலையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. இதைப்போலவே 50 சதவிகிதம் வரியாக மாநில மத்திய அரசாங்கத்தினரால் வசூலிக்கப்படுவதும் இலவசமாக மாறிவிடுகின்றது.

மாநில அரசாங்கம் தங்களின் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் தன் பாட்டுக்கு இலவசம் என்ற பெயரில் வரிப்பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில அரசாங்கங்கள் வாரி வழங்கும் இலவசங்கள் ஒருபுறம் என்றால் மத்திய அரசாங்கம் வசூலிக்காத வராக்கடன்களின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு நீண்டுகொண்டே போகின்றது.  மலைத்து விடாதீர்கள்.  கடந்த 2011 ஜுன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 36 வங்கிகள் கொடுத்த வராக்கடன்களின் தொகை 14 லட்சத்து 273 கோடி.  இதை ஒவ்வொரு வருட கணக்காக கொண்டு வந்தால் நமக்கு தலைசுற்றி விடாதா?  அதைத்தான் மன்மோகன் சிங் தெளிவாக சொல்லியுள்ளார்.

இவ்வளவு பெரிய இந்தியாவை ஆட்சி செய்ய வரிகள் அவசியம் தேவை என்கிறார்.


விஜய் மல்லையா குடி கும்மாளம் என்று ஆட்டம் போட்டுக் கொண்டு சாராய தொழில் அதிபர் என்ற போர்வையில் இருந்தாலும் அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மத்திய அரசாங்கம் எந்த அளவுக்கு கதறி அவரை காப்பாற்ற முன் வந்தது என்பதை பத்திரிக்கையில் படித்து இருப்பீர்கள் தானே?  ஏற்கனவே பிரணாப் முகர்ஜி "தொழில் அதிபர்களை காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்று வேறு சொல்லியிருக்கிறார். நம்முடைய ஆண்டு கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு ஆயிரம் வேலைகள் தலைக்கு மேல் காத்துக் கொண்டிருக்கிறது?

கவலையை விடுங்க.

நடைபயிற்சியும் மிதிவண்டியும் நம் உடல் நலத்துக்கு நல்லது. 

ஏறிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையை நினைத்துக் கொண்டே உங்கள் வாழ்க்கையை சற்று மாற்றிக் கொள்ளுங்களேன்.

Sunday, June 10, 2012

வேகத்தில் செத்து விடு

ஆறாவது படிக்கும் போது கிடைத்த கோடை விடுமுறையின் போது சைக்கிள் கற்றுக் கொண்டதாக ஞாபகம்.  அப்போது உடன் படித்த வகுப்புத் தோழன் அனந்த ராமனிடம் மட்டும் சைக்கிள் இருந்தது. அதுவும் அவன் அப்பா அரசாங்க ஊழியராக இருந்த காரணத்தால் அந்த வண்டியை ஞாயிறு கிழமை சமயத்தில் மெதுவாக நகர்த்தி எடுத்துக் கொண்டு வரச் செய்தோம். அந்த சைக்கிளை வைத்து குரங்கு பெடலை அடித்து அடித்து நாலைந்து நாட்களில் யெ.மு வீட்டுச் சந்தில் நன்றாக ஓட்டக் கற்றுக் கொண்டேன்.  

அந்த சைக்கிள் மூலம் மற்ற சந்துகளுக்கும் பயணம் செய்த போது தொடங்கிய வேகம் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருந்தது.  குரங்கு பெடலில் இருந்து கை விட்டு ஓட்டும் அளவுக்கு வளர்ந்தது.  பேய் வேகம் போல சந்துகளில் ஓட்டியிருக்கின்றேன்.  அதன் பிறகே வீட்டுக்குள் இருந்த ஒரே சைக்கிளில் ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. அப்பா இல்லாத சமயங்களில் திருட்டுத்தனமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  

