Wednesday, October 26, 2011

தீபாவளி -- வலி, வழி


இந்த மாதம் முழுக்க எழுத முடியவில்லை.  

இயல்பாகவே வலைபதிவுகளை விட்டு குறிப்பிட்ட காலம் ஒவ்வொரு முறையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது எனது வழக்கம்.  ஆனால் இந்த முறை அடிமைகள் குறித்து எழுதியதைக் கூட சரி பார்த்து வலையில் ஏற்றமுடியாதபடி தொடர் வேலைப்பளூ.  கடந்த மூன்று வாரங்களாக உயிர் மறந்து உடல் துறந்து ஓடிக்களைத்த உடம்பு நேற்று தான் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.   

கடந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் எங்கள் குடும்பத்தில் அணைவரும் திருப்தியாக உணரும் தீப ஒளி திருநாள். 



நான் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் என்ற காகிதம் தான் இந்த கொண்டாட்டங்களை சிறப்பு அல்லது வெறுப்பு என்கிற நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருககிறது. காரணம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை வாங்கி சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நிறைய தேவைகள் நமக்கு உள்ளது.  

இருப்பதை மறந்து போய்க் கொண்டிருக்கிறோம். இல்லாததை தேடிக் கொண்டிருக்கிறோம்.  



வலைபதிவுகள் அறிமுகமானபிறகு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஆகா தீபாவளி வந்துடுச்சா? என்று உணர வைக்கும் அளவுக்கு ஒரு இணைப்பு பாலத்தை இந்த வலைபதிவுகள் உருவாக்குகின்றதோ என்று பலருடனும் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.



கடந்த நாலைந்து வருடங்களாக இது போன்ற கொண்டாட்டங்களை வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் தான் இருக்கின்றேன்.  இந்த வருடம் நிறைய வரலாற்று புத்தகங்களை படித்த போது குறிப்பாக தமிழர்களின் பழங்கால வரலாற்றை தெரிந்து கொண்ட போது இன்னும் நிறைய மாற்றங்கள் என் சிந்தனையில் வந்துள்ளது.. 

தமிழர்களின் ஒவ்வொரு தலைமுறையிலும் பத்து சதவிகிதம் தான் சகல சந்தோஷங்களோடும் வாழ்ந்திருக்கிறார்கள். மற்ற அத்தனை மக்களும் போராடிப் போராடி போயும் சேர்ந்துள்ளார்கள்.  

இன்று நிறைய மாற்றங்கள் வந்த போதிலும் திருப்தியான மன நிலையில் வாழ்பவர்கள் மிக குறைவாகவே கண்களுக்குத் தெரிகின்றார்கள்.  

அவரவர் மனநிலையே முக்கிய காரணமென்றாலும் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கும் விலை இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கூச்சப்படாமல் வாங்கிய பணம் ஒரு முக்கிய உதாரணம்.  அதை விட கொடுமை தோற்றவர்கள் வீடு வீடாக வந்து வசூலித்த விதம்.



குழந்தைகளின் அதீத ஞாபக சக்தியில் இருக்கும் அவர்களின் பிறந்தநாள் மற்றும் இந்த தீபாவளி திருநாளை முக்கியமான நாட்களாக கருதிக் கொள்வதால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத அளவுக்கும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.



கல்லூரிக்கு இவன் போனால் இன்னமும் கெட்டுப் போயிடுவான் என்று போராடிய அப்பாவை மீறி என்னை கல்லூரிக்கு அனுப்ப காரணமாக இருந்த கடைசி சித்தப்பாவும் சமீபத்தில் இறந்து போன காரணத்தால் இந்த தீபாவளி ஒரு வகையில் எனக்கு வலியான தீபாவளி தான்.  



சென்ற வருடம் திருப்பூரில் பாதி முதலாளிகள் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த வருடம் முக்கால் வாசி நிறுவனங்களுக்கு மூச்சே போய் விட்டது. ஆனால் தாக்குபிடித்து நிரந்தரமாக ஓடிக கொண்டிருந்த நிறுவனங்களில் தொடர் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் போலவே கிடைத்த போனஸ் தொகை அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.



