Thursday, March 31, 2011

நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்

கடந்த சில பதிவுகளில் நண்பர்களின் பின்னோட்டங்களுக்கு பதில் அளிக்காமல் விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தமைக்கு முக்கிய காரணம் இந்த பதிவில் மொத்தமாய் பதில் அளிக்கலாம் என்பதே ஆகும். மொத்த விசயங்களையும் ஒரே பதிவில் அடக்க வேண்டிய சூழ்நிலையினால் இந்த நீள்பதிவின் இம்சையை பொறுத்தருள்க.


இந்த கட்டுரையின் நோக்கம் என் சுயபுராணம் என்பதைவிட ஒரு வலிமைவாய்ந்த மீடியா ஒரு கட்சியின் கையில் இருந்தால் அதுவே ஆளுங்கட்சியாக இருக்கும்பட்சத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும்? ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடைய தொழில் அதிபர்களின் போக்கு எப்படி ஒரு போராட்டத்தை திசை திருப்பிவிடும்? அதுவே பல்வேறு கூறுகளாக ஒற்றுமையற்று இருந்தால் வெகுஜன போராட்டமென்பது எத்தனை கேலிக்குறியதாக மாறிவிடும்? ஒரு பகுதியில் நடந்த உண்மையான விசயங்களுக்கும் வெகுஜன மக்களுக்கு ஊடகம் கொண்டு வந்து சேர்க்கும் விசயங்களும் எத்தனை மாறுபாடுகள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்?

நடைபெறப்போகின்ற ( 2011 ஏப்ரல் 13 ) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ப்ளாஷ் நியூஸ் என்று சொல்லப்படும் முக்கியத்துவம் பெற்ற ஒரு செய்தி திருப்பூர் வடக்குத் தொகுதி. இப்போது திருப்பூர் நகரம் என்பது மாவட்டம் என்ற அந்தஸ்த்துக்கு வந்துள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உருவானது.  ஒன்று தெற்கு. மற்றொன்று வடக்கு. இந்த வடக்கு தொகுதியில் தான் மா.கம்யூ ல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து இப்போது உடன்பிறப்பாக மாறிய கோவிந்தசாமி திமுக வின் சார்பாக களமிறங்கியுள்ளார். தெற்கு தொகுதியில் திமுகவின் கூட்டாளியான காங்கிரஸ்க்கு (கட்டக்கடேசியாக) ஒதுக்கப் பட்டுள்ளது.

இங்கு வெளியே காட்டிக் கொள்ளமுடியாத திமுக எதிர்ப்பு பல விதங்களிலும் உண்டு. அதற்கு மேலாக வடக்கு தொகுதி வேட்பாளரான கோவிந்தசாமியின் தனிப்பட்ட 'நடவடிக்கை'களின் காரணமாக திருப்பூர் வடக்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 141 பேர்கள் களமிறங்கி மொத்த ஊடகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்கள்.  யார்? ஏன்? எப்படி?

18.03.2011  காலைப்பொழுது

கடந்த இரண்டு மாதமாக வெற்றிகரமாக செயல்படுத்தியபடி வீட்டில் முதல் நபராக மூத்தவள் காலை செய்திதாளை சப்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தார்.  கால்பக்கம் அளவிற்கு 'வாக்காளர் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. வடக்கு கிழக்கு இரண்டு தொகுதிக்கும் தலா ஆயிரம் பேர்களை களமிறக்குவதாக அந்த அறிவிப்பு சொல்ல கேட்டுக் கொண்டிருந்த நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நகர்ந்து போய்விட்டேன்.

19.03.2011 நள்ளிரவு

நள்ளிரவில் நண்பரின் அலைபேசி அழைப்பு என்னை விழிக்க வைத்தது. குறிப்பிட்ட சாயப்பட்டறையில் உயர்பதவியில் இருப்பவர். இவருடன் எப்போதும் என்னுடன் தொடர்பிலிருக்கும் மற்ற நான்கு பேர்களுகளுக்குள் நடந்த உரையாடலின்படி என்னை அழைத்துப் பேசினார்.


'நடைபெறப்போகும் தேர்தலில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும்' என்றார்.  சப்தம் போட்டு சிரித்து விட்டு காரணத்தைக் கேட்டேன்.  முழு விபரங்களை கேட்டு விட்டு மனதில் சிரித்துக் கொண்டு அவரை கலாய்த்து விட்டு பேசிய விசயங்களை மறந்து விட்டேன்.  அவர் பேசியபோது கேட்ட வேட்புமனுவுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் என்னிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.

20.03.2011 பகல்பொழுது

இரண்டு முறை நண்பரும் அவரைச் சார்ந்தவர்களும் என்னுடன் உரையாடிய போது இது குறித்து பரஸ்பரம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை சங்கங்களில் பிரிந்துள்ள அரசியல் நிலைபாடுகளையும், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள பொறுப்பில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களின் சுயநல குணாதிசியங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக வரப்போகும் சென்னை நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது விரைவில் நாங்களும் ஊர்ப்பகம் செல்லக்கூடிய சூழ்நிலை வந்துவிடும் போலிருக்கு என்றார்.

என்னால் பதிலளிக்க முடியவில்லை. 

21.03.2011  அதிகாலை.

நண்பர் தூக்கத்தில் இருந்த எழுப்பி வாக்களர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தாலூகா அலுவகத்திற்கு காலை 11 மணிக்கு வரச் சொன்னபோது வியர்த்துப் போனேன். விளையாட்டு வார்த்தைகள் விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அப்போது தான் உணர ஆரம்பித்தேன்.  


பரபரப்பான வேலைகளுக்கிடையே நான் மறந்து விடுவேன் என்று மற்ற நண்பர்களும் அழைத்துச் சொன்ன போது தான் இது ஏற்கனவே 'திட்டமிட்ட பரிபூரண உணவு' என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டில் உள்ள நிதிமந்திரியிடம் எது குறித்தும் எப்போதும் எல்லாவிசயங்களையும் நான் சொல்லிவிடுவது வழக்கம்.  இதையும் சொன்ன போது 'உங்கள் பத்து வருட நட்பு கெட்ப் போகின்றது.  உங்க தனிப்பட்ட குணாதிசியமும் முழுமையாக அவருக்குத் தெரியாது' என்றார் சிரித்துக்கொண்டே.

21.03.2011 மதியம்

திருப்பூர் தாலூகா அலுவலகத்திற்கு அருகே வங்கிகளும் இருப்பதால் பல விதங்களில் எனக்கு வசதியாக இருந்தது.  நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் நண்பர்கள் ஒவ்வொருவரும் அலைபேசி மூலம் என்னை தொடர்ந்து கொண்டிருந்தனர். நான் திருப்பூர் தாலூகா அலுவலகத்தில் உள்ளே நுழைந்த போது முன்னால் இருந்த ஒரு கூரையின் கீழ் ஏராளமான நண்பர்கள் கூடியிருந்தனர்.  பக்கத்தில் ஒரு நீண்ட வரிசையும் நின்று கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர் அவர் கையில் வைத்திருந்த விண்ணப்ப படிவத்தை என் கையில் கொடுத்து பூர்த்தி செய்து தாருங்கள் என்றார்.

சரிபார்த்துவிட்டு மீண்டும் என்னிடம் தந்தவர் 'அந்த வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி வாருங்கள்' என்று அனுப்பினார்.

என்னைப் போலவே முப்பத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். என் பொறுமையின்மை கொண்டு செலுத்த முன்னேறிச் சென்றேன். உள்ளே என்ன நடக்கின்றது? என்று பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு அநத நீண்ட வரண்டாவில் மேலேறி நின்றபோதுதான் வரிசையில் நின்று கொண்டிருந்த நபர்களை உற்று கவனிக்கத் தொடங்கினேன். 

அத்தனைபேர்களும் 24 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். பல்வேறு சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்த்தவர்கள். நான் போன வேலையை மறந்து விட்டு அந்த ஓங்குதாங்கான உடல்வாகை ரசித்துக் கொண்டு அந்த புஜபலசாலிகளை சிநேகம் பிடித்து பேசிக் கொண்டிருக்க அந்த கருத்த உடல் இளைஞர்களின் மனம் சுத்த வெள்ளையாக இருந்தது. வெறும் அம்பாக உள்ளே வந்து வரிசையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அத்தனை பேர்களும் கடந்த அறுபது நாட்களாக ஒவ்வொரு சாயப்பட்டறைகளின் உள்ளே இருக்கும் உணவகங்களில் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் மற்றும் கிராமத்து விளையாட்டுக்களை பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

பலசமயம் வீடியோ பார்த்து காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள்.  

'ஏனப்பா ஊருக்கு போனாலாவது விவசாயத்தை பார்க்கலாமே'? என்றேன்.

'விவசாயம் பார்க்க நிலம் இருந்தாத்தானே போகமுடியும்?' என்று திருப்பிக் கேட்டு சிரித்தனர்.

பெரும்பாலானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களுமே திருப்பூருக்குள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதை அவர்களின் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.


என் முறை வந்த உள்ளே நுழைந்து பெற்ற வேட்பு மனு விண்ணப்ப படிவத்தை பெற்று கையெழுத்து போட்டு நிமிர்ந்த போது சுவற்றில் மாட்டியிருந்த காந்தி படம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த விண்ணப்ப படிவத்தை முழுமையாகக் கூட படித்துப் பார்க்காமல் ஒப்படைக்க வேண்டிய நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் போக வேண்டிய வங்கிக்கு பறந்து விட்டேன்.

22.03.2011 காலை

மறுபடியும் என்னை துரத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்புடன் நண்பர் வரவழைத்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது தான் இந்த திட்டத்தின் முழு வீர்யமும்  அப்போது தான் எனக்குப் புரிந்தது.  வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த குளிர்சாதன குறுகிய அறைக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கூட்டத்தின் வியர்வை நாற்றம் நாசியைத்தாக்க அவசரமாக எனக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து விட்டு வெளியே வந்து போது நண்பரிடம் கேட்டேன்.

'இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?' என்றேன்.

'நாளை ஒரு அலுவலகத்திற்கு வருவீர்கள்? அப்போது புரியும்' என்றார்.

அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்?

குழப்பத்துடன் நகர்ந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள நிதி மந்திரி இது குறித்து செய்தி தாளில் உள்ள விளம்பரங்களையும் மற்ற தொகுப்பு விபரங்களையும் சேகரித்து வைத்திருந்தவர் என் கையில் கொடுத்தார்  அப்போது தான் அந்த வார்த்தையை முதன் முதலாக படித்தேன்.

'தொழில் பாதுகாப்பு குழு' என்ற பெயரை வைத்து ஒரு விளம்பரம் வந்திருந்தது.

23.03.2011 காலை

அடிப்படை வேலைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவசரமாக தாராபுரம் சாலையில் உள்ள அந்த அலுவலகத்தை கண்டு பிடித்து அந்த மொட்டை மாடிக்கு வந்த போது ஒரு ஈ காக்காயை கூட காணவில்லை.  இந்து முண்ணனிக்கு இப்படி ஒரு காரியாலயம் இருப்பதையே அப்போது தான் உணர்ந்து கொண்டேன்.