சைக்கிளில் தொடங்கிய பயணம் பைக் வரைக்கும் வந்து நின்ற போது இன்னும் வேகம் அதிகமானது. பைக்கில் உள்ள ஆக்ஸிலேட்டர் என்ற பகுதி முறுக்குவதற்கு மட்டுமே என்று முடிந்தவரைக்கும் புகை பறக்க உயிர் பயமின்றி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு ஏறக்குறைய 13 வருடங்களுக்குப் பிறகு தான் மனதில் ஒரு நிதானம் வந்தது.  இரண்டு சக்கர வாகன ஆசையும் தீர்ந்தது. கூடவே முதுகு வலியும் நிரந்தரமாக வந்து சேர்ந்தது. 

மூச்சு முட்ட அசந்து போயிருக்கின்றேன்.  ஆனால் பயம் மட்டும் வந்ததே இல்லை.  நல்லவேளையாக பெரிதான எந்த விபத்திலும் மாட்டியதுமில்லை. ஓரே ஒரு முறை சென்னையில் பெரம்பூர் பெராக்ஸ் சாலையில் கொட்டிக்கிடந்த திரவங்களில் திரைப்படங்களில் வருவது போது பல அடி தொலைவு சறுக்கிக் கொண்டே போய் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது.

காலச்சக்கரத்தில் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது.  ஆட்டோ முதல் அத்தனை வண்டிகளையும் ஓட்டியிருக்கின்றேன். ஓட்டும் வண்டியின் ஜாதகம் பற்றி எதுவுமே தெரியாமல் ஈரோடு செல்லும் சாலைகளில் இரவு பகல் பாராமல் பல முறை விரட்டி சென்று இருக்கின்றேன். சொந்தமாக கார் வந்த போதிலும் அந்த வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.  முக்கிய காரணம் ஓட்டும் வாகனத்தின் உச்ச பட்ச வேகம் என்ன? எப்படி கையாள வேண்டும்? அதன் குதிரைதிறன் வேகம் என்றால் என்ன? அதன் எதிர்விளைவுகள் என்று எதையுமே யோசிக்காமல் உடைந்த சாலைகளில் வேகத்தை குறைக்காமல் கியர் மாற்றாமல் மடையனாக ஓட்டிச் சென்றுள்ளேன்.  பல முறை வண்டிக்குத் தேவையான செலவுகளை அழுது கொண்டே செய்துள்ளேன். 

எண்ணங்கள் மட்டுப்படவில்லை.  மனதில் எந்த மாறுதல்களும் உருவாகவில்லை.

இன்னும் லாரியில் மட்டும் ஏறியதே இல்லை.  மற்றபடி அத்தனை வாகனங்களிலும் ஏறி இறங்கியாகி விட்டது. அந்த அளவுக்கு இந்த நான்கு சக்கர வாகன பைத்தியம் பாடாய் படுத்தியது.  ஒவ்வொருவருக்கும் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெரிய மாறுதல்கள் உருவாகும் என்பது பொது விதி.  ஆனால் அதிலும் நான் விதிவிலக்காக இருந்துள்ளேன்.  ஆனால் சண்டிக்குதிரையை உலுக்கிப் பிடிக்க வருபவர்கள் தான் குழந்தைகள் என்பதை தான் மெதுவாக கண்டு கொண்டேன். 

குழந்தைகள் வளர வளர, குடும்பத்தினருடன் வாகனத்தில் வெளியே செல்லும் போது மனம் படும் சொல்லி மாளாது.  எத்தனை பேர்களை கதறடித்தோமோ?  எந்தந்த சமயத்தில் பயங்காட்டினோமோ தெரியவில்லை. அதன் மொத்த அவஸ்த்தைகளையும் இப்போது தான் கண் எதிரே அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.  கூடவே நமது சாலைகளின் அவலங்களையும் பயணிப்பவர்களின் புத்திசாலிதனத்தையும் ரொம்பவே யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இப்போது ஓட்டிக் கொண்டிருக்கும் வாகனத்தின் சிசி அளவு 2000.  ஆனால் குடும்பத்தினர் உங்களுக்கெல்லாம் பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி தான் லாயக்கு என்று கிண்டல் செய்யும் அளவுக்கு மிதி வண்டி வேகத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். 