நல்ல நிறுவனம்.  வருடம் முழுக்க வேலை நடந்து கொண்டிருக்கும்,. அண்ணன் தம்பி என்று இருவருமே கடுமையான உழைப்பாளிகள்.  கடந்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் நட்டத்தை போக்க வைத்திருந்த ஒவ்வொரு சொத்து பத்திரமும் வங்கிக்கு சென்று கொண்டிருந்தது.  500 பேர்கள் பணிபுரியும் நிறுவனத்திறகு போனஸ் கொடுக்க வேறு வழியே இல்லாமல் தம்பியின் வீட்டு பத்திரத்தை கேட்க உருவானது கொடுமையான போராட்டம்.  பாசம் பின்னுக்கு போய் விட பகை முன்னால் வந்து நிற்கின்றது.  இதைப் போலவே ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் ஓராயிரம் கதைகள். 

இங்குள்ள பல பெரிய நிறுவனங்களுக்கு போனஸ் தொகை கொடுக்க உதவியது பிரபல்ய அரசியல் தலைகளின் பணமே. வசூலிக்கும் வட்டி கணக்கை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றி விடும்.

இதுவும் கடந்து போகும்.



ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் இருந்த அதே மின்வெட்டு இப்போதும் நேரம் காலம் தெரியாத அளவுக்கு போய் படாய் படுத்திக் கொண்டிருக்கிறது.  எப்ப வரும்? என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருககிறோம்.  ஆனால் ஜெ வுக்கு உள்ளாட்சி தேர்தல் (அதிமுக தொடங்கி இப்போது தான் சென்னை மேயர் பதவியை பிடித்துள்ளது) எந்த அளவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதோ அந்த அளவுக்கு கிராமத்து மக்களிடமும் அதிக சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.  காரணம்?

நான் பிறந்த ஊரில் வரிசையாக நண்பர்கள் உறவுகள் என்று ஒவ்வொருவரையும் அழைத்து பேசத் தொடங்கிய போது ஆச்சரியமும் அதிசயமுமாக அவர்கள் வார்த்தைகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.  காரணம் சாதாரணமாக பேரூராட்சி என்கிற ரீதியில் உள்ள ஊரில் தலைவர் பதவிக்கு நின்றவர் செலவழித்த தொகை சுமாராக ஒரு கோடி ரூபாய்.  சொந்தமாக நவீன அரிசி ஆலை வைத்துள்ளார்.  தமிழ்நாடு முழுக்க சூர்யா பிராண்ட் என்று 25, 50 கிலோ சாக்கு பையில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.  ஒரு குடும்பத்திற்கு இருக்கும் ஓட்டின் எண்ணிக்கைப் பொறுத்து 3000 முதல் அதிகப்ட்சம் 10000 வரைக்கும் வாரி வழங்க அணைவரும் மகிழ்ச்சியாக இந்த தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவரும் ஜெயித்து விட்டார்.

நண்பனிடம் கேட்டேன்.

இவ்வளவு செலவழித்து இருக்கிறாரே?  இது என்ன கணக்கு? என்றேன்.

ஆமாண்டா......... ஊருக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் வரப் போகுது.  திட்ட மதிப்பீடு 48 கோடி. எல்லாம் ரெடியாக இருக்கு.  இவர் வந்ததும் வேலை ஆரம்பிக்கப் போகுது. என்றான்.

கோடிட்ட இடங்களை நாம் தான் நிரப்பிக் கொள்ள வேண்டும்.



குழந்தைகளில் கடைக்குட்டியிடம் நேற்று பல விசயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது உள்ளே இருந்த மனைவி என்னைப் பார்த்து அடிக்க ஓடி வந்தார்.  காரணம் ஒன்றுமில்லை.  கீழே உள்ளதைப் படித்துப் பாருங்க.

நடந்த தேர்தலில் யாருப்பா ஜெயிச்சாங்க?

ஜெயலலிதா.

அப்ப கருணாநிதி

இரண்டாவது இடம்.

ஏம்மா?

விஜயகாந்த எத்தனாவது இடம்?

மூன்றாவது இடம்.

இல்லப்பா விஜயகாந்த் ஜெயித்து இருக்க வேண்டும்.

ஏம்மா?

இவங்க எல்லாரும் தேவைப்படும் அளவுக்கு சொத்து சேர்த்துட்டாங்க. விஜயகாந்த வந்துருக்கலாம்ல?

(சாமீகளா சத்தியமா இவங்களோட நான் பொறுமையா பேசி ஒரு மாதம் ஆகப் போகுது.  நான் கெடுத்து வச்சுருக்கேன்னு ஏம்மேல எம் பொஞ்சாதி பாயுற மாதிரி நீங்களும் அடிக்கவராதீங்க?)

தீபாவளி மட்டுமே கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல.  ஒவ்வொரு நாளுமே மன இருளை போக்கி கொண்டாடப்பட வேண்டிய நாளே.  

அணைவருக்கும் வாழ்த்துகள்.

26.10.2011