நண்பர்கள் அவசரப்பட்டு போய்விடாதீர்கள். வந்து கொண்டேயிருக்கிறோம் என்றபடி என்னை அங்கேயே அமர வைத்தனர்.  காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் என் விண்ணப்பபடிவத்தை நிரப்ப சொல்லிக் கொடுத்தபடி நிரப்பி முடித்த போது நண்பர்களான பஞ்ச பண்டவர்கள் வந்து இறங்கினர். அப்போது கூட எனக்கு முழுமையாக இது குறித்து நம்பிக்கை வரவில்லை.

காரணம் திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை சங்க நிகழ்வுகளையும், உள்ளேயிருக்கும் ஒவ்வொரு விசயங்களையும் தினந்தோறும் உள்வாங்கிக் கொண்டிருப்பதால் ஏதோவொரு கோமாளி வேஷம் போடுவது போல் இருந்தது. நண்பர்கள் வந்து சேர்ந்தனர். சற்று நேரத்தில் அவர்களின் விண்ணப்ப படிவங்களும் பூர்த்தி செய்யப்பட்டது.

'இதே அலுவலகத்திற்கு மீண்டும் இன்று இரவு வந்து விடுங்க' என்றனர்.

ஏன்? என்று கேட்ட போது உங்களுக்கு பல விசயங்கள் புரியும்! என்று நண்பர்கள் மையமாக புன்னகைத்தனர்.

23.03.2011 இரவு

அவசர வேலைகள் ஏதுமில்லாமல் அமைதியாக அந்த காரியலாயத்திற்குள் நுழைந்த போது முதல் முறையாக அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை எவ்விதம் செயல்படுத்துகிறார்கள் என்பதை அங்கு நடந்த பல நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. திடீரென்று உருவான மின்தடை பொருட்டாய் இல்லாமல் மினி ஜெனரேட்டர் கூடியிருந்த கூட்டத்தினரின் உரையாடல்களை நடத்திச் செல்ல உதவிபுரிந்து கொண்டிருந்தது.  ஓரு ஓரமாய் இருந்த டீ கேன் மூலம் தொடர்ந்து டீ கேட்பவர்களுக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறையாக இதற்கு பின்னால் உள்ள அத்தனை முகங்களையும், முதலாளிகளையும் பார்த்தேன்.


இது போன்றதொரு திட்டத்தை வரைவு செய்தவர்களும்,முன்னிலை படுத்தவேண்டும் என்று உருவாக்கியவர்கள் அருள்புரம் பொதுசுத்திகரிப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சங்கத்தைச் சார்ந்த சாயப்பட்டறை முதலாளிகள் மற்றும் அறிமுகமில்லாத பலரும் அங்கே திட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

காரணம் மறுநாள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நாள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாஸிட் தொகை கட்டத் தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்த உரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது. குழப்பங்களும். நம்பிக்கையின்மையுமாய் அந்த கூட்டம் என் பார்வையில் தெரிந்தது.

பொறுமையிழந்து உட்கார்ந்திருந்த போது என்னிடம் நண்பர்கள் 'நாளை காலை இங்கேயே வந்து.விடுங்க' என்றனர்.

'இவர்கள் ஓடத்தை கரையில் சேர்க்க மாட்டார்கள். தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம்' என்றேன்.

நண்பர்கள் மறுத்துப் பேசி என்னை சம்மதிக்க வைத்தனர்.

24.03.2011  காலை

என் வேட்புமனுவுக்கான விண்ணப்பபடிவத்தில் பரிந்துரை செய்ய வேண்டிய பத்துப் பேர்கள் என்ற பகுதிமட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. காலையில் அது குறித்து தெரிவிக்க அதற்கான வேலைகள் நடந்தது. அப்போது வந்த அலைபேசியில் வந்த அழைப்பை பேசுவதற்காக சம்மந்தப்பட்டவரிடம் என் விண்ணப்பபடிவத்தை ஒப்படைத்து விட்டு நகர்ந்து சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்போது தான் பகவான் என் விண்ணப்ப படிவத்தில் வந்து அமர்ந்ததை கவனிக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட என் படிவத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். நேற்று இரவு நிதி ஆதாரம் குறித்து வாக்களித்த எந்த பெரிய தலைகளும் வரவில்லை. அத்தனை பேர்களும் இரவு நடந்த ஏதோவொன்றினால் பின்வாங்கி போயிருப்பதை உணர்ந்து கொண்டேன்.

நண்பர்கள் அவர்களுக்கு மற்ற வேலைகள் இருந்த காரணத்தால் அன்று பகல் பொழுதில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் என் வேட்பு மனுவை கொண்டு போய் சேர்த்தேன். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளும் வெளியே இருந்தது. என் விண்ணப்பபடிவத்திற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண் கிடைத்த நேரம் பிற்பகல் 3.10. ஆனால் உள்ளே நுழைந்து முறைப்படி ஒப்படைத்த நேரம் மாலை 6.45.  ஆனால் இதற்கிடையே அலுவலக வாசலில் இருந்த மத்திய மாநில உளவுத்துறையினர், மீடியா மக்கள், தனிப்பட்ட ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு வேட்பாளர்களின் பின்புலம் முதல் ஜாதி வரைக்கும் கேட்டு குறித்து எவருக்கோ கடத்திக் கொண்டிருந்தனர்.  கவனிப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்தது.  கண்களுக்குள் பசி என்ற பூச்சி மட்டும் பறந்து கொண்டேயிருக்க காணும் கட்சிகள் எதுவும் மனதிற்குள் பதியாமலேயிருந்து.


கோட்டாட்சியர் அலுவலகம் முழுக்க ஏகப்பட்ட காவல்துறை கெடுபிடிகளில் வெளியே எங்கே செல்ல முடியாமல் வயிறு காய வெறுப்பும் சோகமும் எதிரே உள்ள சிறைச்சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்த போது மண்டைக்குள் கிர் என்ற சப்தம் கேட்ட போதிலும் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. நேரங்கெட்டு சாப்பிட்ட போதிலும் ஏதோவொரு இனம் புரியாத சந்தோஷ உணர்வு. குறிப்பிட்ட நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்தேன்.

25.06.2011 காலை.

இப்போது தான் இந்த 'தொழில் பாதுகாப்பு குழு'வுக்கென்று நியமிக்கப்பட்ட பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.  ஏற்கனவே வேட்பாளர் விண்ணப்ப படிவத்துடன் கொடுக்கப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட் மட்டும் போதாது அதற்கான பாஸ்புக் வேண்டும் என்ற கெடுபிடித்தனம் உருவாகியுள்ளதை தெரிவித்தனர். காரணம் ஒவ்வொரு நாளும் சுயேட்சைகளின் எண்ணிக்கை அதிகமாக ஒவ்வொரு சட்டதிட்டமும் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  வங்கிக்குச் சென்றால் பாஸ்புக் கைவசமில்லை என்ற பதிலை கேட்ட போதிலும் பொறுமையாக அங்குள்ள அதிகாரிக்கு புரியவைத்து, அவர்களிடம் இருந்த இரண்டு பாஸ்புக்கில் ஒன்றை பெற்று என் புகைப்படத்தை ஓட்டி ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த போது அடுத்த அழைப்பு அதே பெண்ணிடமிருந்து வந்தது.

'சொத்து குறித்த கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ்களையும் கொண்டு போய்  கொடுத்து விடுங்க' என்றார்.

கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு முதன் முறையாக நான் சென்றபோது அங்கே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.. என்னுடன் பத்து வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது. அந்த சான்றிதழ்களையும் கொண்டு போய் ஒப்படைத்துவிட்டு வீட்டில் வந்து நிதி மந்திரியும் சொன்ன போது சப்தம் போட்டு சிரித்தார்.


'நாளைக்கு தான் பஞ்சாயத்து ஆரம்பிக்கப் போகின்றது' என்றார்.

ஏன்? என்று கேட்ட போது திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அதிமுக பொன்னையன் பேசிக் கொண்டிருப்பதையும் பத்திரிக்கையில் வந்த செய்திகளை சுட்டிக் காட்டி பேசினார். இதற்கிடையே சாய்ப்பட்டறை சங்கத்தின் பெயர் மாற்றம், பிரிந்த சாயப்பட்டறைகளின் லாவணிக் கச்சேரி, எதிர் அறிக்கை என்று ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது.

இந்து முண்ணனி காரியாலயத்தில் நான் இருந்த நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பு குழுவுக்கு ஒருங்கிருணைப்பாளராக இருந்தவருக்கும், அருகே இருந்த மற்றொரு முக்கிய பிரமுகருக்கும் வந்த அலைபேசி உரையாடல்களையும், மிரட்டல்களையும்,வாக்குவாதங்களையும்  கெஞ்சல்களையும், அழுத்தங்களையும் கவனித்தவனுக்கு இந்த செய்திகள் பெரிதாக தெரியவில்லை.  இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்து முண்ணணி அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால் இங்கே நடக்கும் அத்தனை வெகுஜன போராட்டங்களுக்கும் முன்னிலையில் ஆதரவு கொடுப்பவர்கள் இவர்களே.  ஆனால் இவர்களின் செயல்பாடுகளை முதல் வரிசையில் நின்று எதிர்ப்பவர்களே சாயப்பட்டறை முதலாளிகள் தான். காரணம் பல விதமான பயங்கள்.

26.03.2011

ஒவ்வொரு ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு அலறத் தொடங்கியது. காரணம் திங்கள் கிழமை (28) முதல் போட்டியிடும் அணைத்து சுயேட்சைகளும் வாபஸ் வாங்குகிறார்கள் என்ற செய்திகளை படித்து / கேட்டுக் கொண்டே வந்த போதிலும் அது போன்று எந்த முடிவும் இங்கே இல்லாமல் தான் இருந்தது. மனுத்தாக்கல் செய்த ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களும் பரஸ்பரம் விசாரிக்கத் தொடங்கினர். மேல்மட்ட நிகழ்வுகளையும், உரையாடல்களையும் உணர்ந்து கொள்ள முடியாமல் தவித்தனர். நான் உண்மைகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டான தர்மத்தை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

வேட்பு மனுக்கான டெபாஸிட் தொகையை ஏற்கனவே பேசியபடி எந்த சங்கமும் ஏற்க முன்வராத காரணத்தால் தெரிந்தவர், அறிந்தவர், பழகியவர், நட்பு என்கிற ரீதியில் அவரவர்களும் பகிரிந்து கொண்டு கட்டத் தொடங்கினர். பல சாயப்பட்டறை முதலாளிகளே ஏற்றுக் கொண்டுவிட வேட்பு மனுத்தாக்கலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் இந்த குழுவுக்கு வழிகாட்டியாக இருக்கும் தணிக்கையாளர் முதல் வழ்க்குரைஞர் வரைக்கும் களமிறக்க தயராய் இருந்தனர்.