ஒரு வாகனத்தின் முழுமையான குதிரைத்திறன் வேகம் எப்போது தெரிய வருகின்றது என்றால் நாம் கூட்டத்திற்கிடையே ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும் சூழ்நிலையில் தான் புரிகின்றது. அந்த சூழ்நிலையில் தான் அந்த வாகனத்தை நாம் எந்த அளவுக்கு கையாளவேண்டும் என்ற புத்திசாலித்தனம் புரிகின்றது.  ஆனால் பாதசாரிகளுக்கு அதை புரியவைக்க முடியாது என்பதையும் உள் மனம் சொல்லத் தான் செய்கின்றது.  எவர் மேலாவது இடித்தால் மகா குற்றம்.  வண்டியை மற்ற வாகனங்களில் இருந்து இடிபடாமல் கர்த்துக் கொள்வதும் அதை விட முக்கியமாக இருக்கிறது.

கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றவர்களை அழைத்து வரும் பொறுப்பின் காரணமாக சென்றவனுக்கு கூடுதல் பரிசாக கடலூர், பாண்டிச்சேரி வரைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.  கடல் அலைகளில் காலை நனைத்தே ஆக வேண்டிய கட்டாய நிர்ப்பந்ததையும் உருவாக்கினார்கள். ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த அந்த பயணத்தின் போது சாலை விபத்துகள் இந்தியாவில் ஏன் இந்த அளவுக்கு தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன்..

சேலத்திற்கு பல முறை நான்கு சக்கர வாகனங்களில் தொழில் நிமித்தமாக சென்றுள்ளேன். ஈரோட்டுககுச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல் சங்ககிரி வழியாக செல்லும் மாற்றுச் சாலையில் சென்றுள்ள போதும் இயல்பான வேகத்தில் தான் சென்றுள்ளேன். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த சாலை வசதியில் ஒவ்வொருவரும் நிதானமான வேகத்தில் பயணிக்க முடியும். இடையிடையே வரக்கூடிய ஊர்களில் உள்ள கடைத்தெருக்களில் உள்ள கூட்டத்தை தாண்டிச் சென்றால் கொஞ்சம் கூடுதலான வேகத்தில் செல்ல முடியும்.. 

ஆனால் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் சொல்லி வைத்தாற் போல் நாம் ஓட்டிச் செல்லும் வாகன வேகத்திறன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று விட முடியும், தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் மூலம் ஒட்டுநர்களுக்கு கிடைத்த வேகம் அலாதியானது. 


ஆனால் இந்த ஆனந்தமான பயணத்திற்கு சமூகம் கொடுத்த விலை துயரமானது. மரங்களே தேவையில்லை என்பது போன்ற சூழ்நிலையை எளிதாக உருவாக்கி விட்டார்கள். கூடவே தேசிய நெடுஞ்சாலை பயணம் என்பது மிக மிக ஆபத்தானது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.  குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் நீங்கள் பயணித்திருந்தால் உங்கள் உயிர் உங்கள் கைகளில் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

வண்டிகளில் உள்ள விளக்கு வசதிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட உணர்ந்து கொள்ள மறுக்கும் ஒரு முட்டாள் சமூகத்தை தாண்டி தான் நீங்கள் உயிருடன் வீட்டுக்கு வர வேண்டும்.  கண்களை கூச வைக்கும் விளக்கை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி போட்டுக் கொண்டு ஸ்பைடர் மேன் போல பறந்து வருவதைப் பார்த்து பல முறை உலகில் உள்ள அத்தனை சக்தியையும் வேண்டிக் கொண்டு ஒரு ஓரமாக நிறுத்திக் கொண்டதுண்டு. இதன் காரணமாக இரவு நேரத்தில் வாகனங்களில் செல்ல வேண்டிய அவசிய சூழ்நிலை உருவானாலும் அடுத்த நாள் பகலுக்கு அதை மாற்றிவிடுவதுண்டு. 

திருப்பூருக்குள் பயணிக்கும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திலும் ஊருக்குச் செல்லும் போது அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் ஓட்டும் வழக்கத்தை கொண்டுள்ள எனக்கு தேசிய நெடுஞசாலையில் செல்லும் வண்டிகளின் வேகத்தைப் பார்த்தால் மனதில் கிலியடிக்கின்றது.  உத்தேசமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பறக்கின்றார்கள். டெயோட்டா காரில் நண்பர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் சென்றடைந்தாக சொன்ன போது ரயிலின் வேகத்தை ஒப்பிட்டுக் கொண்டேன். 

தற்போதைய தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களுக்கு அற்புதமான வசதிகள் இருக்கிறது.  இந்த வசதிகளுக்காகவே வரி என்ற பெயரில் கொள்ளை ரூபத்தில் வசூலிக்கிறார்கள்.  ஆனால் சாலைகளின் இடையே விபத்து எதுவும் நடந்தால் நிச்சயம் உங்கள் ஜாதகத்தை தான் நம்பிக் கொள்ள வேண்டும்.

அருகில் மருத்துவமனை எங்கே உள்ளது? அந்த மருத்துவமனைக்கு உங்களை யார் கொண்டு போய் சோர்ப்பார்கள்?  எப்போது சேர்ப்பார்கள் என்பதெல்லாம் படைத்தவனுக்கே தெரியும்? எந்த இடங்களிலும் எந்த வசதியும் இல்லை.  நாம் தான் நம் உயிருக்கு உத்திரவாதம்.  ஆனால் எவரும் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. குறிப்பிட்ட இடங்களைப் பற்றி அறிவிப்பாக விளக்கும் தெளிவான வசதிகள் இன்னமும் மேம்படுத்த வேண்டும்.  கொஞ்சம் அசந்தாலும் வேறு பாதையில் நாம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

நாம் ஓட்டும் வண்டியில் வேக முள் நூறைத் தொடும் போது குடும்பம் நினைவில் வந்து போகின்றது.  காரணம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த போதிலும் எப்போது என்ன நடக்கும் என்பதே புரிந்து கொள்ள முடியவில்லை.  திடீரென்று ஒரு வாகனத்தில் குறுக்கில் இருந்து ஒருவர் வருகின்றார்.  அதைத் தாண்டி சென்றால் முன்னால் சென்று கொண்டிருப்பவர் திரும்பப் போகின்றேன் என்ற சமிக்ஞை இல்லாமல் சர்ரென்று திரும்புகின்றார். 

வியர்த்து விடுகின்றது.   

ஏற்கனவே ஈரோடு செல்லும் பாதைகளில் இருந்த மிச்சம் மீதி மரங்களைப் பார்த்த எனக்கு தற்போது எங்கு பார்த்தாலும் பொட்டைக்காடுகளாகத் தெரிகின்றது.  நான் பயணித்து வந்த ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மரங்களே இல்லை என்கிற அளவுக்கு நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகம்.  வாகனத்தில் உள்ள குளிர்சாதன வசதியை பயன்படுத்த விரும்பாத எனக்கு அடிக்கும் வெக்கையில் மயக்கமே வந்து விடுகின்றது. நாம் சொந்த விருப்பங்களை குடும்பத்தினர் மீதி திணிக்க முடியாத சூழ்நிலையில் அடிக்கும் வெக்கை காற்றில் குழந்தைகளில் மூச்சு முட்டி மயக்கம் போடும் நிலைக்கு வந்து விடுகின்றார்கள். மரங்களை மட்டும் இழக்கவில்லை.  வசதிகளுக்காக மனிதத்தையும் இழந்து தற்கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..  