வாபஸ் குறித்து எந்த முயற்சிகள் நடக்காத போதும் இது குறித்து வந்து கொண்டிருந்த செய்திகளை கவனித்துக் கொண்டே வந்த எனக்கு கலைஞர் தொலைக்காட்சி இந்த நிகழ்வுக்கு காட்டிய அக்கறையும், சன் தொலைக்காட்சி பிட்டு போல சொல்லிக் கொண்டு வர ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த செய்திக்காக காத்திருந்தேன்.

காரணம் இரவு நடந்த மேல்மட்ட உரையாடல்கள் அழுத்தங்கள் ஒவ்வொன்றாக மறுநாள் வெளிவரத் தொடங்கியது. .

27.03.2011 

நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து வாபஸ் வாங்குவது குறித்து பேசத் தொடங்கினர்.  காரணம் நாளை (28) மனு ஆய்வு தினம்.

நிராகரிப்பட்டவை, சந்தேகம் உள்ளவை, வாபஸ் வாங்க விரும்புவர்கள் போன்ற அத்தனை பஞ்சாயத்துகளும் நடக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் ஆணைய தாளில் ஒரு பக்கத்தில் இதற்கான அழைப்பு இருந்தது.  எவராவது என்னிடம் பேசத் தொடங்க வார்த்தைகள் வித்யாசமாக வந்து விடுமோ என்று யோசித்துக் கொண்டு அந்த கூட்டத்திற்கு போகாமல் இருந்து விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அலைபேசியில் அழைத்த நண்பர்கள் குழுவிடம் மென்மையாக இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தே வீட்டில் நிதி மந்திரி சப்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

28.03.2011  

காலை ஒன்பது மணிக்கு முதல் அழைப்பு வந்தது. 

'தொழில் பாதுகாப்பு குழுவிலிருந்து பேசுகின்றேன். உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து விடுங்க' என்றார்.

என்ன காரணம் என்று கேட்ட போது அந்த பெண்ணின் குரல் முழுமையற்று கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப ஒரே வாசகத்தை பேச `ஃபோனை வைத்து விடும்மா என்றேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் அதே எண்ணில் இருந்து மற்றொரு பெண் பேசிய போது பெண்களிடம் கெட்ட வார்த்தைகள் பேசுவது எனக்குப் பிடிக்காது.  வைத்து விடும்மா என்றேன்.

தகவல்கள் மேலே செல்ல ஒவ்வொருவராக அழைக்கத் தொடங்கினர். நண்பர்கள் குழுவிற்கு ஒவ்வொரு அழுத்தமும் வந்து சேர அலைபேசியின் உயிரைப் போக்கி விட்டு அமைதியாக அன்றைய பகல் தூக்கத்தை நீண்ட நாளைக்குப் பிறகு ரசித்து தூங்கிப் போனேன். இடையில் எழுந்து அலைபேசிக்கு உயிருட்டிய போது வந்து விழுந்த கால் அலர்ட் என்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. அத்தனையும் புதிய எண்கள்.  ஐம்பதுக்கும் குறையாமல் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. நண்பர்களின் எண்களும் இருக்க மீண்டும் அலைபேசியின் உயிரைப் போகிக்கி விட்டு அமைதி காத்தேன்.

29.03.2011

மீண்டும் காலை ஒன்பது மணிக்கு அலைபேசியை உயிரூட்டிய போது மறுபடியும் பொல பொலவென்று குறுஞ்செய்திகளில் அலைத்த எண்களின் விபரங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

மனம் கேட்காமல் நண்பரை அழைத்த போது கோபப்படாமல் சப்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினர்.  

'நம்முடைய ஐந்து பேரில் உங்கள் விண்ணப்ப படிவம் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போலவே எழுபது பேர்களின் விண்ணப்ப  படிவங்களையும் நிராகரிப்பு என்ற நிலையில் கொண்டு வந்து விட்டார்கள். எங்கள் முதலாளி சொன்னபடி நாங்கள் நான்கு பேர்களும் வாபஸ் வாங்கி விட்டோம்.  நீங்க தான் விழுந்து விழுந்து எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து ரொம்ப அக்கறையாக கொண்டு போய்ச் சேர்த்தீங்க.  நாங்களாவது பேங்க ஸ்டேமெண்ட் மட்டும் தான் வைத்தோம்.  நீங்க மெனக்கெட்டு பாஸ்புக் கூட வைத்தீங்க. யாரோ ரொப்பிக் கொடுத்தாங்க.  கையெழுத்து மட்டும் தான் நாங்க போட்டோம்'என்று அவர் சிரித்த சிரிப்பை ஸ்பீக்கரின் வழியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது என் பக்கத்தில் வீட்டு நிதி மந்திரியும் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.   அவர் சிரித்து முடித்ததும் இவர் சிரிக்கத் தொடங்கினர்.

29.03.2011

அவசரமில்லாது மாலையில் கோட்டாட்சியர் அலுவகத்தில் நுழைந்த போது ஒரு ஈ காக்காய் கூட இல்லை.  அப்போது அங்கு அறிமுகமான ஒரு உயர் அதிகாரி தொடர்பு கிடைத்தது. பழகிய சில நிமிடங்களில் நண்பராக பேசத் தொடங்கினார். அந்த அறையில் வேறு யாருமில்லை. தனிப்பட்ட முறையில் முக்கால் மணி நேரம் என்னுடன் பேசிய போது தான் பல விசயங்கள் புரிந்தது.

இங்கும் அந்த அதிகாரியின் இருக்கைக்கு பின்புறம் அதே காந்தி தாத்தா புகைப்படம். வேறுபக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

காந்தி தாத்தா சிரிக்கும் சிரிப்பின் அர்த்தம் இப்போது எனக்கு புரிந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

பாதிக்கு மேற்பட்டவர்கள் எவரும் வாபஸ் வாங்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களை அழைத்து சமாதானப்படுத்த அலைபேசி வழியாக அலைத்தவர்களின் காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு. தொழில் பாதுகாப்பு குழு உருவாக்கிய வேகம் கலையத் தொடங்க ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஆதங்கம் வெளியேறத் தொடங்கியது. திசைதெரியாத பறவை போல மாறத் தொடங்கினர். பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாபஸ் வாங்குபவர்களின் புகைப்படம் என்று போட்டுத் தாக்க படிப்படியாக வேறு வழி தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.

இதற்கு பின்னால் உள்ள எதிர்மறை நியாயங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
.

விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

நன்றி தமிழ்மீடியா, முன்னெடுக்க தயாராகயிருந்த வலையுலக தோழமை களுக்கும், மற்றும் சின்னம் வந்துவுடன் சொல்லுங்க. மற்ற திட்டமிடுதல்களை பேசுவோம் என்ற உள்ளூர் தோழனுக்கும்.

Wednesday, March 30, 2011

இந்திய அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டவாறு .................

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நாமும் வேட்பாளாராக மாற சென்ற பதிவில் சொன்னபடி வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்து அத்துடன் வங்கி கணக்கு, சொத்து குறித்த சான்றிதழ்கள், வழக்குரைஞர் சான்றிதழ்கள், கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பகுதியையும் சரியாக பூர்த்தி செய்து உள்ளோமோ என்று கவனித்து தேவைப்படும் அத்தனை இடங்களிலும் நாம் கையொப்பமிட்டு தைரியமாக சிங்க நடை போட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்றாலே ஒரு தனிப்பட்ட கம்பீரம் உங்களுக்கு வந்து விடுவதை உணரக்கூடும்.  


காரணம் இந்தியாவில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் இது போன்ற சமயத்தில் நாம் எத்தனை சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நமக்காக எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக உணர முடியும்.  

அந்தந்த வருவாய் கோட்டாட்சியாளர் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

இவர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் அமர்ந்திருக்கும் நபர் நம்மை வரவேற்பார்.  வரிசையில் நின்று அவரிடம் நாம் பூர்த்தி செய்து வைத்துள்ள மொத்த விண்ணப்ப படிவங்களையும் கொடுத்தால் நம்முடைய பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் போன்றவற்றை குறிப்பிட்டு ஒரு துண்டுச்சீட்டை நம்மிடம் கொடுப்பார். அதில் வரிசை எண் போடப்பட்டிருக்கும்.

அந்த எண் சொல்லி அழைக்கும் போது அலுவலகத்தின் அடுத்த பகுதிக்குள் செல்ல அனுமதி கிடைக்கும். அங்கே இருவர் அமர்ந்திருப்பார்கள் அவர்கள் கையில் நான்கு பக்கம் உள்ள விண்ணப்ப படிவம் இருக்கும்.  இதுவரையிலும் நாம் கையாண்ட எந்த படிவத்திலும் ஆங்கிலம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது.

இப்போது வழங்கப்படும் படிவத்தில் ஆங்கிலப் படிவமும் இருக்கும். நம் பெயரை முகவரியை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பதுடன் மற்ற சம்பிரதாய விசயங்களையும் கொடுக்கப்பட்ட மற்ற படிவங்களிலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இனிமேல் தான் உங்களுக்கு ஒரு வித்யாச அனுபவம் கிடைக்கும். 

நாம் சராசரி, சாமான்யன் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ள தேர்தல் அதிகாரி (கோட்டாட்சியர்) இருக்கும் அறைக்குள் சென்றதும் கிடைக்கும் ராஜமரியாதை ஆச்சரியப்படத்தக்கது. 

அந்த அறையில் கோட்டாட்சியர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரின் பக்கவாட்டில் ஐந்து அலுவலர்கள் (இரண்டு பெண் அலுவலர்) அமர்ந்து இருப்பார்கள்.  முதல் நபர் நம்முடைய துண்டுச்சீட்டை பெற்றுக் கொண்டு அடுத்தவரிடம் நம்முடைய விண்ணப்ப படிவம் மற்றும் அதனைச் சார்ந்த மொத்த சான்றிதழ்களையும் வழங்குகிறார். இவர் ஒவ்வொன்றையும் சரிபார்த்து விட்டு அடுத்தவரிடம் கொடுக்க அவர் நாம் சொல்ல வேண்டிய பிரமாண பத்திரத்தையும் கொடுத்து கோட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்க அனுப்புகிறார். 

நம்மிடம் வாங்கிய அந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு பக்கவாட்டில் நிற்கும் புகைப்படக்காரர் கோட்டாட்சியருடன் சேர்த்து நம்மை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.  நாம் உள்ளே நுழைந்தது முதல் இறுதியாக பிரமாண பத்திரம் வாசிக்கும் வரையிலும் உள்ளேயிருக்கும் வீடியோகிராபர் மொத்த நிகழ்வுகளையும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக பிரமாண பத்திரம் வாசிக்கும் போது நம்மை மட்டும் தனியாக அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை படமாக்கிக் கொள்கிறார்.


இப்போது பக்கவாட்டில் கடைசியாக இருக்கும் அந்த அலுவலரிடம் மீண்டும் மொத்த விண்ணப்பபடிவங்களையும் கொடுத்து விட அவர் ஒரு பிரமாண பத்திரத்தை கொடுத்து எழுந்து நின்று வாசிக்கச் சொல்கிறார். அதன் சுருக்கம் இது.