வெளிநாடுகளில் முறைப்படியான ஓட்டுநர்கள், உரிமங்கள், அது தொடர்பான சட்டங்கள், குற்றச்செயல்களுக்கு உரிய தண்டனை என்ற சூழ்நிலை எதுவும் இந்தியாவில் இல்லை.  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூருக்குள் துணை நிறுவனங்கள் முதல் சுமாரான நிறுவனங்கள் வரைக்கும் சுமாரான சம்பளம் என்பதை மனதில் வைத்துக் கொண்டே ஓட்டுநர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். இவர்களைத்தான் தங்களது அத்தனை வாகனங்களுக்கும் ஓட்டுநர்களாக வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் தென் மாவட்டத்தில் உள்ள வண்டிகளில் கிலி (கீளீனர்) யாக வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சந்தர்ப்ப வசதிகளை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்களாக அவதாரம் எடுத்தவர்கள்.

இவர்கள் தான் திருப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை கிலியடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற மொத்த நாட்டிலும் ஓட்டுநர்களின் தரம் இருக்கின்றது. அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்டமும் ஒரு குறிப்பிட்ட துறைக்கு தனிப்பட்ட முறையில் லஞ்சத்தை உருவாக்க காரணமாக இருக்கிறதே தவிர உருப்படியான முடிவு கொண்டு வருவதாக இல்லை. 

இதைப் போலவே தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் 70 சதவிகித விபத்துக்கள் மனிதர்களின் அவசரத்தினால் மட்டுமே நடக்கின்றது. முக்கிய காரணம் நாம் அவரை முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உருவாகின்றது.  பின்னால் வந்து கொண்டிருப்பவர்கள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் முந்திச் செல்ல முற்படும் போது தான் உருவாகின்றது. எதிரே வரும் வண்டியின் அதிகபட்ச வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு வாகன்த்தில் உள்ளவர்களும் பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.  கூடவே அருகே வரும் வண்டியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பரிசும் கிடைத்து விடுகின்றது.  நாம் முறைப்படி சாலை விதிகளை கடைபிடித்துச் சென்றாலும் நாம் சரியாக வீடு வந்து சேர முடியுமா? என்பது நிச்சயமற்ற நிலையில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. 
இது தவிர பாயிண்ட் டூ பாயிண்ட் என்று சாலைகளில் பறக்கும் தனியார் பேரூந்துகள் என்ற பெயரில் எமதர்ம ராஜாக்கள் பலரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் வாகன்த்திற்கு பின்னால் வரும் போது இவர்கள் அடிக்கும் அலார சப்தம் என்பது உங்கள் இதயம் பலவீனமாக இருந்தால் நிச்சயம் மாரடைப்பில் இறந்து விடுவீர்கள். 

நாரசாரமான சங்கேத மொழி போல தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே வருவார்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள கோபப்படாமல் ஒதுங்கியே ஆக வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் அருகே சாலையை கடக்க முற்பட்ட பள்ளிக்குழந்தை ஒன்று எதிரே வந்த லாரியின் வேகத்தைப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் நடு சாலையில் அப்படியே நின்று விட்டது.  கூட வந்த மற்ற குழந்தைகள் ஓடி விட்டார்கள்.  வந்த லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர் குழந்தையின் மேல் ஏற்றி நூறடி தாண்டி தான் அவரால் நிறுத்த முடிந்தது.  கண் எதிரே கண்ட எனக்கு அந்த குழந்தையின் சிதைந்த உறுப்புகள் துடித்த துடிப்புகளில் என்து இதயமே நின்று அழுகை என்னை அறியாமல் வந்து விட்டது.  

அந்த குழந்தையின் பெற்றோர்கள் காலையில் எப்படி அனுப்பியிருப்பார்கள்? இந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரியுமோ? தெரியாதோ? எத்தனை மணிக்கு தகவல் சொன்னார்கள்?  அவர்களுக்கு இந்த குழந்தை ஒன்று மட்டும் தானா?  பல கேள்விகள் என் மனதில் வீட்டுக்கு வந்து சேரும் வரைக்கும் ஓடிக் கொண்டேயிருந்தது.  உருவான கை கால் நடுக்கத்தில் வாகனத்தைக் கூட சரியாக கையாள முடியவில்லை. நிச்சயம் அந்த விபத்தை உருவாக்கிய ஓட்டுநருக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் எந்த பெரிய பிரச்சனைகளையும் அவர் வாழ்க்கையில் உருவாக்கி விடாது. இன்னும் நாலைந்து மாதங்களில் அவர் இது போல எத்தனை விபத்துக்களை உருவாக்குவாரோ?

இதில் ஆச்சரியப்படக்கூடிய ஒரே ஒரு சமாச்சாரம் என்ன தெரியுமா?  

ஒருவர் தான் பயணிக்கும் பாதையில் பார்க்கும் எந்த கோர விபத்தும் அவரை எந்த நிலையிலும் பாதித்ததாக தெரியவில்லை.  அவர்களின் வேகமும் குறைந்ததாக தெரியவில்லை.  

எந்த வாகனத்தில் சென்றாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். 

நமது மனம் எதைக்கண்டும் கோபப்படாமல் நிதானமாக இருந்தே ஆக வேண்டும். எந்த சேதாரமும் இல்லாமல் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும்  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்றேன் என்ற நினைத்துக் கொண்டு நடு சாலையில் அவர்களுட்ன் மல்லுக்கட்டி நிற்பதைக் காட்டிலும் எப்படி சரியாக சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை நாம் கடைபிடித்து அமைதியாக வந்து விட்டாலே போதுமானது. 

அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம் உயிர் நம் கையில்.

காரணம் இது காந்தி தேசம்.  நாம் தான் நமக்குத் தேவையான அளவுக்கு சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Sunday, June 03, 2012

மிதி வண்டி - வீரமும் சோகமும்


 மூத்தவளுக்கு பள்ளி செல்ல மிதி வண்டி வேண்டுமாம். 

கடந்த நாலைந்து வாரமாக வீட்டுக்குள் ஒரே அமளி.  நான் கண்டு கொள்ளவே இல்லை.  காரணம் பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தொலைவு ஐநூறு மீட்டர் மட்டுமே.  மூன்று வருடங்களுக்கு முன்பே வாங்கிய வண்டி ஒன்று வேறு வீட்டுக்குள் இருக்கிறது.  ஆனால் மூன்று பேர்களின் கைங்கர்யத்தில் அது பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது.  பிரித்து மேய்ந்து விட்டார்கள்.  முக்கிய சாலைகள் தவிர அத்தனை சந்துகளிலும் இவர்களின் ராஜ்யங்களை நடத்தி முடித்து விட்டார்கள்.

தற்போது இருவர் மிதி வண்டியை அநயாசமாக கையாள்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் இன்னும் கைகூடவில்லை. மெதுவாகவே கற்றுக் கொள்ளட்டும் என்று நானும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இப்போது மூத்தவளின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது.

நான் மிதி வண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். புது வண்டி தான் வேண்டும் என்ற கோரிக்கையுடன் நச்சரிக்கத் தொடங்கினாள்.. என்னுடன் படிக்கும் தோழிகள் பலரும் எடுத்து வருகிறார்கள்.  நானும் இந்த வருடம் எடுத்து வரப்போவதாக சொல்லி விட்டேன் என்று வீட்டின் நிதி மந்திரியிடம் சொல்லி வைக்க அதுவே இப்போது விஸ்ரூபமாக வந்து நிற்கிறது.