.................................................. ......................................................இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வேட்பாளராகிய ........................................................ தேதி............................................. அன்று ........................................................ மணிக்கு இந்திய அரசியமைப்பில் சொல்லப்பட்டுளளவாறு ஆண்டவன்/உளமாற மீது சூளுரைத்து உறுதி கூறுகின்றேன்.

இறுதியாக கையொப்பமிடும் போது புகைப்படம் எடுக்கப்படுகின்றது.

விடைபெறும் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கான சான்று, நம்முடைய வேட்பு மனு எப்போது பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளபடும் என்பதற்கான விபரங்கள் அடங்கிய படிவம், நாம் வேட்பு மனுக்காக செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் பத்தாயிரத்திற்கான ரசீது (இது தான் டெபாஸிட் தொகை என்றழைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல்களில் சுயேச்சைகள் அதிகளவில் போட்டியிட்ட காரணத்தால் தான் பத்தாயிரம் என்கிற அளவிற்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது)  பத்திரிக்கையில் டெபாஸிட் காலி என்று வார்த்தை வருமே?  ஜெயித்த வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு வாங்காத பட்சத்தில் வேட்பாளர் கட்டிய பணம் திருப்பி தரப்படமாட்டது.

இவற்றுடன் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விதிமுறைகள் அடங்கிய தாள்கள், தேர்தல் முடிந்தவுடன் நாம் ஒப்படைக்க வேண்டிய கண்க்கு குறித்த விபரங்களுக்கான வழிகாட்டிகள் அடங்கிய காகித தாள்கள் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ஏறக்குறைய 30 பக்கங்கள் உள்ள ஒரு கையேட்டை பெற்றுக் கொண்டு வந்து விட் வேண்டும். 

தேர்தல் அதிகாரி குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சென்று நமக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சடங்கு நடைமுறையில் செலவழிக்கும் தொகை ரூபாய் பத்தாயிரம்.  மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது.   இதற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள 'திருமங்கலம் சூத்திரம்' போன்ற வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்ற பஞ்சாயத்து வருகின்றது. ஆனால் இப்போது நடக்கப் போகின்ற தேர்தலில் அதற்கும் வாய்ப்பு குறைவு. கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நம் தலைவர்கள் எத்தனை பார்த்திருப்பார்கள்? 

ஆனால் மொத்தத்திலும் நமக்கு ஒரே ஒரு பிரச்சனையுண்டு. 


தில்லாலங்கடி மூலம் நம்முடைய வேட்புமனு நிராகரிப்பு ஆகாமல் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, March 29, 2011

நீங்களும் (சட்டமன்ற) வேட்பாளர்தான்?

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுத்தாக்கல் குறித்த செய்திகளையும், அந்த வேட்பாளர்களின் புகைப்படங்களையும் பார்த்திருப்போம். குறிப்பிட்ட அந்த வேட்பாளர் சிலருக்கு நண்பராக இருக்கலாம். பலருக்கு பள்ளித் தோழராகவும் கூட இருக்கலாம். ஆனால் கட்சி சார்ந்த வேட்பாளர் என்றவுடன் அவர் வாழ்க்கையில் மாறும் காட்சிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இதைப் படிக்கும் நீங்க அதிக பட்சம் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் அலுவலகம் வரைக்கும் போய் நின்று ஏதோவொரு சான்றிதலுக்காக மட்டும் போய் வரிசையில் நின்று இருக்கக்கூடும்.

ஆனால் இது போன்ற அலுவலகங்கள் தான் நம் இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி தான் அந்தந்த தாலூகாவின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் அதிகாரம் என்பது ஆச்சரியத்தின் உச்சம். ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வது முதல் அதை இறுதியாக உறுதிப்படுத்துவது வரைக்கும் இங்கு தான் படிப்படியான ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்றது.  இந்த வருவாய் கோட்டாட்சியருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய படைபட்டாளமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இது தவிர ஏனைய மற்ற அரசாங்கத் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் தேர்தலின் போது நமது அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.

இவர்கள் விரும்பாதபோதும் கூட படாய்படுத்தி தேர்தல் வேளையில் பங்கெடுக்க வைத்து விடுகிறார்கள். மொத்தத்தில் மக்களுக்கு தேவைப்படும் சார்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு மிகப் பெரிய அரசு எந்திரம் தேர்தல் முடிவு அறிவிக்கும் வரையிலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் முடிவு வந்த போதிலும் கூட அத்தனை ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் ஆச்சரியப்படக்கூடியது.

இப்போது வலைபதிவுகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனதில் எதிர்காலத்தில் கட்சி சார்ந்து அல்லது சார்பில்லாமல் 2016 அன்று நடக்கப்போகும் (அல்லது அமையப்போகும் கூத்து அரசாங்கம் கவிழ்ந்து இடையில் உருவாகப்போகும்) தேர்தலில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கு பயன்படக்கூடும்.

உங்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆசையா? 

நீங்கள் வேட்பாளராக வேண்டுமென்றால் சில ஆவணங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா என்பதை இப்போதே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுநர் உரிமம், பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கியுள்ள சொத்து குறித்த சான்றிதழ், ஒரு வேளை உங்களுக்கு சொத்து இல்லாவிட்டாலும் கூட அதை குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்திருக்க வேண்டும்.  உங்களுக்கு நிரந்தராக தொழில் இருந்தால் அது குறித்த தணிக்கையாளர் சான்றிதழ் மற்றும் வருமான வரி கட்டிய விபரங்கள் போன்றவை அவஸ்யம் தேவை.

இது தவிர தேர்தலுக்காகவென்று ஒரு புதிய வங்கி கணக்கு.  இது சேமிப்பு கணக்காகக்கூட இருக்கலாம். வங்கியிடம் கேட்டு நம்முடைய கணக்குக்கான அட்டையை வாங்கி வைத்திருக்க வேண்டும்.  கடைசியாக 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில் (நோட்டரி பப்ளிக்) வழக்குரைஞரிடம் உறுதி மொழி சான்றிதழ்..

தேர்தலுக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பெற அந்தந்த தாலூகா அலுவலகத்தில் சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு விண்ணப்ப படிவத்தை இலவசமாக தருகிறார்கள். அதில் அனுப்புநர், பெறுநர் (தேர்தல் அதிகாரி) போன்ற சம்பிரதாய வாசகங்களுடன் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

உங்கள் பெயர், அப்பா பெயர், தற்போது வசிக்கும் முகவரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிக்கப்பட்ட தொகுதி என்றால் எந்த பிரிவில் வருகிறது? தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தின்படி எந்த பக்கத்தில் உங்கள் பெயர் வருகின்றது போன்றவற்றை இந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு நீங்கள் கையொப்பமிட்டு உள்ளே கொடுக்க வேண்டும். உங்களிடம் வாக்களர் அடையாள அட்டை இருந்து அது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வராதபட்சத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு அடுத்த வேளையை பார்க்க போய்விடலாம்.

ஏனப்பா என் பெயர் இதில் வரவில்லை என்று உங்களால் கேட்க முடியாது.  காரணம் இதற்காகத்தான் பல வாய்புக்கள் வழங்கப்படுகின்றது.  அது போன்ற சமயத்தில் அடித்தல், திருத்தல், மற்ற மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அலுவலரிடம் தெரிவித்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க வேண்டும்.

முதலில் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வாங்க உள்ளே நுழையும் போது மூன்று அலுவலர்கள் உங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் உங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்த்து அடுத்தவரிடம் கொடுக்கிறார். அவர் நாம் கொடுத்துள்ள விபரங்களை நம்மிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு நம்மிடம் இருந்து பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு ரோஸ் கலர் விண்ணப்ப படிவத்தை தருகிறார். 

இது தான் வேட்பாளருக்கான விண்ணப்ப படிவம். 

மூன்றாவது நபர் நாம் கொடுத்த பத்து ரூபாய்க்கு உரிய ரசீதும், அவர் வைத்துள்ள குறிப்பேட்டில் நம்மைப் பற்றி விபரங்களையும் பெற்று எழுதிக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார்கள்.

முதல் கட்டம் முடிந்தது.

இந்த ரோஸ் கலர் விண்ணப்ப படிவமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் படிப்படியான கெடுபிடிகளால் சமீபகாலமாகத்தான் உருவாகியிருக்கும் போலிருக்கு.  ஏழு பக்கங்கள் இருக்கிறது.  முதல் வரியே 

தேர்தல் நடத்துவது குறித்த 1961 ஆம் ஆண்டு விதிகளின் 4 வது விதியைக் காண்க.  ( இதுக்கு அப்புறம் எவரும் இதில் கையை வைக்கலையோ?)

இதில் ஒவ்வொரு பகுதியாக பிரித்துள்ளார்கள்.

முதல் பகுதியில் நம்மைப்பற்றி விபரங்கள், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிவு, பாகம் போன்ற விசயங்கள்.

இதில் தொடர்ச்சியாக மற்றொரு அதி முக்கியமான விசயம் ஒன்று உண்டு.  நம்மை பத்து பேர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.  ஒவ்வொருவரின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பாகம், பிரிவு அத்துடன் அவரின் கையொப்பம். 


இரண்டாவது பகுதியில் வேட்பாளர் வயது, நாம் விரும்பும் (மூன்று) சின்னங்களை கேட்டு அதில் குறிப்பிட வேண்டும்)

இந்த பிரிவின் கடைசியாக "தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் இரண்டுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்து வேட்பாளராக நியமனம் செய்யப்படவில்லை என்று அவ்வாறு நியமனம் செய்யப்பட மாட்டேன என்றும் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்றும் முடிவு பெறுகின்றது.

அடுத்த பிரிவில் அற்புதமான பஞ்சாயத்து சமாச்சாரங்கள் நிரம்பி வழிகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வழக்கு விபரங்கள், அதன் குற்றவியல் குறித்த விபரங்கள் என்று இரண்டு பக்கத்திற்கு விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு பக்கங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குரிய பக்கங்களாகும்..  
இந்த வேட்புமனுவை பரிசீலித்து கீழ்கண்டவாறு முடிவு செய்கின்றேன் என்று அவர் இறுதியாக கையொப்பமிட வேண்டும்.

ஏறக்குறைய ஏழு பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்தின் முன்பின் நிரப்பப்படும் இந்த விண்ணப்பபடிவத்தின் மூலமாகத்தான் நம்மை ஆட்சியப் போகும் ஏழரை பகவான்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இத்துடன் நமக்கு வழக்குரைஞர் அளிக்கும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திர சான்றிதழ் அதி முக்கியமானது. 

இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது. 

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.

பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை குறித்த விபரங்ளுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டனை பெற்றிருந்தால், மனு நீதி மன்றத்தில் இருக்கும்பட்சத்தில், வாய்தாவாக இழுத்துக் கொண்டே இருந்தால்...  