இந்த பிரச்சனையை மனைவி தான் தொடங்கி வைத்தார். இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்..  அசந்தர்ப்பமாக பள்ளி இறுதித் தேர்வின் போது கொடுத்த வாக்குறுதி இது.  இப்போது புயலாக தாக்கிக் கொண்டு இருக்கிறது. 

அம்மா நீங்க சத்தியம் பண்ணி கொடுத்துருக்கீங்க.  மீற மாட்டீங்க தானே என்றவளை பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைகின்றேன்.  மூத்தவள் மனைவியுடன் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த ஒரு வாரமாகவே நினைவூட்டிக் கொண்டு இருந்தவள் இப்போது அடிதடி இறங்கி விட அபயக்குரலுடன் மனைவி என்னருகே வந்து விட்டார்.

காரணம் பள்ளி நாளை திறக்கப் போகிறார்கள்.  இப்போது அதற்கான செலவு செய்யும் நேரம்.

கீழ் சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என் பார்வைக்கு வந்து நின்றது.  நானும் கடத்திக் கொண்டே வந்து விட தற்போது உச்சகட்ட போராட்டமாய் வீட்டில் சட்டம் ஒழுங்க கெட்டு 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு மகளின் வார்த்தைகளை மனைவியால் எதிர்கொள்ள முடியாமல் என்னை உதவிக்கு அழைக்கத் தொடங்கினாள்.

மகளிடம் ஒரு விதமான சாமர்த்தியம் உண்டு.  ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் முதலில் அறிவிப்பாக வெளியிடுவாள்.  பிறகு சந்தர்ப்பம் பார்த்து நினைவூட்டுவாள்.  பிறகு எப்போது வாய்ப்புண்டு என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு அதற்கான நேரத்தை வாக்குறுதியாக பெற்றுக் கொள்வாள்.  அந்த நேரத்திற்காக காத்திருந்து வாக்குறுதியை பெற்றுக் கொண்டு கைபேசியில் நினைவூட்டலாக பதிந்து வைத்து விடுவாள்.  முட்டாள்தனமாக நாங்களும் மறந்து விடுவாள் என்று நினைத்துக் கொண்டே இருப்போம்.  அவளும் மறந்து விடுவாள்.  ஆனால் கைபேசி ஒலி அவளுக்கு மறுபடியும் நினைவூட்டி விடும்.  மறுபடியும் ரணகளம் தொடங்கும். 

அந்த ரணகளம் தான் நடந்தது.

நான் தாமதப்படுத்தியத்திற்கு வேறு சில காரணங்களும் இருந்தது. முக்கியமாக பள்ளியில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை பள்ளிச் சீருடையை மாற்றுகிறார்கள்.  இது என்ன யுக்தியோ தெரியவில்லை. சுளையாக ஒரு பெரிய தொகையை இறக்க வேண்டியுள்ளது. சாதாரண உடைகள் அது தவிர குறிப்பிட்ட நாளைக்கு என்று தனியான உடைகள்.  இது தவிர விளையாட்டு என்பதற்கு அதற்கு தனியாக ஒரு உடை. பள்ளியில் தான் வாங்க வேண்டும்.  

அதைவிட கொடுமை இந்த சீரூடைகளை தைப்பவரிடம் கொடுத்து அதை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது. மகா சவாலான விசயமாக இருக்கிறது. காரணம் பள்ளிக்கு அருகே இருக்கும் அவரிடம் மலை போல குவிந்து கிடக்கும் மொத்த சீரூடைகளையும் பார்க்கும் போது அவரிடன் உழைப்பும், வருமானமும் மனக்கண்ணில் வந்து போனது. உத்தேச கணக்காக அவருக்கு சுமாராக இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம்.  

இயல்பான வருமானம் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் கதறிக் கொண்டு தான் உடைகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

இது போன்ற சமயங்களில் தான் என்னுடைய பள்ளிக்கூட நாட்களில் தபால் பெட்டி டவுசரோடு பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்து போகின்றது.