விலாவாரியாக ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே செல்கிறது.  (கிட்னி மோசடியில் ஈடுபட்டு வழக்கு மன்றத்தில் இருப்பவரை தங்கபால் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர் குறித்து இப்போது உங்கள் நினைவுக்கு வந்து இருந்தால் நான் பொறுப்பல்ல) 

இத்துடன் நாம் வாங்கியுள்ள சொத்துக்களையும் குறிப்பிட வேண்டும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, நாம் வைத்திருக்கும் வாகனங்கள், அதன் மதிப்பு, துணைவியார் பணியில் இருந்தால் அவரின் வருமானம் குறித்த விபரங்கள், வீட்டில் உள்ள நகையின் இன்றைய மதிப்பு.........................

நாம் தான் கலைஞர்,ஜெயலலிதா போன்றோர்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்களின் சொத்து மதிப்பை நாம் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம்(?)

நாம் குறிப்பிட்டுள்ள சொத்தின் அளவைப் பொறுத்து, வருமான வரி சான்றிதழ்கள், பான்கார்டு விபரங்கள், தணிக்கையாளர் சான்றிதழ் போன்றவற்றை தனியாக குறிப்பிட வேண்டும்.  இத்துடன் நாம் தேர்தல் செலவுக்கென்று புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அது குறித்த விபரங்கள்.

கையொப்பம் இட வேண்டிய அத்தனை இடங்களிலும் கவனமாக பார்த்து கையொப்பமிட்டு விட்டால் முதல் கட்ட தகுதி முடிவுக்கு வந்து விடுகின்றது.


விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய், மற்றபடி வழக்குரைஞருக்கு, ஒவ்வொன்றையும் நகல் எடுக்க, அலைச்சலுக்கு தேவைப்படும் பெட்ரோல், வங்கிக் கணக்கு தொடங்க ஆயிரம் ரூபாய் என்று இந்த முதல் பகுதியில் நமக்குத் தேவைப்படும் செலவீனம் மிக அதிகபட்சமாக 1500 ரூபாய்.

அடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான நடை முறைகள்........ 

Sunday, March 27, 2011

63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு

காங்கிரஸ் கட்சி. 

இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். 

வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி.  இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் நோக்கர்களைத் தவிர இப்போது போல அவ்வளவு சீக்கீரம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இந்திரா ப்ரியதர்ஷிணி சகலவிதங்களிலும் வியாபித்திருந்தார். 

குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்களாதேஷ் முதல் ஈழம் வரைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்த சாதனைப் பெண்மணி.  

நான் வாழ்ந்த பகுதியில் எந்த தேர்தல் வந்தாலும் மாநிலத்திற்கு இரட்டை இலை.  மத்தியில் கைச் சின்னம்.  இதுதான் தராக மந்திரமாகவே இருந்தது.  காங்கிரஸை தூற்றுவதும் பழிப்பதும் ஏறக்குறைய ஒரு பாவச் செயல் போலவே கருதப்பட்டது. 

ஆனால் காலங்கள் உருண்டோடி காவுகள் பல வாங்கி வந்து நிற்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை?  அந்தோ பரிதாபம்? 

ஈழம் சார்ந்த கொள்கைள் முதல் இன்றைய வெட்கக்கேடான வெளியுறவுக் கொள்கைகள் வரைக்கும் அத்தனையும் சிக்கல் மேல் சிக்கலாகி சின்னாபின்னமாக்கி சிதறுண்டு போய்க்கிடக்கிறது. டம்மி பிரதமரை வைத்துக் கொண்டு கும்மியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மத்திய காங்கிரஸ் கட்சியை சீமான் எதிர்ப்பது ஈழத்தில் நடந்த அக்கிரமத்திற்காக மட்டுமே.  ஆனால் என்னுடைய பார்வையில் இந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சில நிகழ்வுகளையும் பார்த்து விடலாம். 

சாய்நாத் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய இந்த விபரங்கள் இன்றைய சாதனை காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்?

2005-06 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் இந்த காங்கிரஸ் ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கும் மத்திய மாநில அரசுகள் உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. 

மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் தொடக்கத்தில் மின்சாரத்தடை இரண்டு மணி நேரமாக இருந்தது.  இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரமாக மாறியுள்ளது. உள்ளே இருக்கும் நிறுவனங்களுக்கே மின்சாரம் வழங்க முடியா சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்.அத்துடன் குறிப்பிட்ட வருடங்களுக்கு வரிவிலக்கு. 

காரணம் என்ன?  

எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது, இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் கொடுத்த மற்றொரு அன்புப் பரிசு கலால் வரி பத்து சதவிகிதம். 

ஜட்டி, பனியனை தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு பத்து ரூபாயை வரியாக கட்டி ரசீது வாங்கி விட்டு தான் வெளியே கொண்டு போக வேண்டும். இது போன்று ஒவ்வொரு துறைக்கும் இவர்களின் அன்புப் பரிசு உண்டு.

கற்பனை செய்து பாருங்க. நம்மை ஆளும் அரசாங்கம் நம் மக்களை வாழவைக்கவா?  இல்லை அழித்து முடித்து அடுத்த நாட்டு கையில் ஓப்படைக்கவா?

இந்த 2011 தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 63 நாயன்மார்களை ஒழித்துக் கட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கம் உருவாக்கிய காணொளி தமிழ்நாடு முழுக்க சென்றடையுமா? என்று தெரியவில்லை. நல்ல வேளை மொத்த பிரச்சனைகளுடன் ஈழப்பிரச்சனைகளையும் சேர்த்து இடையிடையே சீமானின் பேச்சும் கலந்துள்ள இந்த 20 நிமிட காணொளியை பார்க்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக முதன் முறையாக ஓட்டுப் போடுகின்றவர்களை பாதிப்படைய வைத்தாலே முழு வெற்றி தான். 

நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட சதவிகிதம் யோசித்தாலே போதுமானது.

ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். 

காரணம் காந்திஜியின் தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட வழித்தோன்றலான தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது. தங்கபாலூவின் கைபேசியை தூக்கிக் கொண்டு வரும் தாமோதரனுக்கும், கார் கதவை திறந்து விடும் சிவலிங்கம் போன்ற தியாகச் செம்மல்களுக்கு சீட்டு கிடைத்துள்ள காரணத்தால் இப்போது தங்கபாலு வசிக்கும் வீட்டு சந்துக்கே கூட காவல் போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 

ஆனால் இவர்களை விட முக்கியமான ஒரு பிரமுகர் உண்டு. 

கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையத்.  இவர் செய்து கொண்டிருந்த தொழில் தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிகழ்ச்சியை வழங்குவது.  

ஆகா புல்லரிக்குது. 

தங்கபால் காங்கிரஸ்க்கு பால் ஊற்றியதற்கு நன்றிங்கோ.

இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட தெகா மற்றும் ராஜாகீர்த்திக்கு நன்றி.



Saturday, March 26, 2011

அரசியல் அதிகாரம் -- பயத்தை உருவாக்கு

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.  

இப்போதுள்ள அரசியல் சூழலில் இவரை எத்தனை பேர்களுக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை.  'மக்கள் சக்தி இயக்கம்' என்றொரு அமைப்பை உருவாக்கி இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு அமெரிக்காவில் தான் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை வேலைகளையும் விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர். நதி நீர் இணைப்பு குறித்து ஆய்வரங்கம் கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தியதோடு அப்போது ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமனிடம் அறிக்கையை கொண்டு போய்ச் சேர்த்தவர்.  கல்லூரி சமயத்தில் இவருடன் செயல்பட்ட அனுபவத்தில் பலமுறை பேசியுள்ளேன். இவர் நடத்திய பல கூட்டங்களில் கலந்துள்ளேன். அப்போது அவர் கூறிய வாசகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.  இவர் கொண்டு போய்ச் சேர்த்த அந்த அறிக்கையை வாங்கிய ஆர்.வெங்கட்ராமன் சொன்ன வாசகம் இது.


'ஏன் உங்கள் நல்ல வாழ்க்கையை கெடுத்துவிட்டு ஏன் இங்கே வந்தீங்க?' 

நாம் இந்தியர்கள்.  இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பது சொல்வதற்கு எத்தனை எளிதாக இருக்கிறதோ ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் தான் எத்தனை வேறுபாடு.  கர்நாடகாவில் இருந்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜாபர் ஷெரிப், முன்னாள் பிரதமர் தேவகௌடா முதல் இன்றைய மம்தா பானர்ஜி வரைக்கும் ஏன் தங்களுடைய மாநில நலனில் மட்டும் அக்கறை கொண்டு அத்தனை திட்டங்களையும் தங்கள் பக்கமே திருப்பிக் கொள்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களுக்கு மொழிப் பிரச்சனை என்பதை விட டெல்லிக்குச் சென்றதும் ந்யூரான்களில் என்ன மாறுதல்கள் உருவாகுமோ தெரியவில்லை. ஒவ்வொருவரும் நல்ல இந்தியக்குடிமகனாக மாறிவிடுவது அதிசியமான உண்மை. முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சொன்னது முற்றிலும் உண்மை.

'குஜராத்தில் இருந்து வந்து இறங்கும் அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கான நிதி ஆதாரத்தை பெற்று விட முனைப்பு காட்டுவதைப் போல தமிழ்நாட்டில் இருந்து எவரும் எதையும் வந்து கேட்பதில்லை'.  

காரணம் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் தனிப்பட்ட குணாதிசியத்தை நாம் அணைவரும் அறிந்ததே.  இது ஜெயலலிதா மட்டும் உருவாக்கிய பாதை அல்ல.  இங்குள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.  மாநில நலன் என்பதை விட தம் மக்கள் நலன் அதைவிட மிக முக்கியம்.  அதனை விட தங்களுக்கான லாபம் மொத்தத்தில் முக்கியம். இல்லாவிட்டால் 63 சீட்டை கொடுத்து விட்டு நாயன்மார்கள் கதையை கலைஞர் பேசிக்கொண்டு இருக்கமாட்டார்.

இப்படித்தான் கடந்து போய் கடந்து போய் இன்று வல்லரசு என்ற பெயரைக் கேட்டாலே வாந்தி பேதி போவது போல அலர்ஜியாக உள்ளது.  மற்ற மாநிலங்களிலும் அடிதடி, ஊழல், கவிழ்ப்பு என்று எத்தனையோ சமாச்சாரங்கள் இருந்தாலும் டெல்லிக்கு படையெடுக்கும் சமயத்தில் மட்டும் நான் மலையாளி, நான் கர்நாடகம், நான் பெங்காலி என்று வரிசை கட்டி நின்று விடுகிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அந்த அற்புத காட்சியை காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ?

காரணம் தகுதியானவர்களை நாம் தேர்ந்தெடுக்க விரும்பாததே முக்கிய காரணம்.  படிக்காதவர்களிடத்தில் கூட ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்த சின்னங்கள் தான் அவரவர் சிந்தனைகளில் மேலோங்கியிருக்கிறது. தனி நபர்கள் அவர்கள் செயல்பாடுகள் குறித்து எந்த பொது நல அக்கறையும் வந்து விடுவதில்லை. என் வாக்கு ஜெயிப்பவர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக இன்று ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனின் கனவுகளும் எட்ட முடியாத உயரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.