மற்ற பள்ளிகளை விட ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பள்ளிக் கட்டணம் இருக்கிறது.  நன்கொடை என்பது இல்லை.  தேவையில்லாத அக்கிரம செயல்பாடுகள் எதுவுமே இல்லை.  இருந்த போதிலும் வருடந்தோறும் குறிப்பிட்ட வகையில் பள்ளிக்கட்டண தொகையை ஏற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  இது எதனால் என்று புரியவே இல்லை.  ஆனால் உள்ளே பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தை ஏற்றியதாக தெரியவில்லை.

எல்லா அப்பாக்களின் வாழ்க்கையுமே ஏறக்குறைய பட்ஜெட் பத்மநாபன் வாழ்க்கை தான்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு மகளின் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஆனால் சூழ்நிலை வேறு விதமாக இருந்தது. வீட்டுக்ள் நடந்து கொண்டிருந்த உரையாடல்களை கவனித்துக் கொண்டே எதுவும் பேசாமல் சட்டையை கழட்டி விட்டு மெதுவாக குளியலறைக்கு நகர முற்பட்ட என்னை நான்கு பேர்களும் ரவுண்டு கட்டி நகர விடாமல் தடுத்தார்கள். இல்லை என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு என் பாணியில் சமாளிக்க இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு அதிரடி திட்டத்தை அமல்படுத்தினேன்.

ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்ன் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு கொடுத்தேன். 

குறிப்பாக மூன்று பேர்களுக்குள் சண்டை வரக்கூடாது.  தினந்தோறும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.  குறைந்த பட்சம் ஒரு முறையாவது தியானம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கட்டளைகள்.,  அப்படா.... இப்போதைக்கு தப்பித்தாகி விட்டது என்று நகர்ந்தேன்.

ஆனால் என்ன ஆச்சரியம்

ஒவ்வொரு நாளும் அட்சரம் பிறழாமல் எல்லாவற்றையும் கடைபிடித்து அசரடித்து என்னை கலங்கடித்தார்கள்.  அத்துடன் மற்றொரு காரியத்தையும் கூடவே செய்தார்கள்.  அலுவலகத்தில் இருக்கும் எனக்கு குறுஞ்செய்தி மூலம் இதை முடித்து விட்டோம் என்ற சாட்சி கடிதம் வேறு. எனக்கு புரிந்து விட்டது.  இந்த வாரம் மாட்டிக் கொள்ளப் போகின்றோம் என்று.

சென்ற வாரம் கடைக்குச் சென்ற போது ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது. மூத்தவளின் மூஞ்சி சுருங்கிப் போனதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். ஒரு பொருளை அடைவதற்கு முன்பு இருக்கும் அவளின் முஸ்தீபுகளை குறித்துக் கொண்டேன். 

இன்றைய தின ஞாயிற்று கிழமைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லைஇன்று காலையில் பக்குவமாக நடந்து மூவரும் சேர்ந்து அதே கடைக்கு அழைத்துச் சென்றார்கள்.  எப்போதும் போலவே பூட்டியிருந்தது.  அப்பா இங்கே வாங்கப்பா என்று நாலைந்து கடைகள் தாண்டி மற்றொரு மொத்த கொள்முதல் கடைக்கு அழைத்துச் சென்ற போது தான் எனக்கு புரிந்தது.  ஏற்கனவே வீட்டுக்கருகே இருந்தவர்களிடம் விசாரித்து திட்டமிட்டு இங்கே கொண்டு வந்து நிறுத்திய விதம்.

அமைதியாய் பணத்தை கட்டி விட்டு உள்ளே கவனித்தேன். 



எந்த வகையான வண்டி, என்னென்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும் என்று உள்ளே மிதி வண்டியை கோர்த்துக் கொடுப்பவர்களிடம் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அங்கே இருப்பதை மூவருமே கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் யான் பெற்ற இன்பம்.