திருப்பூர் புத்தக கணகாட்சிக்கு வந்திருந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ஞாநி அவர்களிடம் குறுகிய நேரம் இது குறித்து தான் சில கேள்விகளை கேட்டேன். அவர் 1975 முதல் பத்திரிக்கை துறையில் இருப்பதாக சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.  எத்தனை தலைவர்களை சந்தித்து இருப்பார்? எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கக்கூடும்? மறுநாள் இறுதியாக விடைபெறும் போது சொன்ன வாசகம் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் மனதிற்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

'நான் எழுதும் கட்டுரைகள் கூட படித்துவிட்டு நகர்ந்து விடக்கூடிய வகையில் உள்ளதாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்' என்றார்.

நாம் பள்ளி கல்லூரிப் பாடங்களைத் தவிர்த்து, மற்ற புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய கால கட்டம் முதல் இன்று வரைக்கும் வாசிக்கும் பல எழுத்துக்களை எழுத்தாளர்களை நினைவுக்கு கொண்டு வருவோம். எத்தனை ஆயிரம் பேர்கள் எத்தனை விதமான கருத்துக்களை இந்த சமூக நலனுக்காக விதைத்துள்ளார்கள்? ஏன் இத்தனை பேர்களின் சிந்தனைகளும் இந்த சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.  

ஒழுங்காக படித்தவர்கள் உருப்படியான வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவன் வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் அப்பொழுதே முழுமையாக தீர்மானிக்கப்பட்டது போல் ஆகிவிடுகின்றது. அறைகுறையாக படித்தவர்கள், முழுமையாக தங்கள் திறமைகளை வெளிக் கொணராதவர்கள் அங்கங்கே கிடைத்ததை தொத்திக் கொண்டுமாய் வாழ்க்கை ஓட்டத்தில் நகர்ந்து கொண்டு தனக்கான வாழ்க்கை எல்லையை இயல்பாக வகுத்துக் கொள்கிறார்கள்.  தக்காளி விலை ஏறி விட்டாதா?  ரசம் வேண்டாம்.  பெட்ரோல் விலை ஏறப் போகின்றதா?  இந்த வாரம் பத்து லிட்டர் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வோம்.  போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 

மிச்சமும் சொச்சமும் ஏக்கத்தையும் வெறுப்பையும் சுமந்துக் கொண்டு அமைதியற்ற வாழ்க்கையை பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பிரிவுக்குள்ளும் அடங்காமல் எது குறித்தும் அஞ்சாமல் இந்த அரசியலை கர்மசிரத்தையாக கற்று தேறி வருபவர்கள் தான் நம்மை ஆட்சி புரியும் மக்கள் சேகவர்கள்.  படிப்பு, ஒழுக்கம், முதல் வேறெந்த தகுதிகளும் தேவையில்லை.  எந்த நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் களமிறங்க தைரியம் இருந்தால் போதுமானது.  நிச்சயம் நகரம் ஒன்றியமாக மாறி இறுதியில் அமைச்சராக வந்துவிட வாய்ப்புண்டு.  அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கிறது.  

ஆனால் படித்து முடித்து விட்டு வெளியே எவரும் தான் வாழும் சமூகத்திற்குத் தேவையான எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதை விட அதற்கு தயாராகவும் இல்லை என்பதே நிதர்சனம்.  

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சியைப் போலவே இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் மக்கள் சக்தி கட்சி சார்பாக விஜய் ஆனந்த போட்டியிடுகிறார்.  இந்த கட்சியின் சார்பாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இளங்கோ பாலசுப்ரமணியம் (கிணத்துக்கடவு) பி. தண்டபாணி (சிங்காநல்லூர்) கே. துரைராஜ் (கோவை வடக்கு) வி. விஸ்வநாதன் (கவுண்டம்பாளையம்) கண்ணம்மாள் ஜெகதீசன் (தொண்டாமுத்தூர்) தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

விஜய் ஆனந்த் ' 5வது தூண் ' என்ற ' ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ' தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் மென்பொருள் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு வரை நடத்திக் கொண்டு வந்தவர்.  இவர் வாஷிங்டன் தமிழ் சங்க தலைவராகவும் (2007) செயல்பட்டுக் கொண்டிருந்தவர். ஐ.நா. சபையின் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கு பேச்சாளராகவும் உள்ளவர். இவருடைய நோக்கம் 2016 ஆம் ஆண்டு அமையப் போகும் அரசு படித்தவர்களால் உருவாக்கப்பட வேண்டிய அரசாக இருக்க வேண்டும் என்று அதற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.

கோவைக்குள் இருப்பவர்களுக்கோ, புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டு கட்சி சார்பாக எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை நண்பர்களுக்கு இவரைப் பற்றி தெரியக்கூடும்?

படித்தவர்கள், பண்பாளர்கள் அத்தனை பேர்களும் வெளியே இருந்து பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு விளையாட்டு இன்றைய அரசியல்.  நமக்கான களத்தை தேர்ந்தெடுக்க விரும்புவதில்லை என்பது எத்தனை உண்மையோ அந்த களம் உருவாவதற்குண்டான எந்த வாய்ப்புகளையும் நாம் தான் கெடுக்கவும் விரும்புகின்றோம்.  கடந்த பத்து நாளில் இந்த அரசியல் உள் அரங்கு விளையாட்டுகளை நேரிடையாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் அத்தனை செயல்பாடுகளையும் அங்குலம் அங்குலமாக நேரிடையாக களமிறங்கி ரசித்த எனக்கு இந்த அரசியல் பாலபாடங்களில் உள்ள ஆரம்ப அரிச்சுவடியோ பயம் என்ற சொல்லில் தான் உருவாக்கப் படுகின்றதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  

ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்திற்கும் உண்டான இருப்பு சார்ந்த விசயங்களுக்காக எத்தனையோ கொள்கைகளை விட்டுக் கொடுத்து வெளியே நிற்கவேண்டியாய் இருக்கிறது. முதலீட்டுக்ளை முடக்கியவர்களுக்கு தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ள வேண்டிய அவசர அவஸ்யங்கள்.  படித்தவர்களுக்கு தங்களுக்குண்டான எந்த தேவைகளும் இந்த அரசியல் தந்து விடப் போவதில்லை என்ற கருத்து ஆழப் பதிந்து போய்விட்டது.  அன்றாடங்காய்ச்சிகளுக்கு இது குறித்து எப்போதும் என்றும் அக்கறையிருப்பதில்லை.  மீதி யார்?  


விழிப்புணர்ச்சி என்பது நமக்கு விரும்பத்தாக ஒன்றாக இருப்பதால் ஊழல் என்பது இன்று இந்திய ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே மாறியுள்ளது.  எத்தனை கேவலங்களை ஒருவர் செய்து இருக்கிறாரோ அவர் தான் இருப்பதில் சிறப்பு என்ற தகுதியும் எளிதில் வந்து விடுகின்றது.  வேறென்ன வேண்டும்.  கேட்பவர்கள் தயாராக இருக்க சொல்பவர்களுக்கு புராண கதைகளுக்காக பஞ்சம்..  

நமக்கு வசதியாக எத்தனையோ வார்த்தைகளும் வாசகங்களும் நமக்குள் வைத்திருப்போம். 

நம்மால் ஒன்றும் செய்யமுடியாது?  வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்? இயல்பை தாண்டிப் போனால் வரும் விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது?  நம் செயல்பாடுகளால் நம்முடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அமைதியிழந்து விடும்.  

மொத்தத்தில் பயம்.

எங்கு திரும்பினாலும் பயத்தை தவிர வேறொன்றுமில்லை. இந்த பயமே இன்றைய அரசியலில் பிரதான பங்கு வகிக்கின்றது.  இந்த பயத்தை வைத்துக் கொண்டு தான் அத்தனை பேர்களும் மேலே வந்து விடுகிறார்கள். அவர்களால் பயத்தை உருவாக்க முடியும். வீட்டுக்குள் வந்து மிரட்ட முடியும்.  வீட்டுக்குள் வெளியே நின்று கத்த முடியும். நடுத்தரவர்க்கத்தினர்களுக்குண்டான மிகப் பெரிய பலவீனமே இதில் இருந்து தான் தொடங்குகின்றது. தனக்குத் தேவையான சகிப்புத்தன்மையோடு வாழும் வாழ்க்கையை சமாதானப்படுத்திக் கொண்டு வாழவும் தொடங்கிவிடுகிறார்கள்.

அரசியல் என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் வர வேண்டிய இடத்தில் இருந்து பதவியை வைத்து சம்பாரிக்க விரும்புவர்களின் இடமாக மாறியுள்ளது. எந்த காலத்திலும் மாளிகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஓட்டுப் போட வருவதில்லை. படித்தவர்களில் கூட குறைவான சதவிகிதம் தான் வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். 

மீதி இருப்பவர்கள் யார்?  

அன்றாடங்காய்ச்சிகளும்,அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருப்பவர்களும் தானே?  

எதைத் தருவாய்? எப்போது தருவாய்? என்று அவர்கள் கேட்பதில் என்ன தவறு? ஓட்டை வாங்க ஆட்கள் தயாராக இருக்கும் போது வாங்கத்தானே செய்வார்கள்.  

ஒவ்வொரு தேர்தலில் வாக்களிக்காதவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற சட்டம் வரும்பட்சத்தில் இந்த மாளிகைவாசிகள் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.  நாங்கள் ஓட்டளித்தால் மட்டும் திருட வந்தவர்கள் திருப்பியா தரப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தை போக்க என்ன செய்யலாம்? சார்பாளர்களாக தேர்ந்தெடுத்தவர்கள் செயல்படாத பட்சத்தில் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படியிருக்கும்?


உங்கள் ஓட்டு என்பது உங்கள் உரிமை.  
நாம் உணர்ந்து போடப்போகும் நபர்கள் மூலம் தான் நம்மை நாமே பெருமை படுத்திக் கொள்ளமுடியும்.

Monday, March 21, 2011

மாற்றத்திற்கு ஆசைப்படு

அனபான வாக்காள பெருமக்களே

"நான் என் குடும்ப வாழ்க்கையை ஒழுக்கத்துடன வாழ்ந்து கொண்டிருப்பவன்.  கட்டிய மனைவிக்கும், பெற்ற குழந்தைகளுக்கும் நல்ல கணவனாக, தகப்பனாக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருப்பவன். நியாயமான முறையில் தொழில் செய்து அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரிகளை முறைப்படி செலுத்தி என் வாழ்க்கையை நேர்மையான முறையில் நடத்திக் கொண்டிருப்பவன். 

என் குடும்பத்திற்குத் தேவையான பொருளாதாரம் தன்னிறைவு பெற்றுள்ளது.  எங்கள் தேவைகளும் ஆசைகளும் மிகக் குறைவு. எங்கள் சந்தில் வாழும் மக்களுக்கு இத்தனை நாளும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தேன்.  பழகிய மக்கள் வற்புறுத்தலின் காரணமாக இப்போது இந்த தொகுதிக்கு எந்த கட்சியும் சாராத வேட்பாளராக உங்கள் வாக்குகளை கேட்டு வந்துள்ளேன்.  உங்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் எதுவும் தரும் எண்ணமில்லை.  உங்களுக்கு இலவசங்கள் கொடுத்து உங்களை சோம்பேறியாக்கும் எண்ணம் அறவேயில்லை.  கவர்ச்சி அலைக்காக மக்களை திரட்ட வேண்டும் என்பதற்காக தகுதியில்லாத எந்த நபரையும் இப்போது என்னுடன் அழைத்து வரவில்லை. முழுக்க முழுக்க உங்கள் சிந்தனையில் உருவாக வேண்டிய மாற்றங்களையும், அவ்வாறு மாற்றங்கள் உருவானால் நமக்கு கிடைக்கும் லாபங்களையும் விவரிப்பதே என் எண்ணம்.  உங்கள் சந்தேகம் எதுவாகயிருந்தால் என்னுடன் தயக்கம் இல்லாமல் உரையாடலாம்.  என் தனிப்பட்ட வாழ்க்கை முதல் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நான் செய்ய நினைத்திருக்கும் அத்தனை செயல்பாடுகளையும் குறித்து நீங்கள் கேள்வி கேட்கலாம்"

குழப்பாக இருக்கிறதா?  இது போன்று ஒரு வேட்பாளர் பேசிக் கொண்டு உங்கள் முன்னால் வந்தால் நம் மனதில் என்ன தோன்றும்.

பிழைக்கத் தெரியாதவன்? உலகத்தை புரிந்து கொள்ளாதவன்?  உச்சி வெயில் சூட்டில் மூளை குழம்பி விட்டதோ? 


இது போன்ற அவசர கேள்விகள் இன்றைய சூழ்நிலையில் நம் மனதில் உருவாவது இயல்பே. மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே..

இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட.  இத்தனை ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், மதங்கள், ஜாதிப்பிரிவுகள், குழப்பங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம், ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்த புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும். 

பரம ஏழை, ஏழை, அன்றாடம் உழைத்தால் தான் வாழ வேண்டிய வர்க்கம், நடுத்தரவர்க்கம், சற்று வருமானம் உள்ள நடுத்தரவர்க்கம், பணக்காரன், லாப நட்டத்தால் பாதிப்படையாத பணக்காரர்கள், ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் பணம் படைத்தவர்கள் என்று ஏராளமான சமூக முரண்பாடுகள் உள்ள இந்தியாவில் நாட்டின் நிலம் முதல் நடக்கும் ஊழல் வரைக்கும் எல்லாமே பெரிது. ஆயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் இறந்தால் கூட ஜனத்தொகையின் அடிப்படையில் நமக்கு ஒரு செய்தியாகத் தான் இருந்து தொலைக்கின்றது. 

இப்போது நடக்கப்போகும் 2011 தமிழ்நாடு தேர்தல் தற்கால சமூக வாழ்க்கையின் அடிப்படை மனோபாவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்து ஐந்து ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எவ்வாறு ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பதை கூறும் தேர்தல் அறிக்கை இப்போது சற்று மாறுதலாகி உங்களுக்கு நாங்கள் என்னன் இலவசமாக தரப்போகின்றோம்? என்பதை கூறக்கூடிய அறிக்கையாக மாறியுள்ளது.

இன்று நாம் காணும் இலவசங்கள் மலிந்த தேர்தல் அறிக்கைகள் எரிச்சலை உருவாக்குவதை விட பொது மக்களுக்கு அடிக்கடி தேர்தல் வரக்கூடாதா? என்ற ஏக்கத்தை தான் அதிகபடுத்துகின்றது.  காரண்ம நாம் எதிர்பார்ப்பதும் அதுவே தான்.

தற்போது எந்த இடத்தில் எவரைச் சந்தித்தாலும் எந்த கட்சியின் சார்பாக எவர் நிற்கின்றார்கள் என்று கேட்டு முடித்ததும் அவரின் செல்வாக்கு, பணபலம், ஜாதி ரீதியான பலம் போன்றவற்றை அலசத் தொடங்கி விடுகிறார்கள். பேச்சின் முடிவில் எந்தந்த கட்சிகள் தங்கள் பகுதிக்கு வரும் போது என்னென்ன தருவார்கள் என்பதைப் பற்றி ஆருடம் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை மனதில் கொண்டு தங்களுக்குள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள். 

முடிந்தவரையிலும் அத்தனை கட்சியிலும் என்னன்ன வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டு என்பதை மனதிற்குள் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு தயாராக இருக்கிறார்கள்.  

ஏன் இத்தனை மாற்றங்கள்?

ஏற்கனவே தேர்ந்தெடுத்தவர் தொகுதிக்காக என்ன செய்தார்?  தாலியை அடகு வைத்து கெஞ்சிக் கொண்டு வந்து நின்றாரே? இப்போது இவ்வளவு பெரிய சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாரே? எப்படி சம்பாரித்தார்?  இவர் எப்படி சட்டத்தில் மாட்டாமல் இருக்கிறார்? தரங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவன் இப்படி வெட்கம் இல்லாமல் வந்து நிற்கின்றானே?  இவனைச் சுற்றிலும் எப்போதும் ஒரு வெட்டிக்கும்பல் சுற்றிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து முதல் காலி செய்வது வரைக்கும் செய்து கொண்டு இருந்தார்களே?  ஐயோ, இவர்களை தேர்ந்தெடுந்தால் அடுத்த ஐந்தாண்டும் நமக்கு அதோகதிதான்.

யாராவது இப்படி யோசித்துள்ளார்களா? இல்லை எதிரே வந்து நிற்கும் போது அந்த வேட்பாளரிடம் கேட்கும் தைரியம் தான் வருமா?  வராது? ஏன்?

காரணம் பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற இயல்பான குணாதிசியம் மெதுமெதுவாக பரவிக் கொண்டிருக்கிறது.  பணத்தை மட்டுமே மதிபபீடு செய்யும் சமூக கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பதால் பணம் வைத்திருப்பவன் பரம யோக்கியனாகவும், இல்லாதவன் எதற்கும் லாயக்கு இல்லாதவனாகவும் ஆகிவிட்டான்
.

ஒரு நடுத்தர வர்க்கம் பார்வையில் இந்தியாவில் வாழ எந்த பிரச்சனையும் இல்லை. எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம்.  இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் சுதந்திரமாக போகலாம்.  நம் கையில் காசு இருந்தால் எந்த தொழில் வேண்டுமானலும் தொடங்கலாம் உருவாக்கலாம் வளர்க்கலாம்.  மொத்தத்தில் நாம் விரும்பும்படி வாழலாம்.  விரைவாக முன்னேற எதை வேண்டுமானாலும் வளைக்கலாம். கணக்கற்ற பணம் இருந்தால் சட்டத்தின் சந்து பொந்துக்களை உடைக்கலாம். ஒட்டலாம்.

பார்க்க தொலைக்காட்சி உண்டு.  அழுது தீர்க்க நெடுந்தொடர் உண்டு. யோசிக்காமல் இருக்க நகைச்சுவை காட்சி உண்டு.  இதுவும் வேண்டாம் என்றால் திகட்ட திகட்ட திரைப்படக் காட்சிகளை மட்டுமே கண்டு களிக்க 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் சேனலும் உண்டு.  அவன் சரியில்லை என்று இவனும், இவன் கொள்ளைக்காரன் என்று அவனுமாய் லாவணி பாடும் செய்தி தொகுப்புரைகளும் உண்டு.  பல சமயத்தில் இது குறித்தே பேசப்படும் பரப்புரைகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம் என்றால் நிம்மதியான டாஸ்மார்க் உண்டு.

ஆறுமாதங்களில் இருபது ரூபாய் கூடக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலை எதுவும் நினைவுக்கு வராது.  அச்சமூட்டும் விலைவாசி உயர்வு அத்தனையும் மறந்து போயாச்சு.  அடித்த கொள்ளையின் எண்களை கூட எண்ணத் தெரியாமல் திகைத்த திகைப்பு கூட மாறிவிட்டது. 

எல்லாவற்றையும் விட சொக்கலால் பீடிக்கு லாட்டரி அடித்தவன் சொகுசாய் காரில் வலம் வருவதைப் பற்றி யோசிக்க கூட நினைப்பு வரவில்லை.  காரணம் இலவசத்தை எதிர்பார்த்து எதார்த்த வாழ்க்கையை விட்டு விட்டு எவன் வருவான்? எதைத் தருவான் என்று யோசிப்பு மட்டுமே இந்த தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு வாக்காளர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதால். வீடு தேடி வந்து தருபவனை கெடுப்பவர்களை அடிக்க ஓங்கும் கைகள் என்றுமே ஒன்று சேராது.  காரணம் அவ்வாறு சேரக்கூடாது என்பதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு ஆற்றில் ஓடும் நீரை அம்மா நீ கொஞ்சம் குடி.  அய்யா நீ கொஞ்சம் குடி என்று மாற்றி மாற்றி பழக்கப்படுத்தியாகி விட்டது. 

 நமக்கு வேறென்ன வேண்டும் ?  

எது தான் இங்கு இல்லை?  எல்லாமே உண்டு.  மொத்தத்தில் எந்த சூழ்நிலையிலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசிக்காமல் இருக்க, தன்னிலை மறந்து வாழ கற்றுக் கொண்டால் இந்த நாடு தகுதியான நாடு தான். 

யோசித்தால் தான் மண்டையிடி.  ஆழ் மனதில் உருவாகியுள்ள அழுக்குகளை சுரண்டிப் பார்க்க விருப்பமில்லாமல் வாழும் ஒவ்வொரு தனிமனிதர்களைப் போலவே இது தான் சரி என்று வழிநடத்தும் தலைவர்களும் நமக்கு அமைந்திருப்பதால் நம் ஜனநாயகத்திற்கு என்றுமே அழிவில்லை. 


காரணம் நம் ஆசைகள் அதிகம்.  அதற்கான உழைப்புகள் என்பது மிகக் குறைவு.

நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது.  தகுதியானவர்கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டும் என்று?

Saturday, March 19, 2011

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க,) - ஏழுக்குள் ஏழரை

கலைஞர் எப்போதும் மற்றவர்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுப்பவர்.  இந்த முறை உளவுத்துறையில் உள்ள எந்த புண்ணிய ஆத்மா தகவல் கொடுத்தார்களோ கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு சீட்டுகளை தராளமாக வழங்கியுள்ளார்.  

தற்போது நடக்கப் போகும் 2011 தேர்தலில் பா.ம.க. வுக்கு கிடைத்த அதிர்ஷ்ட சீட்டுகளைப் போலவே இந்த கொ.மு.கவுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்துள்ளது. காரணம் காங்கிரஸ்க்கு பாடம் கற்பிக்கலாம் என்று எடுத்த முடிவின் இறுதியில் கலைஞரே கவிழ்ந்து போனது தான் மிச்சம்.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் கொங்கு மண்டல பகுதிகள் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.  தமிழ நாட்டு அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதில் இந்த மாவட்ட மக்களின் பங்களிப்பு அதிகம்.  கணக்கீட்டின்படி தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் இந்த பகுதிகளில் இருந்து மட்டும் 42 சதவிகித வருமானம் அரசாங்கத்திற்கு செல்கின்றது என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றது.

தென்னை, ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழில், கனரக வாகனங்கள், பஞ்சு சார்ந்த துணைத் தொழில்கள் மற்றும் நூற்பாலைகள், கோழிப்பண்ணைகள் என்று பல தொழில்களிலும் சக்ரவர்த்தியாக இருக்கும் இந்த கொங்கு இன மக்களுக்கு இந்த அரசியல் அமைப்பு தொடங்க வேண்டிய அவஸ்யம் என்ன? 


தொடக்கத்தில் கோவை செழியன் கொங்கு இன மக்களுக்கு காவலராக இருந்தார். அவருக்குப் பிறகு பெரிய அளவில் எவரும் உருவாகவில்லை.  ஒவ்வொருவருக்கும் இருக்கும் தொழில் அடிப்படையில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று தான் இதுவரையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வெறுமனே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்கிற ரீதியில் பலமற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' முக்கிய இடத்தை பெற்றதோடு ஏராளமான பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. 

இவர்கள் சொல்லும் கோரிக்கை வித்யாசமானது. 

"அதிகாரத்திற்கு வருபவர்கள் கொங்கு மணடலத்தை புறக்கணிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் நிலையில் இருக்கும் கவுண்டர் இன மககளை மிகவும் பிற்பட்ட இனத்தில் கொண்டு வந்து அரசாங்கம் சேர்க்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் பி.சி.ஆர் என்ற தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி கவுண்டர் இன மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் உருவாக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் 'கொங்கு முன்னேற்றப் பேரவை'யை 'கொங்கு நாடு முன்னேற்றக் கழக'மாக மாற்றியுள்ளோம் " என்கிறார்கள்.

தொடக்கத்தில் தொடங்கிய 'கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை'யினர் அரசியல் எழுச்சி மாநாடு என்று ஒன்று சேர்ந்து 'கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை'யாக மாற்றினர். கோவைக்கு அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பிப்ரவரி 15 2009 அன்று 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி இதன் தலைவராக பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளராக ஈஸ்வரன் தலைமையிலும் இந்த இன மக்கள் ஒன்று சேரத் துவங்கினர். 

பெஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஆய்த்த ஆடைகளுக்கான மிகப் பெரிய ஏற்றுமதி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டு வரும் ராமசாமி தன்னுடைய பெயருடன் தன் நிறுவன பெயரையும் செர்ந்து பெஸ்ட் ராமசாமி என்று மர்றியுள்ளார். எந்த விசயத்தில் இவர் பெஸ்ட் என்பதை அவருக்கு எதிரெணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவரைப் போலவே பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஈஸ்வரன் என்பவரும் ஏற்றுமதி தொழிலில் தான் உள்ளார்.  

பெஸ்ட் ராமசாமியை அவரின் குணாதிசியங்களை விமர்சிக்கும் மாற்று அணியினரைப் போல ஈஸ்வரனை அவரின் பிறப்பு குறித்து வரைக்கும் அக்குவேறு ஆணி வேறாக பொளந்து கட்டுகின்றனர்.  காரணம் கவுண்டர் முஸ்லீம் கலப்பு மனத்தில் பிறந்த இவர் எப்படி கவுண்டர் இன மக்களுக்கு காவலராக வர முடியும்? என்பது வரைக்கும் ஏராளமான சர்ச்சையை கிளப்புகின்றனர்.  

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நீடிக்க முடியுமா?

கோவைக்கு அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நடந்த மாநாட்டுக்கு அணைவரும் திரண்டு வாரீர் என்று அழைப்பு விடுக்க ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கவுண்டர் இன மக்கள் தங்களது வாகன சகிதமாக போய் கலந்து கொண்டனர்.  திமுக, அதிமுக கட்சிகள் மிரண்டு பார்த்த மாநாடு அது.  ஆனால் இன்று கலந்து கொண்ட அத்தனை மக்களும் இப்போது முகத்தை திருப்பிக் கொண்டு எப்போது தேர்தல் வரும்? இவர்களை கவிழ்க்க என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

திருப்பூரைப் பொறுத்தவரையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஆளுங்கட்சி மேல் கொலை வெறியோடு சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்றுமதியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரத் தடையினால் ஆளுங்கட்சியை நேரிடையாக பகைத்துக் கொள்ளாமல் மனதிற்குள் வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் திமுகவுடன் கொமுக கூட்டணி வைத்துள்ளதை பார்த்த பலரும் கொமுக மேல் வெறுப்புடன் விலகி நின்று வேடிக்கை காட்ட தயாராக உள்ளனர். 

இங்குள்ள பெரும்பான்மை கவுண்டர் இன மக்களே இந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தால் பத்து காசுக்கு பிரயோஜனமில்லை என்று பொறுமிக் கொண்டிருப்பதைப் போலவே எதிரேயிருக்கும் மாவட்ட விவசாயிகள் அமைப்பு அடுத்த சவாலான நிலையில் திமுகவை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு மேலாக இந்த கொங்கு மண்டலம் முழுக்க பரவியிருக்கும் தலித்துகள் இந்த கொமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறார்கள்.  இந்த பகுதிகளில் இருக்கும் தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கு காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் பனிப்போர்கள் விபரம் புரிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விசயமாகும்.  இந்த கொங்கு மண்டலம் இரட்டை இலையின் கோட்டையாக இருப்பதற்கு முக்கியமான காரணமே இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுச் சீட்டே காரணமாக இருக்கிறது. இதிலும் கூட இப்போது உருவாகியுள்ள கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இந்த தலித் ஓட்டுகளை வாரிக் கொண்டு விட்டதால் இன்னும் இடியாப்பச் சிக்கல் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஜாதி ரீதியான அமைப்பாக இருந்து போது, பின்னால் பேரவையாக மாறிய போதும் இருந்த புரிந்துணர்வு, படிப்படியாக அரசியல் கட்சியாக மாற வெளியே தெரியாத ஏராளமான பூசல்கள் உருவாகத் தொடங்கியது.  பணத்திற்கும் பஞ்சமில்லை.  ஏதோவொரு வகையில் மொத்தத்தில் கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலையில் இந்த இனக் காவலர்கள் இருப்பதால் ஒவ்வொருவரின் முகமூடிகளும் கிழ்த்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த பிரச்சனைக்கும் கொமுக முன்னிலை வகித்தது இல்லை. 

சாயப்பட்டறை பிரச்சனையாக இருக்கட்டும் ஒவ்வொரு தொழில் நிறுவனத்தையும் வீதிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் மின்சாரத் தடையாக இருந்தாலும் தனக்கு என்ன லாபம் என்கிற ரீதியில் தான் ஒவ்வொருவரும் தனித்தனி அணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு விபரம் கூட (மாசுக்கட்டுபாடு வாரியம் தான் ஏற்று நடத்த வேண்டும்) வெகுஜன ஊடகத்தில் வெளிவர முடியாத அளவிற்கு அரசாங்கம் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.  

சென்ற முறை அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு விஜயகாந்தின் தேமுதிக பிரித்த ஓட்டுக்களே முக்கிய காரணமாக இருந்தது. அதே போல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுககு உண்டான் சரிவுக்கும் இந்த கொங்கு முன்னேற்றப் பேரவை சிதறடித்து பெற்ற பெரும்பான்மையான வாக்கும் முக்கிய காரணியாக இருந்தது. காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனியாக நின்று மொத்தம் ஆறு லட்சம் வாக்குகளை பெற்றனர். சூலூர், பல்லடம் தொகுகளில் பெற்ற பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தினர்.

ஆனால் கட்சி ரீதியாகவே ஓட்டுப் போடும் பழக்கத்தில் உளளவர்களை மாற்றுவது கடினம் என்று உணர்ந்து கொண்டு இந்த முறை கொமுக தங்களது கதவை அகல திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தனர். எப்போதும் போல ஆத்தாவின் தரிசனம் கிடைக்கவில்லை. சந்திக்கும் போது எப்படி குனிய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று வகுப்பு மட்டும் நடக்க நொந்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திமுக அதிசியமாக வரவேற்ப்பு கொடுத்துள்ளது. இதற்குப் பின்னால் உள்ள பேரங்கள் வேறு தனியாக இந்த பகுதியில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் கலைஞரின் முதல் கோணல் முற்றிலும் கோணலுக்கு இதுவும் காரணமாக இருக்கப் போகின்றது.

காரணம் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் இந்த அளவிற்கு வளர்ந்து வந்தமைக்கு முக்கிய காரணம் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பே முக்கியமாகும்.  ஆனால் அரசியல் ரீதியாக கொமுக செல்வாக்கு பெற படிப்படியாக இந்த அமைப்பை ஒதுக்கி வைக்க இப்போது இவர்கள் 'மாநில கொங்கு பேரவை' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி மணிக் கவுண்டர் தலைமையில் இந்த முறை தேர்தலில் களத்தில் இறங்குகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பில் உ.தனியரசு என்பவர் அதிமுகவில் பெற்ற ஒரு சீட்டு மூலம் இந்த இன மக்களுக்கு பாடுபடப் போகின்றேன் என்று களம் புகுந்துள்ளார். 

இதற்கு மேலாக 49 ஓ என்ற ஆயுதமும், ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பு 1000 பேர்களையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகின்றனர். இவர்களுக்கு கட்ட வேண்டிய டெபாஸிட் தொகையை குறிப்பிட்ட அமைப்பினர் திரட்டி 'யார் வேண்டுமானாலும் வரலாம். ஆள் மட்டும் போதும்' என்கிற ரீதியில் ஆளுக்கட்சியான திமுகவின் ஓட்டுகளை சிதறடிக்க சூறாவளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டு பணக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன பேசுவார்கள்? 

சேர்க்க வேண்டிய சொத்துக்களை, சேர்த்த சொத்துக்களை காப்பாற்றுவது பற்றி பேசக்கூடும்.  இயல்பாகவே ஈகோ அதிகமுள்ள இந்த இன மக்களின் நல்வாழ்க்கையை காக்க நான் வந்துள்ளேன் என்று சொன்னால்?  அதுவும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகும் கொமுக வினருக்கு இது போதாத காலம் போலிருக்கு.

ஒரு கட்சிக்கு இரண்டு எதிரிகள் இருந்தாலே சமாளிப்பது சிரமம்.  ஆனால் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான எதிரிகள். அதுவும் இந்த பகுதி மக்களின் முக்கிய எதிரியான திமுகவுடன் கூட்டணி வேறு வைக்க கொமுக வின் தலையில் பகவான் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கவுண்டர்கள் சிரிக்கும் சிரிப்பில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்பது சங்கு ஊதி முடிக்க வேண்டிய கழகமாக மாறியுள்ளது.